For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்ளாக்பெர்ரி... அனைத்து தகவல்களையும் இடைமறிக்க மத்திய அரசு உத்தரவு!

By Chakra
Google Oneindia Tamil News

BlackBerry
டெல்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக, வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் ப்ளாக்பெர்ரி மொபைல் போன்களின் அனைத்துவித தகவல்களையும் இடைமறித்து சோதிக்க மத்திய அரசு அனைத்து மொபைல் ஆபரேட்டர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

'வரும் 31-ம் தேதி முதல் ப்ளாக்பெர்ரி சேவைகளை முற்றாக இடைமறித்து சோதிக்க வேண்டும். இதற்கான உள்நுழை அனுமதியை ப்ளாக்பெர்ரி தயாரிப்பாளர் ரிம் தராவிட்டால் ப்ளாக்பெர்ரி சேவையை முழுவதுமாக தடை செய்ய வேண்டும். இந்த உத்தரவை ஏற்க மறுக்கும் மொபைல் ஆபரேட்டர்களின் உரிமங்களும் ரத்து செய்யப்படும்' என்று மத்திய அரசின் உத்தரவில் உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ப்ளாக்பெர்ரி தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் மொபைல் ஆபரேட்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

வழக்கம் போல இந்திய அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்துவிடும் என்றே பெரும்பாலான நிறுவனங்கள் கருதி வந்தன.

ஆனால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருக்க முடியாது என்று கூறிவிட்ட அரசு, ப்ளாக்பெர்ரி விஷயத்தில் மிக உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

ஒருவேளை தகவல்களை இடைமறிப்பதற்கான முழு உள்நுழை அனுமதியை (Full Access) ப்ளாக்பெர்ரி தர மறுக்கும் பட்சத்தில் (இப்போது சில தகவல் சேவைகளை மட்டும் இடைமறிக்க அனுமதி அளித்துள்ளது ரிம். ஆனால் இதுகுறித்து இந்திய அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.), செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4.5 லட்சம் ப்ளாக்பெர்ரி பயன்பாட்டாளர்களுக்கு முற்றாக சேவைகள் நிறுத்தப்பட்டுவிடும்.

உள்நுழை அனுமதியை ப்ளாக்பெர்ரி வழங்கும் பட்சத்தில், அந்த நிறுவனம் வழங்கும் யாஹூ, ஜிமெயில், எம்எஸ்என் சேவைகள் எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் என்கிரிப்ட்டில் செயல்படும் PIN மெஸஞ்சர் சர்வீஸ் முற்றாக நிறுத்தப்படும்.

இப்போதைய நிலவரப்படி, மற்ற சேவைகளை இடைமறிக்க ப்ளாக்பெர்ரிய ஒப்புக் கொண்டாலும், பிஇஎஸ் (Blackberry Enterprise Service) எனப்படும், நிறுவனங்களுக்கான அதிகபட்ச மின்னஞ்சல் வசதியை மத்திய அரசு இடைமறிப்பதை மட்டும் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதி இல்லாமல் இதற்கான உள்நுழைவு வசதியை அளிக்க முடியாது என்று கூறி வருகிறது. இதுகுறித்து விவாதிக்க மத்திய தொலைத் தொடர்பு துறையுடன் பேச முயற்சிக்கிறது. ஆனால் மத்திய அரசோ, இந்த விஷயத்தில் சற்றும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் எனும்போது அதில் எந்த சமரசத்துக்கும் கிஞ்சித்தும் இடமில்லை என்று ரிம் நிறுவனத்துக்கு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மெஸஞ்சர் மற்றும் என்டர்பிரைஸ் சர்வீஸ் ஆகிய இரண்டுக்குமே உள்நுழை அனுமதி ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தந்தாக வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொலைத் தொடர்புத் துறையின் Unified Access Service Licence (UASL) நிபந்தனைகளின்படி, எந்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமும், அரசின் கட்டளைக்கு மாறாக செயல்பட முடியாது. அந்தந்த நேரம் மற்றும் சூழலுக்கு ஏற்ப அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை அனைத்து மொபைல் ஆபரேட்டர்களும் மறுபேச்சின்றி கடைப் பிடித்தாக வேண்டும். இல்லையேல் அவர்களின் உரிமங்கள் எந்த முன் எச்சரிக்கையும் இன்றி ரத்து செய்யப்படும்.

ப்ளாக்பெர்ரி விஷயத்தில் இந்த நிபந்தனையைக் குறிப்பிட்டு அனைத்து மொபைல் ஆபரேட்டர்களுக்கும் மத்திய தொலைத் தொடர்புத் துறை எச்சரிக்கைக் கடிதம் ஒன்றையும் நேற்று அனுப்பியுள்ளது.

அதில், "ஆகஸ்ட் 31-ம் தேதியன்று முழு உள்நுழைவுக்கான அனுமதி கிடைக்காவிட்டால், ப்ளாக்பெர்ரி சேவைகள் நிறுத்தப்பட வேண்டும். இதை செயல்படுத்தத் தவறும் மொபைல் ஆபரேட்டர்களின் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும். இது தொடர்பில் அந்தந்த மொபைல் ஆபரேட்டர்களே ரிம் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு முடிவு எடுக்கலாம்," என குறிப்பிட்டுள்ளது.

நிலைமை தீவிரமாவதை உணர்ந்த ப்ளாக்பெர்ரி தயாரிப்பாளரான ரிம் நிறுவனம், மெஸஞ்சர் சேவைக்கு உள்நுழைவு அனுமதி தருகிறோம். ஆனால் என்டர்பிரைஸ் சர்வீசுக்கு தரமாட்டோம் என்றது. உடனே மத்திய உள்துறை அமைச்சகம், "சவூதி அரேபியா தடை விதிப்பதாக அறிவித்ததும், உடனடியாக என்டர்பிரைஸ் சேவையையும் இடைமறிக்க அனுமதி தந்த ரிம், இந்தியாவில் மட்டும் வேறு நிலைப்பாட்டை எடுப்பதை ஏற்க முடியாது" என்று கூறிவிட்டது.

இன்னொரு பக்கம், ப்ளாக்பெர்ரி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, இடைமறிக்கும் அனுமதி முற்றாக அளிக்கப்பட்டால், அதற்கான கூடுதல் மென்பொருளை அனைத்து மொபைல் ஆபரேட்டர்களும் பொருத்த வேண்டியிருக்கும். அதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்கிறார்கள். காரணம் ஒவ்வொரு மொபைல் ஆபரேட்டரும் வெவ்வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் 22 தொலைத் தொடர்பு வட்டாரங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டாரத்துக்கும் குறைந்தது 10 மொபைல் ஆபரேட்டர்கள் உள்ளனர்.

இவர்களைக் கண்காணிக்க, ஐபி, உள்ளூர் போலீஸ், உள்ளூர் சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்ககம், போதைக் கட்டுப்பாட்டு பிரிவு, வருவாய் உளவுப் பிரிவு இயக்ககம் மற்றும் தொலைத்தொடர்பு கண்காணிப்பு பிரிவு என எட்டு அரசு அமைப்புகள் உள்ளன. இவை கண்காணிப்புப் பணியை ஆரம்பிக்க கணிசமாக அவகாசம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. எனவே தொலைத் தொடர்புத் துறை இத்தனை வேகம் காட்டினாலும், அதற்கேற்ப மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X