காமன்வெல்த் போட்டி வெற்றி பெற்றதாக கல்மாடி அறிவிப்பு!!
டெல்லி: டெல்லி காமன்வெல்த் போட்டி பெரும் வெற்றி பெற்றுள்ளதாக சுரேஷ் கல்மாடி கூறியுள்ளார். இதற்காக டெல்லிக்காரர்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் டெல்லி மக்கள்தான். போட்டி சிறப்பான வெற்றியைப் பெற டெல்லி மக்கள்தான் பேருதவி புரிந்துள்ளனர். இந்தப் போட்டியின் வெற்றி ஒலிம்பிக் போட்டிகளை இங்கு கொண்டு வந்து சேர்க்க உதவும்.
டெல்லி போலீஸாருடன் ஒத்துழைத்த டெல்லி மக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். போட்டியாளர்கள் கேம்ஸ் வில்லேஜிலிருந்து உரிய மைதானங்களுக்குச் செல்வதில் எந்த தாமதமும் ஏற்படாமல் போலீஸாருடன் ஒத்துழைத்த டெல்லி மக்களைப் பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன்.
டெல்லி மக்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத பிற மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது என்றார் கல்மாடி.