For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்சாரமே இல்லை; வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?- ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழகத்தில் கடும் மின் வெட்டும், தண்ணீ்ர் பற்றாக்குறையும் இருக்கும்போது இலவச பம்புசெட்களைத் தருவதால் விவசாயிகளுக்கு எந்த பலனும் ஏற்படாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வரும் பல விவசாய பம்பு செட்டுகள், திறன் குறைந்தவையாக இருப்பதால் மின்சாரம் அதிகம் செலவாகிறது. இதுவும் மின் பற்றாக்குறைக்கு ஓரளவு காரணமாகும். இத்தகைய பம்பு செட்டுகளுக்கு பதில், திறன்மிக்க புதிய பம்பு செட்டுகளைப் பொருத்துவதன் மூலம், 20 சதவீத அளவுக்கு மின்சாரத்தை சேமித்திட முடியும்.

சிறு, குறு விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு, அவற்றிற்குப் பதிலாக, புதிய மின் மோட்டார்கள் அரசின் சார்பாக இலவசமாகப் பொருத்தித் தரப்படும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன், புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும். என்று கருணாநிதி அறிவித்தார்.

ஆனால், இதற்கு மாறாக, தொடர்ந்து புதுப்புது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றும், அதுவும் ஐந்து ஆண்டு கால அளவில் தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அதற்குப்பிறகு செய்திகள் வந்துள்ளன. 5 ஆண்டு காலத்தில் இந்த இலவச திட்டம் செயல் படுத்தப்படும் என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

அது மட்டுமின்றி, ஓர் ஆண்டிற்கு 10,000 விவசாயிகளுக்கு மட்டும் தான் இலவச மின் மோட்டார்கள் கொடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுவதாக பின்னர் மற்றொரு செய்தி வந்துள்ளது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 19 லட்சம் விவசாயிகள் இருக்கிறார்கள். இதில் சிறு, குறு விவசாயிகள் 15 லட்சம். ஓர் ஆண்டிற்கு 10 ஆயிரம் என்றால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 190 ஆண்டுகள் பிடிக்கும்!. என்ன ஏமாற்று வேலை!.

ஐந்தாண்டு கால திட்டம் கேள்விப்பட்டிருக்கிறோம். 190 ஆண்டு கால திட்டம் என்பது கேள்விப்படாத ஒன்று. இது தவிர, மின் மோட்டார் என்ற பெயரில் மீட்டர் பொருத்துவது குறித்து கருத்து கேட்பினை ஒரு சில இடங்களில் மின்சார வாரியம் நடத்தி இருப்பதாகவும்; பணப்பயிர்களுக்கு இலவச மின்சாரம் இல்லை என்று அதிகாரிகள் கூறுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இது மட்டுமல்லாமல், நிலத்தடி நீரும், மின்சாரமும் இல்லாத சூழ்நிலையில், தற்போதைய அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றுவதாகவே அமைந்துள்ளது. அப்படியே இலவசமாக பம்பு செட் கொடுத்தாலும், நீருக்கு எங்கே போவது? மின்சாரத்திற்கு எங்கே போவது? நீரும், மின்சாரமும் இல்லாமல், வெறும் பம்பு செட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது?.

ஆற்றுப் படுகைகளில் மணல் வரம்பு மீறி அள்ளப்படுகிறது. இதன் காரணமாக, நிலத்தடி நீர் என்பது இல்லாமல் போய்விட்டது. அப்படியே ஒரு சில இடங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தலாம் என்றால் மின்சாரம் இல்லை. ஒரு ஏக்கர் நிலத்திற்கு நீர்பாய்ச்ச வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம் மின்சாரம் தொடர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 25 விழுக்காடு நிலம் மட்டுமே பாசனம் பெறும்.

பின்னர் மீண்டும் மின் தடை ஏற்படுவதால், பாசனம் செய்யப்பட்ட தண்ணீரை மண் இழுத்து விடுகிறது. மீண்டும் மின்சாரம் வந்தால் ஏற்கெனவே பாசனம் செய்யப்பட்ட வயல் பகுதி தான் மீண்டும் பாசனம் பெறுகிறது. இன்று தமிழ்நாட்டில் விவசாய பெருமக்கள் எதிர் கொள்கின்ற பரிதாபகரமான நிலை இது தான்!

ஜூன் 12ம் தேதி அன்று மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடாததன் காரணமாக குறுவை சாகுபடி குறுகிவிட்டது. எனது கண்டன ஆர்ப்பாட்ட அறிவிப்பிற்குப் பிறகு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் 1 மாத காலம் தாமதமாகத் திறந்துவிடப்பட்டது. இருப்பினும், இதுநாள் வரை கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. இந்தச் சூழ்நிலையில் சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாகி உள்ளது.

சாதாரணமாக, டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி நடைபெறும் என்றும், இதில் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நிலத்தடி நீர் மூலமாகவும், 3 லட்சம் ஏக்கர் ஆற்றுப் பாசனத்தின் மூலமாகவும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மூன்று ஆண்டுகளாக ஆற்றுப் பாசனத்தின் மூலம் குறுவை சாகுபடி நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, நடப்பு ஆண்டு மட்டும் 6 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், இதன் காரணமாக ஆண்டு ஒன்றிற்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதாவது, மூன்று ஆண்டுகளில் 1,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வேலையிழப்பும் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறை மற்றும் நீர்ப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பம்பு செட்டுகளை பயன்படுத்து வதில்லை என்பதையும், இதன் விளைவாக மின் மோட்டார்கள் துருப்பிடித்து திறனற்றவையாகிவிட்டன என்பதையும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையின் மூலம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மின்சாரப் பற்றாக் குறையை போக்கவும், காவிரியிலிருந்து தண்ணீரைப் பெறவும் நடவடிக்கை எடுக்காமல், வெத்து வேட்டு அறிவிப்பினால் விவசாயிகளுக்கு எந்தப்பயனும் விளையப் போவதில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X