கடலூர் மாவட்ட பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாகவும், இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும் அதிமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இன்று கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவித்துள்ளன.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தப்பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இன்று மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்ய்யப்படும், என்று அறிவித்தார்.
இதையடுத்து இன்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள பந்த் போராட்டத்தையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பென்னாடம், பன்ரூட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
போலீஸ் பாதுகாப்புடன் அவ்வப்போது அரசு பேருந்துகள் இயங்குகின்றன. இதனால் குறித்த நேரத்திற்கு குறித்த இடத்திற்கு செல்ல முடியாமல் ஊழியர்களும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மாவட்டத்தின் பல இடங்களில் கடைகள் முற்றாக அடைக்கப்பட்டுள்ளன. 90 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.