ஊர் ஊராகப் போய் எங்கள் குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி சாடல்
சேலம்: திமுக அரசு சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதை இழிவுப்படுத்தும் வகையில் ஒரு அம்மா ஊருக்கு ஊர் பேசி வருகிறார். மைனாரிட்டி அரசு என்கிறார். அவர் ஏதாவது சாதனை செய்தால் அதை சொல்ல வேண்டும். அதை விட்டு எங்கள் குடும்பத்தை ஏன் இழிவாக பேசுகிறார்? என்று காட்டமாக கேட்டுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
சேலத்தில் நடந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் பிரபு திருமண நிகழ்ச்சியில், கலந்து கொண்டு அழகிரி பேசுகையில்,
தலைவர் கலைஞரின் சாதனைகள் என்னென்ன? எப்படி என்பதை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இங்கே சுட்டிக்காட்டினார். ஆனால், அதை இழிவுப்படுத்தும் வகையில் ஒரு அம்மா ஊருக்கு ஊர் பேசி வருகிறார். மைனாரிட்டி அரசு என்கிறார். அவர் ஏதாவது சாதனை செய்தால் அதை சொல்ல வேண்டும். அதை விட்டு எங்கள் குடும்பத்தை ஏன் இழிவாக பேசுகிறார்?
தலைவர் கலைஞர் இந்த வயதிலும் தினமும் காலை 4 மணிக்கு எழுந்திருக்கிறார். 5 மணிக்கு செய்தித் தாள்கள் படிக்கிறார். முரசொலிக்கு கடிதம் எழுதுகிறார். பின்னர் கோப்புகளை பார்வையிடுகிறார். திட்டங்கள் தீட்டுகிறார். அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கிறார். மாலையில் அண்ணா அறிவாலயம் செல்கிறார். ஆனால் இவர் மக்களையும் கட்சிகாரர்களையும் சந்திப்பது இல்லை.
ஆண்டிப்பட்டியில் ஒரு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அந்த அம்மா தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் ஒருமுறை கூட அந்த தொகுதிக்கு வரவில்லை. அந்த முகாமிற்கு நான் மண்டல அமைப்பு செயலாளர் என்ற முறையில் சென்றேன். அந்த விழாவில் ஏழை நோயாளிகளுக்கு 200 கிராம் ஹார்லிக்ஸ் வழங்கப்பட்டது.
அதை ஜெயலலிதா, சோழவந்தானில் லாரியில் திருடியதாக கூறுகிறார். 9 ஆயிரம் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வாங்கியதற்கான பில் வைத்துள்ளேன். அவர் எங்கு வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன் என்றார் அழகிரி.