தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்ட சட்டம் செல்லும்-சுப்ரீம் கோர்ட்

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக் கல்வி முறைகளும் ஒரே சீராக, ஒரே பாடத்திட்டத்தில் செயல்படும் வகையில் சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து பல்வேறு மாநிலங்களில் செயல்படுத் தப்படும் முறைகள் குறித்து ஆய்வு செய்து இந்த திட்டத்தை கடந்த கல்வியாண்டு முதல் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
முதல் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வற்ற நிலை, அனைவருக்கும் ஒரே சீரான கல்வி வழங்கும் இந்த உயரிய திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது.
கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த திட்டத்தை பாராட்டி வரவேற்றுள்ளனர். ஆனால் சமச்சீர் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சதாசிவம், சவ்கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.
தமிழக அரசின் சமச்சீர் கல்விக்கான குழுவுக்கும், மத்திய அரசு அமைத்துள்ள கல்வி பெறும் உரிமைச் சட்டத்திற்கான குழுவுக்கும் இடையே பல முரண்பாடுகள் இருப்பதாக வழக்கு விசாரணையின்போது மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு கொண்டுவந்துள்ள சமச்சீர் கல்வி திட்டம் சரியானது தான். உத்தரபிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படும் சமச்சீர் கல்வி திட்டம் குறித்து நன்கு ஆராய்ந்த பிறகே தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.
மற்ற மாநிலங்களை பொறுத்த வரை இரண்டு கல்வி வாரியங்கள் மட்டும் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கல்வி வாரியங்கள் செயல் படுவதால் மாணவர்களிடையே சமச்சீரான கல்வி வழங்கப்பட வில்லையென்றும், இதனை சீர்படுத்தி அனைவருக்கும் சமமான கல்வி வழங்குவதற்காகவே சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெற்றோர்களோ, மாணவர்களோ சமச்சீர் கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டும் இதனை எதிர்ப்பது ஏன் என்று கேட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.