For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைத்தறி ஆடை, முதல்வர் கருணாநிதி, சென்னை விழாவில் கருணாநிதி பேச்சு, கைத்தறி ஆடை அணிய கருணாநிதி கோரிக்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்கள் அனைவருமே, கைத்தறி ஆடையைப் பயன்படுத்தி, கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வு அளிப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மத்திய ஜவுளித்துறை சார்பில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு திட்டம் தொடக்க விழா மற்றும் இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.2300 கோடியில் 30 லட்சம் ஜவுளித் தொழிலாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கக்கூடிய முதல் ஏடிடிசி-ஸ்மார்ட் பயிற்சி நிலையம் தொடக்க விழா எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் நடந்தது.

முதல்வர் கருணாநிதி இவற்றை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்த விழா கைத்தறியையும் இணைத்து முன்னேற்றுகின்ற ஒரு திட்டத்தோடு நடைபெறுகின்ற விழா என்பதாலும், இந்தியாவிலேயே முதன்முதலாக நம்முடைய தமிழகத்திலேதான் இந்தத் திட்டம் தொடங்கப்படுகின்றது என்பதாலும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2,300 கோடி செலவில் அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் பேருக்குத் தேவையான திறனை மேம்படுத்தி, அவர்கள் ஜவுளித் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு வழி வகுக்கும்.

அவர்களுடைய திறனை வளர்ப்பதற்கு, அதற்கொரு திறனை உருவாக்கக்கூடிய பயிற்சியும் தேவை. அந்தப் பயிற்சியும் இப்போது அளிக்கப்படுகிறது. அதற்கும் ஏற்றவாறு தொகை ஒதுக்கப்பட்டு, அந்தத் திட்டமும் நிறைவேற்றப்படுகிறது.

இந்தியாவிலேயே முதலாவதாக இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் தமிழ்நாட்டிலேதான் தொடங்கி வைக்கப்படுகிறது என்பதை எண்ணும் போது, திறனை மேம்படுத்துகின்ற ஆற்றல் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிற்குத்தான் உரியது என்பதை நாம் சொல்லாமல் சொல்லுகின்றோம். இரண்டு ஆண்டுகளில் இது போன்ற 12 பயிற்சி மையங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளன. அவற்றின் மூலம் 25 ஆயிரம் பேருக்கு ஆடைத் தொழிலில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கிடைக்கவிருக்கின்றன.

15.8.2010 சுதந்திரத் திருநாள் அன்று கோட்டையில் தேசியக் கொடியை நான் ஏற்றி வைத்து உரையாற்றிய பொழுது, வேலைவாய்ப்பு இல்லாத, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்த இளைஞர்கள் - பொறியியல், இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்ற இளைஞர்கள் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற வழிவகுக்கும் நோக்கில் ரூ.50 கோடி ஒதுக்கீட்டில் திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்'' என்று குறிப்பிட்டேன்.

நான் செய்த அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக அல்ல; துணையாக, மத்திய அரசின் சார்பில் - மத்திய அரசு என்றைக்கும் நமக்குத் துணை நிற்கின்ற அரசு - அந்த அரசின் சார்பில், பயிற்சி மையங்கள் நமது இந்தியா முழுவதிலும் தொடங்கப்படுகின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதிலே ஒன்றுதான், இங்கே இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த விழா.

