For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்பியது மனிதநேயமற்ற செயல் - திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது மன்னிக்க முடியாது, ஏற்றுக் கொள்ளமுடியாத, மனிதநேயமற்ற செயல் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவில் இருந்து சென்னை வந்துள்ளார். 6 மாத கால விசா அனுமதியுடன் வருகை தந்த அவரை விமானத்திலிருந்தே இறங்க விடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். அதே விமானத்தில் அவரை மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

சென்னையில் தங்கி மருத்துவம் செய்து கொள்வதற்காக பார்வதி அம்மாளும், அவருக்கு உதவியாளராக ஒரு பெண்மணியும் வருகை தந்த நிலையில் மனிதநேயமற்ற முறையில் அவர்களை திருப்பி அனுப்பியிருப்பது சகித்துக் கொள்ள முடியாத, வேதனைக்குரிய செயலாகும்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூர், மலேசியாவை சேர்ந்த நண்பர்கள் எம்மை தொடர்பு கொண்டு, பார்வதியம்மாள் சிகிச்சைக்காக சென்னை வரவிருப்பதாகவும், அவரை வரவேற்று மருத்துவம் பெறு வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர். பார்வதி அம்மாளுக்கு உதவியாக இருந்த உறவினர்களும் பேசினர்.

மலேசியாவிலுள்ள இந்திய தூதரகமும் பார்வதி அம்மாளுக்கு விசா வழங்கியிருந்த நிலையில் அவர் இங்கே வருவதற்கு எந்த சிக்கலும் இருக்காது என்றே நம்பியிருந்தோம். ஆனால் சற்றும் எதிர்பாரா வகையில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் இரக்கமற்ற முறையில் நடந்து கொண்டது ஏனென்று விளங்கவில்லை.

வயது முதிர்ந்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அந்த தாயின் மீது கருணை காட்டாமல், அவரை திருப்பி அனுப்புவதற்கு எப்படி மனம் வந்தது? அவரை சென்னையில் இறங்கவிடாமல் தடுக்க வேண்டும் என்கிற இந்த முடிவுக்கு இந்திய அரசு காரணமா? அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கா? அல்லது தமிழக அரசின் நடவடிக்கையா? இவைதான் இன்றைக்கு ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் எழுந்துள்ள உணர்ச்சி மயமான கேள்விகளாகும்.

சிகிச்சை பெறுவதற்காக உரிய முறைப்படி வருகைதந்த அன்னை பார்வதி அம்மாளை சென்னையில் தங்கவைப்பது தொடர்பான பிரச்சினையை சட்டப்படி அணுகியிருக்க வேண்டும். அல்லது மனிதநேய அடிப்படையில் அணுகியிருக்க வேண்டும். மாறாக அரசியலடிப்படையிலேயே இப்பிரச்சினையை அணுகியிருப்பதாக தெரிய வருகிறது.

அன்னை பார்வதி அம்மாள் தமிழகத்தில் தங்குவதால் இந்திய இறையாண்மைக்கோ அல்லது பொதுஅமைதிக்கோ பங்கம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

கடந்த சில மாதங்களாக மலேசியாவில் அவர் தங்கியிருந்த நிலையில் அங்கே எதுவும் சட்ட-ஒழுங்கு பிரச்சினையோ அல்லது வேறு பாதிப்புகளோ நிகழந்து விடவில்லை. அதைப்போல இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் எந்த அரசியல் சிக்கலும் ஏற்படப் போவதில்லை. ஆனால் வேறு எந்த காரணத்திற்காக அவர் திருப்பி அனுப்பப்பட்டார்?

ஏற்கனவே பாலசிங்கம் தமிழகம் வர விரும்பிய போதும் இந்திய அரசு அவரை வரவிடாமல் தடுத்தது. அவருக்கு விசா அனுமதி வழங்கவே அப்போது இந்திய அரசு மறுத்தது. ஆனால் பார்வதி அம்மாளுக்கு 6 மாதம் தங்குவதற்கு விசா அனுமதி வழங்கிவிட்டு பிறகு இப்படி ஒரு முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்தது ஏன்?

இந்த நடவடிக்கைக்கு எது காரணமாயிருந்தாலும், யார் காரணமாயிருந்தாலும் இதனை நியாயப்படுத்தவோ, ஏற்றுக் கொள்ளவோ இயலாது. மனிதநேயமற்ற இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறான போக்குகள் தொடருமேயானால் தமிழ்ச் சமூகத்தினரிடையே கனன்று கொண்டிருக்கிற ஆவேச நெருப்பு எரி மலையாய் வெடிக்கும் போக்கை தடுக்க இயலாது.

பார்வதி அம்மாளை தமிழகத்திற்கு அழைத்து வரவும், அவர் மருத்துவம் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் விடு தலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X