அழகிரியை ரவுடி என்று சொல்லக் கூடாது-அதிமுகவினருக்கு ஓ.பி. கண்டிப்பு
சாத்தூர்: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை ரவுடி என்று கூறிய அதிமுகவினரை கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டித்தார். அப்படிக் கூறக் கூடாது என்று அறிவுரை கூறினார்.
சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் மாவட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய கோயிலாக விளங்குகிறது. இந்தக் கோயிலுக்குச்செல்லும் சாத்தூர் - இருக்கன்குடி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கவனிப்பாரற்று இருக்கும் மேற்படி சாலையை செப்பனிட வலியுறுத்தி கோரிக்கை விடப்பட்டும், தி.மு.க. அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதே போன்று, சாத்தூர் அரசு பொது மருத்துவமனை இட வசதி, மின் வசதி, படுக்கை வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நிர்மூலமாக காட்சி அளிக்கிறது.
மேற்படி மருத்துவமனை புதிதாக கட்டப்படும் என்று தி.மு.க. மாவட்ட அமைச்சர் உறுதியளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
படந்தால் சந்திப்பில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவும், சாத்தூர் - இருக்கன்குடி சாலையை செப்பனிடவும், சாத்தூர் அரசு பொதுமருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தரவும், பேருந்துக் கட்டணத்தை குறைத்திடவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று பேசினார்.
அப்போது மு.க.அழகிரி குறித்து அவர் பேசியபோது ரவுடி என்று குரல் வந்தது. இதைக் கேட்ட ஓ.பன்னீர்செல்வம், அப்படிச் சொல்லக் கூடாது. அவர் ரவுடி என்றால் இந்த கூட்டத்திற்கு வந்தாரா? ரவுடித்தனம் செய்தாரா? பின்பு எப்படி அவரை ரவுடி என்று சொல்லலாம். அவர் ரவுடி கிடையாது என்று அதிமுகவினருக்கு அறிவுரை கூறினார்.