குஜராத் மாநகராட்சித் தேர்தல்-பாஜக அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னணி
அகமதாபாத்: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. அனைத்து மாநகராட்சிகளிலும் பாஜகவே பெரும் வாக்கு வித்தியாசத்துடன் முன்னணியில் உள்ளது.
மொத்தம் உள்ள அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வததோரா, ஜாம்நகர், பவநகர் ஆகிய மாநகராட்சிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பெரும் வித்தியாசத்தில் முன்னணியில்உள்ளனர்.
அகமதாபாத்தில் மொத்தம் உள்ள 189 சீட்களில் இதுவரை பாஜக 37 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸுக்கு வெறும் 8 வெற்றியே கிடைத்துள்ளது. வததோராவில் மொத்தம் உள்ள 75 இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பிடித்து விட்டது பாஜக. காங்கிரஸுக்கு 3 இடங்களே கிடைத்துள்ளன.
சூரத்தில் உள்ள 114 வார்டுகளில் பாஜக 27 வார்டுகளையும், காங்கிரஸ் 3 வார்டுகளையும் வென்றுள்ளன.
ராஜ்கோட், பவநகர், ஜாம்நகரிலும் பாஜகவே முன்னணியில் உள்ளது.
தேர்தல் முடிவுகளை தள்ளிப் போட வேண்டும் என்று முன்னதாக காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.
மொத்தம் உள்ள 558 வார்டுகளுக்காக 2100 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது அமீத் ஷா கைது விவகாரம், சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் சிபஐ நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை பிரச்சினையாக கிளப்பி பிரசாரம் செய்தது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், மத்திய அரசின் வளர்ச்சி்த் திட்டங்கள்,உள்ளூர்ப் பிரச்சினைகளை பெரிதாக்கி காங்கிரஸ் பிரசாரம் செய்திருந்தது.
கடந்த 2005 உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவே ஆறு மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.
இந்தத் தேர்தலைத் தொடர்ந்து அடுத்து பஞ்சாயத்து தேர்தல் குஜராத்தில் நடைபெறவுள்ளது.