For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணியில் புதிய கட்சிகள்: காங்கிரசுடன் பேசி முடிவு- கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
திருச்சி: திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது, அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

திருச்சியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு கெஜெட்டில் வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளதே?.

கருணாநிதி: காவிரி நடுவர் மன்றம் அமைத்த பிறகு ஏற்பட்ட பிரச்சனைகள் உங்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்சனைத் தீர்க்க தற்போது சட்டரீதியாக நடவடிக்கைகள் கையாளப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. இதற்கிடையே தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் மனிதாபிமான அடிப்படையில் நடந்து வருகிற பேச்சுவார்த்தைகளும், மனிதாபிமானம் மட்டுமல்ல மழை அபிமானமும் இருக்கிற காரணத்தால் நமக்கு கூடுமான வரையில் காவிரி நீர் கிடைத்து வருகிறது.

கேள்வி: இந்த வருடம்கு தேவையான நீரை கர்நாடகம் திறந்து விடும் என்று நம்புகிறீர்களா?.

கருணாநிதி: தேவையான நீரை கர்நாடக அரசிடம் கேட்போம். அவர்கள் தராதபட்சத்தில் அதை பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

கேள்வி: தமிழகம் வந்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா போதிய மழை பெய்தால் மட்டும் தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறியுள்ளாரே?.

கருணாநிதி: மழையில்லாமல் எதை திறந்து விடுவது?. அங்கும் மழையில்லாமல் வறண்டு போயிருந்தால், அவர்களும் தான் என்ன செய்ய முடியும்?.

கேள்வி: நதிநீர் இணைப்புத் திட்டம் வேகமாக நடைபெறவில்லையே?

கருணாநிதி: மாநில அளவில் அதற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. முதல் கட்டமாக திருநெல்வேலியில் தாமிரபரணியில் நதிநீர் இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கேள்வி: வெளியுறவு்த்துறைச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கை சென்று வந்த பிறகு உங்களை சந்தித்தாரா?

கருணாநிதி: இலங்கை செல்லும் முன் சந்தித்தார். அங்கு இலங்கை தமிழகர்களுக்கு தேவையான, அவர்கள் நலம்பேண தேவையான திட்டங்களை இலங்கை அரசிடம் வலியுறுத்துவேன் என்று கூறிச் சென்றார்.

கேள்வி: மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று எதிர்கட்சிகள் கூறி போராட்டங்கள் நடத்தி வருகிறார்களே?

கருணாநிதி: எங்களைப் பொறுத்த வரை தமிழகத்தில் விலைவாசி உயர்வின் தாக்கத்தை எந்தளவு குறைத்து அதை வாங்கி புசிக்கும் மக்களுக்கு எந்தளவு சுமையை குறைவாக்க முடியுமோ அந்தளவுக்கு குறைத்துள்ளோம்.

கேள்வி: ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளதாக மத்திய அரசிடம் புகார் கூறி உள்ளார்களே?

கருணாநிதி: 2001ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்ததோ அந்த அளவு பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது. இதை பத்திரிகைகளுக்கு செய்தியாகக் கொடுத்தால் அவர்கள் வெளியிடுவதில்லை என்பதால், என்ன பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை விளம்பரமாகவே கொடுத்திருக்கிறோம்.

கேள்வி: தமிழக முன்னாள் முதல்வர் மாதம் 1 ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி விட்டு ரூ.67 கோடிக்கு சொத்து குவித்த வழக்கு 15 ஆண்டாக தொடர்ந்து வருகிறதே?

கருணாநிதி: சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நீதி அனைவருக்கும் சமமானது என முழங்கி விட்டு, ஆனால் அது தன்னைத் தவிர என்று அடைப்புக்குள் போட்டுக் கொள்கிறவர்களை என்ன சொல்வது...

கேள்வி: நீதிமன்றத்தில் இருக்கிற வழக்குகளை விரைந்து முடித்திட தமிழக அரசு முயற்சிக்குமா?

கருணாநிதி: நீதிமன்றங்களில் இருக்கிற வழக்குகளை நாமாக விரைவுபடுத்த முடியாது. அதற்கான முயற்சிகளைத் தான் மேற்கொள்ள முடியும். விரைவுபடுத்துவோம் என்று உத்திரவாதம் அளிக்க முடியாது.

கேள்வி: மதுரையில் உங்கள் தலைமையில் தான் பிரதமர், சோனியா போன்றவர்கள் கலந்து கொண்டு சேது சமுத்திரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் தற்போது அது முடக்கப்பட்ட நிலையில் உள்ளதே?

கருணாநிதி: அதுவும் உச்ச நீதிமன்றத்திலே தான் உள்ளது. அதனால் அது முடக்கப்பட்டுள்ளதாகச் சொல்ல முடியாது.

கேள்வி: வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக கூட்டணி விரிவுப்படுத்தப்படுமா?

கருணாநிதி: திமுக-காங்கிரஸ் கூட்டணி நல்ல இணக்கமானதாகவும் நலமாகவும், பலமாகவும் உள்ளது. எங்கள் கூட்டணியில் வேறு கட்சிகளை சேர்ப்பது பற்றி நாங்களும், காங்கிரசும் பேசி முடிவு செய்வோம்.

கேள்வி: ஜெயலலிதாவும், விஜயகாந்தும் மக்கள் விரும்பும் கூட்டணி அமைப்போம் என்று கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன கூட்டணி?

கருணாநிதி: அது நீங்கள் விரும்பும் கூட்டணி.

கேள்வி: 2011ல் திமுக கூட்டணிக்கு எத்தகைய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

கருணாநிதி: 2011லும் திமுக ஆட்சி தொடரும்.

கேள்வி: மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளாரே. திமுக அமைச்சர்களில் மாற்றம் இருக்குமா?

கருணாநிதி: அதைப்பற்றி பிரதமர் என்னிடம் எதுவும் கலந்து பேசவில்லை.

கேள்வி: திமுக சார்பில் மேலும் அமைச்சர்கள் பதவி கேட்கப்படும?

கருணாநிதி: இல்லை

கேள்வி: தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாட்டில் உங்களுக்கு திருப்தி இருக்கிறதா?

கருணாநிதி: இருக்கிறது.

இவ்வாறு முதல்வர் பேட்டியளித்தார்.

முதல்வரின் வருகையையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலக சாலை, பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அன்பில் தர்மலிங்கம் சிலை அமைக்கப்பட்டுள்ள இடம், முதல்வர் செல்லும் பாதை முழுவதும் திமுக கொடிகள், வரவேற்பு வளைவுகள், கட் அவுட்கள் என தடபுடலாக காணப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X