For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையிலிருந்து வெளிநாட்டுக்கு விமான சேவை! - முக அழகிரி கோரிக்கை ஏற்பு

By Chakra
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை புதிய விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு விமானப் போக்குவரத்து விரைவில் தொடங்கவேண்டும் என்று, மத்திய ரசாயண மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி விடுத்த கோரிக்கையை ஏற்கப்பட்டது.

மதுரையிலிருந்து விரைவில் வெளிநாட்டுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், பிரபுல் படேல் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.

மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதை நீட்டிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 128 கோடி ரூபாய் செலவில் அதி நவீன, பிரமாண்டமான புதிய முனையம் (டெர்மினல்) கட்டப்பட்டுள்ளது. முழுவதும் ஏஸி செய்யப்பட்ட இந்த கட்டிடம் 17 ஆயிரத்து 700 சதுரஅடி பரப்பில் அமைந்துள்ளது.

இந்த தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான நிலைய கட்டிடத் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் பிரபுல் படேல் தலைமை தாங்கினார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குத்துவிளக்கேற்றி கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

விழாவிற்கு முன்னிலை வகித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, "2008-ம் ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் இந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு இன்றைய தினம் இந்த புதிய கட்டிடமாக உருவெடுத்து தமிழ் மக்களுக்காக சேவை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பேசிய மாணிக்க தாகூர் எம்.பி. சில கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். அந்த கோரிக்கைகளை நானும் முன்மொழிகின்றேன்.

சிங்கப்பூர், இலங்கை, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு நேரடியாக மதுரையில் இருந்து செல்வதற்கு விமான சேவை இல்லை. சென்னை, திருச்சி போன்ற இடங்களுக்கு சென்றுதான் அந்த நாடுகளுக்கு செல்லவேண்டி உள்ளது.

இந்த நாடுகளுக்கு மதுரையிலிருந்தே நேரடியாக விமான சேவை இருக்கவேண்டும் என்று நான் வழிமொழிந்து கேட்டுக்கொள்கிறேன். அதே போன்று டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை மதுரையில் இருந்து அமைய வேண்டும். அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..." என்று கோரிக்கை விடுத்தார்.

விரைவில் வெளிநாட்டு சேவை...

பின்னர் பேசிய ப சிதம்பரம், "சர்வதேச போக்குவரத்து விமானங்கள் நீங்கள் எதிர்பார்த்தபடி மதுரைக்கு வரும். அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் அயல்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும். சிங்கப்பூர், மலேசியா, துபாய் நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த பகுதியில் அதிகம் இருக்கிறார்கள். வெளிநாட்டு விமானங்கள் வருவதோடு மதுரையில் இருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்படும்", என்றார்.

மத்திய சிவில் விமானத்துறை இணை அமைச்சர் பிரபுல் படேல் பேசுகையில், "தமிழ்நாட்டில் விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு தமிழக அரசு இலவசமாக நிலம் கொடுத்து வருகிறது. அதற்காக நான் இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதே போல் சென்னை விமான நிலையத்தை ரூ.2 ஆயிரம் கோடி செலவில் நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த விமான நிலையம் டெல்லி, மும்பைக்கு இணையாக அமைக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக சென்னை உள்ளது.

அதே போல் தென் தமிழகத்தின் நுழைவாயிலாக மதுரை உள்ளது. எனவே தான் மதுரையில் உள்ள இந்த விமான நிலையம் உள்நாடு மற்றும் வெளிநாடு விமானங்களைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு பேசிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இங்கிருந்து வெளிநாட்டுக்கு விமானங்கள் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் கேட்டதை விட மேலே ஒருபடி சென்று நான் சொல்கிறேன். இதை என்னால் உங்களுக்கு உறுதியாக கூற முடியும்.

மிக விரைவில், மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு விமானம் இயக்கப்படும். அது பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாமல் சரக்குகள் (கார்கோ) போக்குவரத்தும் தொடங்கப்படும். இதன் மூலம் மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்கள் முழுவதும் நல்ல வளர்ச்சி பெறும். விவசாயம், தொழில் துறையில் தென்மாவட்டங்கள் சிறந்த வளர்ச்சி பெற மதுரை விமான நிலையம் பெரும் உதவியாக இருக்கும்...", என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X