For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை கடற்படைத் தாக்குதலிலிருந்து தமிழக மீ்னவர்களை காக்க முடியாது-எஸ்.எம்.கிருஷ்ணா

Google Oneindia Tamil News

SM Krishna
டெல்லி: சர்வதேச எல்லையாத் தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் போகக் கூடாது. அப்படி போனால் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தத்தான் செய்யும். எனவே தமிழக மீனவர்களை இந்த தாக்குதல்களிலிருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியாது. மேலும் கச்சத்தீவை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

ராஜ்யசபாவில் நேற்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், பாஜக உறுப்பினர் வெங்கைய்ய நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, திமுக உறுப்பினர்கள் டி.சிவா, கனிமொழி, மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக குற்றம் சாட்டிப் பேசினர்.

இந்த விவாதத்தால் ராஜ்யசபா படு சூடாக காணப்பட்டது. இடை இடையே திமுக, அதிமுகவினரும் கடுமையாக வாதிட்டுக்கொண்டனர்.

அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் பேசுகையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

இதையடுத்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பி்ன்னர் மீண்டும் அவை கூடியபோது மறுபடியும் இதே பிரச்சினை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனால் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் பேசுகையில்,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்கதையாகவுள்ளது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய அரசு இனிமேலும் சகித்துக் கொள்ளாது என்பதை இலங்கை அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய அரசின் அலட்சியம்-வெங்கையா பாய்ச்சல்

பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தை இந்திய அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது. தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கடுமையாக குற்றம்சுமத்தினார்.

திமுக உறுப்பினர் சிவா பேசுகையில், தமிழர்கள் என்றாலே இலங்கை அரசுக்கு ஒவ்வாமையாகவுள்ளது. இதனால் தான் தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும் என்றார்

கனிமொழி பேசுகையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்களை தாங்கள் தாக்கவில்லை என்று கூறி வருகிறது. அப்படியென்றால் தமிழக மீனவர்களை தாக்குவது யார்? என்றார்.

சிபிஐ உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், இலங்கை போர் முடிவுற்ற பின்னரும், இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். இதை தடுக்க ஒரே வழி இந்தியா இலங்கை இடையே கையெழுத்திடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை அமல்படுத்த தீவிரம் காட்ட வேண்டும்.

மீனவர்கள் தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர். சமூக ரீதியாகவும் பின்தங்கி உள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அவர்களை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். போருக்குப்பின்னர் எத்தனை சம்பவங்கள் நடைபெற்றது என கூற விரும்பவில்லை. தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். துன்புறுத்தல் செய்யப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர். இலங்கை கடற்படையினரால் சுடப்படுகின்றனர் என்றார்.

விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய கிருஷ்ணா கூறுகையில்,

இலங்கை கடல் பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது. சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இதில் மாற்றுக்கருத்து இல்லை.

அதேசமயம் சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மீறி அண்டை நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்கள் மீன்பிடிக்க முயன்றால் அது கண்டிக்கத்தக்கது.

2008-ல் இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு பிறகு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கொல்லப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளது. எனினும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு மீண்டும் எடுத்துச் செல்லப்படும். இதுகுறித்து எனது அடுத்த இலங்கை பயணத்தின் போது அந்நாட்டு தலைவர்களிடம் விவாதிப்பேன்.

கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் வகையில், நடைபெறும் நிகழ்ச்சிகளை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காது. கச்சத்தீவு பிரச்சனையில் இந்தியாவை எந்த நாடும் அடிபணிய வைக்க முடியாது.

இலங்கை அதிபர் டெல்லி வந்தபோது மீனவர்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி உள்ளோம். இலங்கை அதிபருடன், இந்திய பிரதமர் இதுகுறித்து விவாதித்துள்ளார். மீனவர்கள் தாக்கப்படுவது கவலை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது இந்த பிரச்சனையை மத்திய அரசு எழுப்பியது. இலங்கை அரசின் உயர் அரசியல் தலைவரான அந்நாட்டு அதிபரும், இந்திய அரசின் உயர் அரசியல் தலைவரான பிரதமரும் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். இலங்கை அரசிடம் இந்திய அரசு மீண்டும் இப்பிரச்சனை எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்.

இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக அங்கு 50 ஆயிரம் நிரந்தர வீடுகள் கட்டுவது, அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் தமிழர்களின் மறுகுடியேற்றம் ஆகியவற்றிலும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க முடியாது, தமிழக மீனவர்கள்தான் தவறு செய்கிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு தர முடியாது என ராஜ்யசபாவில் வைத்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா திட்டவட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் எஸ்.எம்.கிருஷ்ணா இப்படிக் கூறியதை திமுக, அதிமுக உள்பட எந்தக் கட்சியின் உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து சின்ன சலசலப்பைக் கூட ஏற்படுத்தவில்லை. மாறாக, விவாதத்தில் கலந்து கொண்டு அவரவர் கருத்தை மட்டும் தெரிவித்து விட்டு அமர்ந்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X