For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர்களைக் காக்கும் தாயாக விளங்குகிறார் சோனியா-தங்கபாலு பேச்சு

Google Oneindia Tamil News

Thangabalu
சென்னை: சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார். ஆனால் அறிக்கைவிட்டு வாய் வீச்சைக்காட்டும் வைகோ இலங்கை தமிழர்களுக்காக இழந்தது என்ன? என்று கேட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைப்போர் நிகழ்வுகள் தொடங்கிய காலத்திலும், அது நடைபெறும் நேரத்திலும் அது முடிவுக்கு வந்து சுமூக சூழ்நிலை முழுமையாக உருவாகப்போகும் இன்றைய காலக்கட்டம் வரை அனைத்து நிலைகளிலும் சோனியாகாந்தியின் மனிதாபிமான வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளை வைகோ மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்களும், இலங்கைவாழ் தமிழர்களும் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.

போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2009-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உண்ணாநோன்பிலும், அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 7, 8, 9-ந் தேதிகளில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்று சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

சோனியாகாந்தியின் வழிகாட்டுதலில் மத்திய அரசு 800 டன் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் 4-11-2008 அன்றும், 9-3-2009 அன்று 25 டன் மருந்து பொருட்களுடன் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட இந்திய மருத்துவக்குழு இலங்கை போர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இலங்கை தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

போர்க்காலத்தில் அங்கு உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு சோனியா காந்தியின் ