For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டுவசதி சங்க கடன்: யாரையும் வீடுகளில் இருந்து வெளியேற்றவில்லை-தமிழக அரசு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: வீட்டுவசதி சங்க கடனுக்காக யாரையும் வீடுகளில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர் மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கு வீடுகள் கட்டிக் கொள்ள கடன் வழங்கி வருகின்றன. 2006ம் ஆண்டு திமுக அரசு பதவியேற்றவுடன் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்றவர்களின் கடன் சுமையை குறைக்க ஏதுவாக கடன் தள்ளுபடி மற்றும் வட்டிச் சலுகைத் திட்டத்தை அறிவித்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் பெற்றிருந்த 25 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்கள் முழுவதும் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அரசுக்கு ரூ.683 கோடி இழப்பு ஏற்பட்டது. இதன் மூலம் 4 லட்சத்து 40 ஆயிரத்து 419 உறுப்பினர்கள் பயன் பெற்றுள்ளனர்.

இதே போல, குறைந்த வருவாய் பிரிவினர் செலுத்த வேண்டிய வட்டியில் 50 சதவீதம், மத்திய வருவாய் பிரிவினர் செலுத்த வேண்டிய வட்டியில் 25 சதவீதம், உயர் வருவாய் பிரிவினர் செலுத்த வேண்டிய வட்டியில் 10 சதவீதம் ஆகியவற்றுடன் அவர்கள் செலுத்த வேண்டிய அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அரசுக்கு ரூ.91 கோடியே 73 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இந்தச் சலுகையின் மூலம் 34 ஆயிரத்து 527 உறுப்பினர்கள் பயன் அடைந்துள்ளனர். 31.3.2009 வரை நடைமுறையில் இருந்த இந்த தள்ளுபடி திட்டத்தின் காரணமாக கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு ஏற்பட்ட இழப்பு முழுவதையும் அரசே ஈடு செய்துள்ளது.

ஆனால், கடந்த (அதிமுக) ஆட்சிக் காலத்தில் 31.3.2001ல் நிலுவையில் இருந்த ரூ.292 கோடியே 60 லட்சத்தை முழுமையாக செலுத்தினால் அதற்குண்டான வட்டி, அபராத வட்டி மற்றும் சேவைக் கட்டணம் ரூ.159 கோடியே 65 லட்சம் தள்ளுபடி செய்யப்படும் எனவும், அதன் மூலம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது.

இருந்தபோதும், கடந்த கால ஆட்சியில் அந்த திட்டத்தின் மூலம் ரூ.32 கோடியே 13 லட்சம் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டு, 71 ஆயிரத்து 745 உறுப்பினர்கள் மட்டுமே பயன் அடைந்தார்கள். அதே போல 2005ம் ஆண்டில் அந்த அரசு அறிவித்த மற்றொரு தள்ளுபடி திட்டத்தின் மூலம் ரூ.39 கோடியே 97 லட்சம் அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டு, 72 ஆயிரத்து 836 உறுப்பினர்கள் மட்டுமே பயனடைந்தனர்.

முந்தைய அரசும், இந்த அரசும் வழங்கிய கடன் தள்ளுபடி சலுகைகளை ஒப்பிட்டு நோக்கினால், கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட கடன் வட்டி, அபராத வட்டித் தொகை தள்ளுபடி சலுகைகளால் ரூ.72 கோடியே 10 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 581 பயனாளிகள் மட்டுமே பயனடைந்தனர்.

ஆனால், இந்த அரசு 2006க்குப் பின் வழங்கிய அசல், வட்டி, அபராத வட்டி தள்ளுபடி சலுகைகளால் 774 கோடியே 73 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு, 4 லட்சத்து 74 ஆயிரத்து 946 பேர் பயன் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், முந்தைய ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட 2 தள்ளுபடி சலுகைகளாலும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு ஏற்பட்ட இழப்பை அரசு வழங்காமல், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களே ஏற்கச் செய்ததால், அந்த சங்கங்களின் வருவாய் குறைந்து, அவை நட்டத்தில் செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டன.

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் மத்திய அரசு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றிருந்த கடன் தொகையில் 2006ம் ஆண்டில் நிலுவையில் இருந்த ரூ.1,850 கோடியில், இந்த அரசு திருப்பிச் செலுத்திய ரூ.750 கோடி ரூபாய் போக, தற்போது ரூ.1,100 கோடி ரூபாய் நிலுவையாக உள்ளது.

நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடனை உரிய காலத்தில் செலுத்தாமல் போனால், தமிழக அரசின் கடன் பெறும் நிலை பாதிக்கும் என்பதாலும், உரிய காலத்தில் கடன் தள்ளுபடி திட்டத்தினை பயன்படுத்தி கடன் தவணைகளை நீண்ட காலமாக செலுத்தாத உயர் மற்றும் மத்திய வருவாய்ப் பிரிவுகளைச் சேர்ந்த வீட்டுவசதி சங்க உறுப்பினர்களிடமிருந்து கடனை வசூலிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், இத்தகைய கடன்தாரர்கள் அவரவர்கள் வீட்டிலேயேதான் குடியிருக்கின்றனர். எந்த ஒரு உறுப்பினரையும் அவர் செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக அவர்களின் வீட்டிலிருந்து வெளியேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.

தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் குடிசைகளில் வாழும் ஏழை எளியோரின் நலிவினைப் போக்கிடும் வண்ணம், அவர்கள் குடியிருக்கும் குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகளாக கட்டித்தரும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம்'' அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுëëம் வரும் இந்த திட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சம் இலவச கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிகளில் அனைத்துப் பயனாளிகளும் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.

இந்த திட்டம் பெற்றுள்ள சிறப்பான வரவேற்பைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் வசதியுள்ள உறுப்பினர்களிடமிருந்து, நிலுவையிலுள்ள கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுத்ததைக் குறை கூறி வசதி படைத்தவர்களுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை வெளியிடுவது வியப்புக்குரியதாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X