இந்தியாவிலே விவசாயத்திற்கு அடுத்ததாக இருப்பது ஜவுளித் துறை. ஜவுளித் துறைக்கு அடிப்படையாக இருப்பது கைத்தறித் துறை. கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும், இந்தத் துறைதான் அடிப்படையாக உள்ள துறை என்பதை எவரும் மறுத்திட இயலாது. அதனால்தான், கைத்தறியை வளர்க்க வேண்டும், கைத்தறிக்கு ஒரு செல்வாக்கு பெருக வேண்டும், கைத்தறிக்கான சந்தை வளர வேண்டுமென்ற எண்ணத்தோடு எங்கள் தலைவர் அண்ணா, கைத்தறித் துணிகளை மக்கள் வாங்குவதற்கான ஊக்கத்தை ஏற்படுத்த, அவரும், எங்களைப் போன்ற கழகத்தினுடைய முன்னணியினரும் முன்னின்று; கைத்தறித் துணிகளைத் தோளிலும், தலையிலும் சுமந்து ஊர் ஊராக விற்று, அப்படி விற்ற காரணத்தால், கைத்தறித் துணிகளை வாங்க வேண்டுமென்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டு, கைத்தறிக்கு ஒரு செல்வாக்கு வளர்ந்தது.

எப்படி கதரையே கட்டவேண்டும் என்று காங்கிரஸ்காரர்களுக்கு அன்றைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அந்த உறுதியை மேற்கொண்டு அவர்களும், இன்று வரை கதராடையை அவர்களுடைய உடைகளாக அமைத்திருக்கிறார்களோ, அதைப்போல, இங்கே வாசன் அவர்களைக்கூட பார்க்கிறீர்கள். வாசனுடைய தந்தையார் - என்னுடைய அருமை நண்பர் மறைந்த மூப்பனார் கதராடையோடுதான் வருவார்; அதிலே அவர் அழகாகத் தோன்றுவார். ஏற்கெனவே வசீகரமான மூப்பனாரை, கதராடையோடு தோன்றும்போது பார்த்தால், எனக்கே மேலும் மேலும் அவர் மீது பற்றும், பாசமும் ஏற்படும்.

இங்கே பரிதி இளம்வழுதி கைத்தறி நெசவாளர்களுக்கென்று ஒரு கோரிக்கை வைத்தார். நான் அவருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். "தயவு செய்து இனிமேல் நீ தொடர்ந்து கைத்தறியையே கட்டு'' என்ற கோரிக்கையை நான் அவருக்கு வைக்கிறேன். வாய்ச்சொல் மாத்திரம் போதாது. எதையும் நடைமுறைப்படுத்த வேண்டுமேயானால், செயல்படுத்த வேண்டுமேயானால், அதன்படி நாம் நடந்து காட்ட வேண்டும். கேட்டால், "நான் வேட்டி கட்டினால்தானே கைத்தறியை உடுத்த முடியும். பழைய காலத்தில் சட்டசபையில் என்னுடைய வேட்டிக்கே ஆபத்து வந்த காரணத்தினால்தான், நான் இந்த பேண்ட் போட ஆரம்பித்தேன்'' என்று சொல்லக்கூடும். இப்போது அந்த ஆபத்து இல்லாத காலத்தில் கூட ஏன் அதையே கடைபிடிக்க வேண்டும். ஆக, ஆபத்து இல்லாத காலத்தில் கைத்தறி கட்டினால் பரவாயில்லை.

நான் இந்த விழாவில் நம்முடைய தோழர்கள் மாத்திரமல்ல, தமிழர்கள் அனைவருமே, கைத்தறியாளர்களும் தமிழர்கள்தான்; அவர்களுடைய வாழ்வும் நம்முடைய வாழ்வுதான் - அந்த வாழ்வு சிறக்க அனைவரும் கைத்தறி ஆடையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு வாழ்வு அளிப்போம் என்ற உறுதியை இதுபோன்ற விழாக்களிலே மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டு; மத்திய அரசின் மூலமாகப் போடப்பட்டுள்ள இந்தத் திட்டம் - அந்தத் திட்டத்திற்குத் துணையாக தமிழக அரசும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தப் பயிற்சி பெறுகின்ற ஒவ்வொருவருக்கும், 2000 ரூபாய் ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்கவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, இதிலே தமிழகம், மத்திய சர்க்கார் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல், பிரித்துப் பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டேயிருக்கட்டும்; ஒன்றாக இருக்கும் நாம், ஒன்றாகவே பார்ப்போம் என்றார் முதல்வர்

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X