For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு விபத்து நஷ்டஈட்டு மசோதா: ஒபாமாவுக்கு பிரதமர் மன்மோகனின் பரிசு!

By Chakra
Google Oneindia Tamil News

Manmohan and Obama
டெல்லி: அணு விபத்து நஷ்டஈட்டு மசோதா தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை இடதுசாரிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த மசோதாவை ஆதரிக்க பாஜக முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த கூட்டத் தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

அணு உலைகளில் விபத்து அல்லது கதிர்வீச்சு கசிவு ஏற்படும்போது நஷ்டஈடு வழங்குவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமான பின்னரே பிற நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அணு மின் உற்பத்தி திட்டங்களைத் தொடங்க அனுமதி கிடைக்கும்.

அமெரிக்க- இந்திய அணுசக்தி உடன்பாட்டைத் தொடர்ந்து இந்தியாவில் அணு உலைகளை அமைக்க பல்வேறு நாடுகள் தயாராக உள்ளன.

இதையடுத்து இந்தியாவில் அணு உலைகளில் விபத்து நேரிட்டால் நஷ்டஈடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் கடந்த பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், விபத்து நேரிடும் போது ரூ. 500 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது. இது மிகக் குறைவான தொகை என்பதால் இதை அதிகரிக்க வேண்டும் என்று பாஜக, இடதுசாரி கட்சிகள் ஆகியவை கூறின.

இதையடுத்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்து மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய எல்லா சந்தேகங்களும் விவாதிக்கப்பட்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தக் குழு 24 முறை கூடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி அணு விபத்து நஷ்டஈட்டுத் தொகை ரூ. 500 கோடியிலிருந்து ரூ. 1,500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதை பாஜக ஏற்றுக் கொண்டு இந்த மசோதாவை நிறைவேற்ற வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளது. இதனால் இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

ஆனால் இந்த மசோதாவுக்கு இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

அணு உலைகளில் உற்பத்தியாகும் கதிர்வீச்சு தனிமங்களை இந்தியா அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்க வசதியாக இந்த மசோதாவை மத்திய அரசு அவசர அவசரமாக நிறைவேற்ற முயல்வதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும், நவம்பர் மாதம் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் நல்ல பெயர் வாங்கவும், அவருக்கு இந்த மசோதாவை பரிசாக அளிக்க மத்திய அரசு முயல்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
மேலும் இந்த மசோதா விஷயத்தில் பாஜகவுடன் நாங்கள் கைகோர்க்க மாட்டோம் என்ற யெச்சூரி, தொடர்ந்து கூறுகையி்ல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அணு உலை உபகரணங்களுக்கு இந்த மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற உபகரணங்களாலும் விபத்து நேரிடும் சந்தர்ப்பம் உண்டு. எனவே உபகரணங்களை வழங்குபவர்களையும் இந்த சட்டத்தில் சேர்க்க வேண்டும். மேலும் ராணுவ உபயோகத்துக்கான அணு உலைகளையும் இந்த நஷ்டஈடு சட்டத்தி்ன் கீழ் கொண்டு வர வேண்டும்.

அணு உலைகளால் ஏற்படும் நஷ்டம் என்பது மிக பயங்கரமானது. எனவே இந்த நஷ்டஈட்டுத் தொகையை ரூ. 10,000 கோடியாக உயர்த்த வேண்டும் என்றார்.

ஆனால் பாஜக ஆதரவு உள்ளதால் இந்த மசோதாவை இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே நிறைவேற்றிவிட முடியும்.

இதனால் காங்கிரஸ் தெம்புடன் உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X