• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமைதியை சீர்குலைப்போர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை: கருணாநிதி உத்தரவு

|

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் பொது அமைதியைப் பாதிக்கும் வகையில், சாதி- மத பேதங்களைத் தூண்டிவிட்டுப் பூசல்களை ஏற்படுத்துவோர் மீதும் கள்ளச்சாராயம், போதை மருந்து, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும்; சொத்துக்களை ஆக்கிரமித்தல், காலி செய்தல், ஆட்களைக் கடத்தி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும்; பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறையினருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.

தலைமை செயலகத்தில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நடந்தது. நேற்று மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடந்தது. 2ம் நாளான இன்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.

அதில் பேசிய முதல்வர் கூறியதாவது: தமிழகத்தில் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாத்திட வேண்டும், பொது மக்களின் அமைதியான வாழ்வுக்குப் பங்கம் விளைத்திடும் எவரையும் எந்தவிதமான சலுகையும் காட்டாமல் அவரைச் சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனைகளை வழங்குவதன் மூலம் நாட்டில் பொது அமைதியை பொது மக்களின் நல்வாழ்வினை நிலைநாட்டிட முடியும் என்று இந்த அரசு கருதுகிறது.

இதை இதயத்தில் தாங்கிய வண்ணமே காவல்துறை பணிகளை நிறைவேற்றி வருகிறது. இந்த வகையில் அரசுக்குத் துணை புரிந்துவரும் காவல் துறை அதிகாரிகளாகிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டம்- ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் தொடர்ந்து குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் முனைந்து செயல்பட்டு, குற்றங்கள் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து. ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் பாதுகாவலர்களாகத் திகழ்ந்து, தமிழகத்தை அமைதியின் உறைவிடமாக்கி, அரசின் நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதற்குப் பெரிதும் துணை புரிய இந்த மாநாடு வழிவகுக்கும் என நம்புகிறேன்.

மாநிலத்தில் பொது அமைதியைப் பாதிக்கும் வகையில், சாதி- மத பேதங்களைத் தூண்டிவிட்டுப் பூசல்களை ஏற்படுத்துவோர் மீதும் கள்ளச்சாராயம், போதை மருந்து, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சமுதாயக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும்;

சொத்துக்களை ஆக்கிரமித்தல், காலி செய்தல், ஆட்களைக் கடத்தி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும்; பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் எந்தவிதமான பாரபட்சமுமின்றி தடுப்புக்காவல் சட்டங்களின் கீழான நடவடிக்கைகள் உட்பட அனைத்து வகையிலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

பயங்கரவாதச் செயல்களை எதிர் கொள்வதற்காக நாட்டிலேயே முதன்முதலாக நெருக்கடி கால மேலாண்மைத் திட்டம் வரையறுக்கப்பட்டு, அதிரடி நடவடிக்கைக் குழுக்கள், வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் குழுக்கள் ஆகியவற்றை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.

தமிழ்நாடு காவல்துறை, கப்பற்படை, கடலோரப் பாதுகாப்புப் படை ஆகியவை ஆபரேசன் பேரி காட், ஆபரேசன் ரக்சாக், ஆபரேசன் அம்லா என்ற பெயர்களில் கூட்டு ஒத்திகைப் பயிற்சிகளை நடத்தி, நெருக்கடியான காலங்களில் ஒருங்கிணைந்து செயல்படும் திறத்தை மேம்படுத்தியும் நமது மாநிலம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.

இத்தகைய முறையில் துல்லியமாகத் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டுத் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்துவரும் காவல்துறை அதிகாரிகளை மெத்தவும் பாராட்டுகிறேன்.

காவல் துறையினர், வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்யும் போதும் விசாரணைக்கு உட்படுத்தும் போதும், தனி மனித சுதந்திரமும், மனித உரிமைகளும் பாதிக்கப்படாத வகையில் உச்ச நீதிமன்றமும், அரசும் அவ்வப்போது அளித்து வரும் அறிவுரைகளைத் தவறாது கடைப்பிடித்து, குறிப்பாகக் காவல் கைதி மரணங்கள் எதுவும் நிகழ்ந்து விடாமல் விழிப்புடன் கடமையாற்றிட வேண்டும்.

பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு வரும்போது அவர்களைக் கண்ணியமாக நடத்துவதுடன், அவர்கள் அளிக்கும் புகார்களின் பேரில் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வழக்குகளைப் பதிவு செய்து, மேல் நடவடிக்கைகள் எடுத்து, குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் பெற்றுத்தந்து சட்டத்தின் மாட்சிமை மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்திட வேண்டுமெனக் காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

காவல்துறையினர், குற்றத்தடுப்பு செயல்களிலும், கண்டுபிடிக்க முடியாத வழக்குகளிலும் தீவிர கவனம் செலுத்தித் தலைமறைவாக இருந்து வரும் எதிரிகளைத் தேடி உடனுக்குடன் கைது செய்திட வேண்டும்.

முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கணினியைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களைத் தடுத்து, குற்றம் புரிந்தோர் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும்.

பொது மக்களிடையே குற்றங்கள் நிகழாமல் தடுப்பதுகுறித்த விழிப்புணர்வை வளர்ப்பதுடன், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களை ஈடுபடுத்தி, எங்கும் குற்றங்கள் நிகழாத இயல்பான சூழ்நிலை உருவாக விழிப்புடன் செயலாற்றிட வேண்டும்.

காவல்துறையினர், மக்களின் பிரச்சனைகளை மனிதாபிமானத்துடன் அணுகி, அவர்களது அனைத்துக் குறைகளையும் தீர்த்து வைத்து, பொது மக்கள் தங்களை இனிய நண்பர்களாகக் கருதி மதிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும்.

அப்படிப் பணியாற்றுவதன் மூலம் காவல்துறைப் பணிகளில் தமிழகத்திற்கு இருந்து வரும் புகழையும், பெருமையையும் தொடர்ந்து கட்டிக்காத்திட முடியும் என்று நம்புகிறேன்.

காவல்துறையில் சார் நிலையில் உள்ள- குறிப்பாக களத்தில் உள்ள காவலர்கள், தலைமைக் காவலர்கள் போன்றோர், பணி புரியும்போது தங்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களைந்து, தங்களைக் காப்பதற்கு உயரதிகாரிகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றும் வகையில், சார்நிலை அலுவலர்களிடம் பரிவு காட்டி, அவர்களை அரவணைத்து வழிகாட்டி காவல் துறையின் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றிட முன்வர வேண்டுமென உயர் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

2006ம் ஆண்டில் இந்த ஆட்சி அமைந்த பிறகு,15 ஆயிரத்து 84 காவலர்களும், 950 உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 9 ஆயிரம் காவலர்களையும், 1,095 உதவி ஆய்வாளர்களையும் நியமனம் செய்திட உரிய தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காவல் துறையில் பணிபுரிவோர்க்கு, கடந்த 4 ஆண்டுகளில், 362 கோடி ரூபாய்ச் செலவில் 7 ஆயிரத்து 596 காவலர் குடியிருப்புகள் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 330 கோடி ரூபாய்ச்செலவில் 5 ஆயிரத்து 787 குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X