For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக கூட்டம் முடியும் வரை அகிம்சாவாதியாக இருப்போம்-கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் அதிமுகவினர் நடத்தும் கூட்டம் முடிகிற வரையில் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டும் அகிம்சாவாதியாக இருப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திமுகவினருக்கு அவர் முரசொலி மூலம் விடுத்துள்ள கடிதம்:

மதுரை நகரம் எனக்குப் புதிய நகரமல்ல. என் பொதுவாழ்வில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நகரின் தெரு முனைகளில் இயக்கக் கொடிகளை ஏற்றி வைத்து, அந்தக் கொடி உருவான வரலாற்றை விளக்கியிருக்கிறேன். மதுரை முத்து என்ற தன்மான இயக்கத் தளபதியின் அரவணைப்போடு நான் கொடியேற்றிய இடங்களில், கொடியோர் சிலர் அந்தக் கொடியை மரத்தோடு வெட்டி எறிந்திருக்கின்ற காட்சிகள் இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை; நெஞ்சத் திரையை விட்டு நீங்கவில்லை.

அப்படி ஒரு எரிநெருப்பு போன்ற எதிர்ப்புக்கிடையேதான், என் பொதுவாழ்வு அரும்பி மலர்ந்து, அய்யா பெரியார் தந்த உறுதியோடும், அறிஞர் அண்ணா தந்த அறிவுச் சுடரோடும் வளர்ந்து செழித்து; இருபதாம் அகவையில் பெற்றிருந்த எழுச்சியோடு இந்த எண்பத்தாறாம் அகவையிலும் உன்போன்றோரை என் உடன்பிறப்புகளாகப் பெற்று, இந்த திராவிடக் கலாச்சாரப் படையினை - இன உணர்வுச் சேனையினை நடத்திடும் பக்குவத்தை எனக்கு அளித்துள்ளது என்பதை எவரும் மறுத்திடார்!

உன்போன்றோர் என் பக்கம் இருக்கின்றீர்கள் என்ற பெருமிதத்திலும்; தமிழ்கூறும் நல்லுலகின் அறிஞர் பெருமக்கள், புலவரேறுகள் என்னை வாழ்த்தியிருக்கின்ற மகிழ்வோடும், ஆட்சிச் சக்கரத்தை இயக்குகின்ற வாய்ப்பினைப் பெற்று; அந்த வாய்ப்பை வளமார் தமிழ்நாட்டு மக்கள் மேலும் வலிவுபெறவும், பொலிவுபெறவும் பயன்படுத்தும் வகையில், தொடர்ந்து தொண்டாற்றியதால், நான் சார்ந்துள்ள இயக்கத்தினை என்றைக்கும் முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போய்விடுமோ என எண்ணிடும் நச்சு நினைப்பினர் சிலர்; என்னையே இல்லாமல் செய்துவிட்டால் என்ன - என்கின்ற அளவுக்கு அணிசேர்ந்து ஆய்வுநடத்தி, அவர்கள் எண்ணம் ஈடேற, அதற்கான ஆயத்தப் பணிகளில் பலமுறை இறங்கியது போல், இம்முறையும் இறங்கியுள்ளனர்.

ஒருவனை வீழ்த்தக் குழிதோண்டி வைத்துவிட்டு, அய்யோ, என்னை வீழ்த்தத் தோண்டிய குழியைப் பாரீர்!'' என்று நடுங்கிக் கதறும் நாட்டியப் பேரொளிகள், நடன மாதரசுகள் மலிந்துவிட்ட நமது நாட்டு அரசியலில், அவர்களின் காட்டுக்கூச்சலைக் கேட்பதற்கும், ஏமாந்த சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த உண்மையை உன் உள்ளத்திலே பதியவைத்துக் கொண்டு, இதோ நான் சொல்வதையும் கொஞ்சம் சிந்தித்துப்பார்!

எதிர்க்கட்சித் தலைவர் மதுரைக்குப் போகிறாராம்; பொதுக்கூட்டத்தில் பேசுகிறாராம்; அங்கே தி.மு.க.வினர் அந்தக் கூட்டத்தைக் கலைக்கவும், அவருக்கு ஆபத்து விளைவிக்கவும் திட்டமிட்டு, அதனை எச்சரிக்கையாக்கி ஏராளமான சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டியிருக்கிறார்களாம்; அதற்கு எதிரான சுவரொட்டிகள் அ.தி.மு.க.வினரால் ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் ஒட்டப்பட்டிருக்கிறதாம்.

