• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'தேர்தல் வருகிறதே என்று கொடநாட்டில் இருந்து ஓடோடி வந்து...!': அமைச்சர்

By Chakra
|

Jayalalitha
சென்னை: சிறுதாவூரில் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான 53 ஏக்கர் பஞ்சமி நிலங்களை தனது தோழி சசிகலாவின் உறவினர்களான இளவரசி, பாஸ்கர் மூலமாக பரணி ரிசார்ட்ஸ் என்ற பெயரில் பினாமியாக அபகரித்து விட்டார் என்று மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளதை மறந்துவிட்டு விவசாயிகளின் விளை நிலங்கள் பறிபோகுதே என்று ஜெயலலிதா கூப்பாடு போடுவது வேடிக்கையாக உள்ளது என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 4 ஆண்டு காலமாக தமிழக மக்களைப் பற்றி துளியும் சிந்திக்காமல் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுத்து விட்டு இப்போது தேர்தல் வருகிறதே என்பதற்காக ஓடோடி வந்து தினசரி ஏதாவது பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வர் கருணாநிதி அரசின் மீது கூறி அறிக்கை விடுகிறார். ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய கிரீன் பீல்டு விமான நிலையம் அமைப்பதற்காக முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 22.5.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற போது சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையை ஒட்டி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் வட்டங்களில் உள்ள 4820.66 ஏக்கர் நிலத்தில் இந்த விமான நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் இந்திய விமான நிலைய குழும தொழில் நுட்பக்குழுவினர் இப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தபோது இவ்விமான நிலையம் அமைக்க 6791.75 ஏக்கர் தேவை என்று தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 9 கிராமங்களிலும், திருவள்ளூர் வட்டத்தில் 3 கிராமங்களிலும் இதற்கான நிலம் கண்டறியப்பட்டு வரைபடங்கள் விமான நிலைய இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை இவ்விமான நிலையம் அமைப்பதற்கான நில எடுப்பு தொடர்பான கேட்புத் துறையினரிடமிருந்து எவ்விதமான கேட்பு படிவமும் பெறப்படவில்லை.

இந்நிலையில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளையும், பொது மக்களையும் தூண்டிவிட்டு போராட்டம் நடத்த சொல்கிறார் ஜெயலலிதா.

அவரது அறிவிப்பை விவசாயிகளும் பொது மக்களுக்கும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சிறுதாவூரில் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான 53 ஏக்கர் பஞ்சமி நிலங்களை இவரது ஆட்சிக் காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் மூலம் தமது தோழி சசிகலாவின் உறவினர்களான இளவரசி, பாஸ்கர் மூலமாக பரணி ரிசார்ட்ஸ் என்ற பெயரில் பினாமியாக அபகரித்து விட்டார் என்று 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளதை இவர் இப்போது மறந்துவிட்டு விவசாயிகளின் விளை நிலங்கள் பறிபோகுதே என்று கூப்பாடு போடுவது வேடிக்கையாக உள்ளது.

என்றைக்கும் விவசாயிகளுக்காக உண்மையாக பாடுபடுபவர் முதல்வர் கருணாநிதி தான். விவசாயிகளுக்காக இலவச மின்சாரம் வழங்கியவர் கலைஞர். ரூ.7000 கோடி விவசாயக் கடன் ரத்து, அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்பால் 10 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன், சுதந்திர தினத்தன்று விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் வழங்கப்படும் என்று மகிழ்ச்சிகரமான அறிவிப்பு தந்து விவசாயிகளுக்கு மாபெரும் உதவியை செய்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டம் இன்றைக்கு மாபெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. பின் தங்கிய ஸ்ரீப்பெரும்புதூர் வட்டத்தில் பயிர் ஏதும் செய்யப்படாமல் வீணாக கிடந்த நிலத்தில் விண்முட்டும் தொழிற்சாலைகளை தொடங்கி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி காஞ்சீபுரம் மாவட்டத்தை தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக உருவாக்கிய பெருமை முதல்வர் கலைஞரையே சாரும்.

செய்யூரில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 4 ஆயிரம் மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம், ரூ.908 கோடி செலவில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் புதிய புதிய தொழிற்சாலைகள், ஆயிரக் கணக்கான பட்டுகைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் காஞ்சீபுரத்தில் பட்டுப் பூங்கா.

இப்படி எண்ணற்ற பல திட்டங்களினால் காஞ்சீபுரம் மாவட்டம் மிகப் பெரிய தொழில் வளர்ச்சி பெற்றதை பொறுக்க முடியாத ஜெயலலிதா இச்சாதனைகளை எல்லாம் திசை திருப்பவே இன்று ஸ்ரீபெரும்புதூரில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா நடத்துகின்ற போராட்டத்தை எந்த சராசரி மனிதர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக ஆட்சியின் சரித்திர சாதனைகளை சீர் குலைக்கவே இப்படியெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி ஜெயலலிதா போடும் இந்த வேடத்தை விவசாய பெருங்குடி மக்கள் நம்பமாட்டார்கள்.

ஜெயலலிதா எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும் அது மக்களிடம் எடுபடாது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜெயலலிதாவை இனி எந்தக் காலத்திலும் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X