For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை-தனி விசாரணை அதிகாரி நியமனம்

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் டாக்சியில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி மற்றும் அவளுடைய தம்பி ஆகியோரை தண்ணீரில் தள்ளி விட்டு கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி, விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அவர்களுக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுக்கும் நோக்கில் கோவை போலீஸார் துரித கதியில் செயல்பட்டு வருகின்றனர்.

விசாரணையை துரிதமாக முடிப்பதற்காக தனி விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார் காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு.

கோவை ரங்கே கவுடர் வீதியில் வசிக்கும் ஜவுளி நிறுவன அதிபர் ரஞ்சித் ஜெயினின் மகள் முஷ்கின் (11), மகன் ரித்திக் ஜெயின் (8) ஆகியோர் கால் டாக்சி ஒன்றில் கடத்தப்பட்டனர்.

அவர்களைக் கடத்திச் சென்ற கார் டிரைவர் மோகன கிருஷ்ணன் மற்றும் அவனுடைய நண்பனான மனோகரன் ஆகியோர் உடுமலை அருகே கொண்டு போய் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் சிறுமியையும், அவளுடைய தம்பியையும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட கால்வாயில் தள்ளி விட்டு கொடூரமாகக் கொலை செய்தனர்.

இதில் சிறுமியின் உடல் கிட்டத்தட்ட 77 கிலோமீட்டர் தொலைவுக்கு நீரில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டது. அடுத்த நாள் சிறுவன் ரித்திக்கின் உடலை விவசாயிகள் கண்டுபிடித்து மீட்டுக் கொடுத்தனர்.

பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தமிழக மக்களை உறைய வைத்துள்ளது. இரு குற்றவாளிகளையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கடத்தல், பணம் கேட்டுமிரட்டல், தடயங்களை மறைத்தல், பாலியல் பலாத்காரம், கொலை செய்தல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரு குழந்தைளையும் காப்பாற்ற முடியாத இயலாமையில் உள்ள கோவை காவல்துறை தற்போது இரு குற்றவாளிகளுக்கும் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தரும் நோக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்காக மாநகர மேற்குப் பகுதி உதவி ஆணையர் குமாரசாமியை விசாரணை அதிகாரியாக ஆணையர் சைலேந்திரபாபு நியமித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தைகளை கடத்திக் கொலை செய்த மோகன், மனோகரன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இத்தகைய குற்றச் செயல்களில் ஏற்கெனவே ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரின் முழு விவரங்களைத் திரட்ட 8-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

தனிப் படை போலீஸாரை ஒருங்கிணைக்கும் பணியை மாநகர மேற்கு பகுதி உதவி ஆணையர் குமாரசாமி கவனிப்பார். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வலுவான ஆதாரங்களைத் திரட்டும் தனி அதிகாரியாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது வழக்கமான பணிகளைத் தெற்குப் பகுதி உதவி ஆணையர் பாலாஜி சரவணன் கூடுதலாகக் கவனித்துக் கொள்வார் என்றார்.

கடும் தண்டனை தர சரத்குமார் கோரிக்கை:

கோவை இரட்டைக் கொலை குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவையில் ஜவுளிக் கடை அதிபர் ரஞ்சித் குமார் ஜெயினின் மகன் ரித்திக்கும் மகள் முஸ்கினும் கால்வாயில் தள்ளி கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றவர்கள் மட்டுல்லாது தமிழக மக்கள் அனைவரும் இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். எப்போதும்போல வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்குள் இந்த அநீதியை மக்கள் மறந்து விடுவார்கள்.

குற்றவாளிகள் சிறை பறவையாக மாறி விடுவார்கள். எனவே, இந்த கொலை பாதகர்களுக்கு விரைவு நீதிமன்றத்தின் மூலம் உடனே கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X