இந்த இரண்டுமே அரசியல் நாகரிகத்திற்கு அடியோடு எதிர்ப்பான செயல் என்பதற்காகவும், இவற்றின் காரணமாக இரு சாராரிடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், காவல் துறையினர் கண்விழிப்போடு அலைந்துதிரிந்து அதற்கான தடயம் எங்கும் இருத்தலாகாதென்றும்; அந்தத் தடயங்களுக்குக் காரணமானவர்கள் ஆளுங்கட்சியினராயினும், எதிர்க்கட்சியினராயினும் ஒரே விதமான குற்றச்சாட்டுக்கும், விசாரணைக்கும், தண்டனைக்கும் உரியவர்களே ஆவார்கள் என்ற நிலைப்பாட்டுடன் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கத் தயங்காமல் இந்த அரசு செயல்படும்போது; இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இருக்கின்ற ஆத்திரக்காரர்கள் எவராயினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நல்வழி காண்பதும், நகரின் - நாட்டின் அமைதி காப்பதுமே அரசுக்கு மாத்திரமல்ல; எதிர்க்கட்சிக்கும் ஏன், எல்லா கட்சிகளுக்கும் உரிய நடுநிலை இலக்கணம் ஆகும்.

மதுரையிலே ஏதாவது சம்பவம் நடக்கக்கூடும் என்று அதைத் தடுக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அ.தி.மு.க. கோரியது. அதற்காக அட்டியின்றி உடனடியாக ஆணை வழங்கப்பட்டு; சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சி.பி.ஐ. அமைப்பு நடவடிக்கை எடுப்பதற்குள்ளாகவே, தமிழ்நாட்டுக் காவல்துறையை குற்றம் சொல்லியும், குறை கூறியும், தி.மு.க. அரசு மீது வீண் பழி சுமத்தியும்; அதற்குப் பக்கபலமாக சில கட்சியினரை இணைத்துக் கொண்டு, சிலர் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடுகிறார்கள் என்றால் அதன் பொருள்தான் என்ன?

இப்படிப்பட்ட பிரச்சாரங்களால் பெருங்கூட்டம் சேர்க்க வேண்டிய நிலையில் எதிர்க்கட்சி இல்லை என்பதும்; அதன் வலிவும், மக்கள் ஆதரவும் எவ்வளவு என்பதும் நமக்குத் தெரிந்திருப்பதைப் போலவே; எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கிடையே நம் மீது ஓர் அபவாதத்தைச் சுமத்தி அவர்கள் பெறப்போகும் பயன் என்ன?

எதிர்க்கட்சியினர், வன்முறை வன்முறை என்று எச்சரிக்கைக் கூச்சல் போடுவது ஒருவேளை இவர்களின் வன்முறை ஆயுதத்தை நம்மீது வீசுவதற்குத்தானோ என்று எண்ணிடாமல் இருக்க முடியவில்லை.

எனவே, மதுரையிலே அவர்களின் கூட்டம் நடந்து முடிகிற வரையில், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டுகிற அகிம்சாவாதியாக இருக்க வேண்டும். அவர்கள் திட்டினால் உன் காதுகளுக்குத் தேனமுதமாக இருக்க வேண்டும். உன்னையே திட்டுகிறார்களே, வசை பாடுகிறார்களே, என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்கமுடிகிறதா'' என்று கேட்பாயானால்; எனக்கும், உனக்கும் என்றைக்கும் நினைவிருக்கக்கூடிய அண்ணாவின் வாசகத்தை மறந்து விடலாமா? அதுதானே, வாழ்க வசவாளர்கள்!'' என்ற வாசகம்.

எழுபது ஆண்டுகால என்னுடைய பொது வாழ்க்கையில் என்னைத் தலைவரே, தலைவரே என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அழைத்தவர்கள், முதுகில் குத்திய துரோகிகள் ஆகிவிட்டதையும் நான் அறிவேன். இதுநாள் வரையில் வசைபாடிக் களித்தோர் இன்று, கொள்கை இசைபாடி என்னை மகிழ்விப்பதையும் நினைத்துப் பார்த்தால்; அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது அழித்து எழுதமுடியாத ஆத்திச்சூடி ஆகிவிட்டது; என்பதுதானே உண்மை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X