For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான நில ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் இல்லை-ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளதைப் போல சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டதில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள விளக்க அறிக்கை:

திருவான்மியூர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதிகளில் இருந்து 49.19 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக ஒதுக்கியதில் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை சுட்டிக் காட்டியுள்ள குறிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல; இறுதியானவை அல்ல. அவற்றுக்கு தமிழக அரசின் சார்பில் விரிவான விளக்கம் தணிக்கைத் துறைக்கு அளிக்கப்பட்டு, அது அந்தத் துறையின் பரிசீலனையில் உள்ளது.

டி.எல்.எஃப். நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்ட 26.64 ஏக்கர் நிலம் கொட்டிவாக்கம் மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் உள்ளன. இவற்றின் வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.3 ஆயிரம் ஆகும்.

அந்தப் பகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் டிட்கோ நிறுவனத்தால்-தனியார் பங்கேற்புடன் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

அவற்றில் எட்டு நிறுவனங்கள் தகுதியானவையாக கருதப்பட்டன. அவைகளிடம் இருந்து விலைப்புள்ளிகள் கோரப்பட்டன. அவற்றில் நான்கு நிறுவனங்கள் இறுதியாக விலைப்புள்ளிகளைச் சமர்ப்பித்தன.

விலைப்புள்ளிகளின் அடிப்படையில் அதிகபட்ச குத்தகை தொகையாக சதுர அடிக்கு ரூ. 5 ஆயிரத்து 757 வழங்க முன்வந்த டி.எல்.எஃப். நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க டிட்கோ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாகச் செயல்பட அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

டி.எல்.எஃப்., டாடா ரியாலிட்டி நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்கள் 1.5 கி.மீ. இடைவெளியில் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன.

இதில், டாடா நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட நிலமானது ராஜீவ் காந்தி சாலையில் 138 மீட்டர் சாலை முகப்புடன் செவ்வக வடிவில் அமைந்துள்ள பகுதியாகும். டி.எல்.எஃப். நிறுவனத்துக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட நிலமானது, ராஜீவ் காந்தி சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் தரமணி சாலையில் 18 மீட்டர் சாலை முகப்புடன் இரண்டு பிரிவுகளாக ஒழுங்கற்ற வடிவில் அமைந்துள்ளன.

இந்த நிலத்தின் மேற்பரப்பில் பறக்கும் ரயில் பாதை செல்கிறது. எனவே, இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் மதிப்பை சமமாகக் கருத இயலாது.

1975-ம் ஆண்டு அரசின் உத்தரவுப்படி 10 ஆண்டுகளுக்கு மேல் நல்லமுறையில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கு, நில ஒப்படைப்பு செய்யும் போது, இரண்டு மடங்கு சந்தை மதிப்பு வசூலிக்கப்பட வேண்டும். ஏனைய தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மடங்கு சந்தை மதிப்பு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டி.எல்.எஃப். நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலம் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டதே தவிர, ஒப்படைப்பு செய்யப்படவில்லை.

ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி மூலம் குத்தகைக்கு விடப்படும் நிலத்துக்கு இரு மடங்கு சந்தை மதிப்பு வசூலிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேற்கண்ட நிலையில் பொருந்தாது. எனவே, இதில் எந்த முறைகேடும், விதிமீறலும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X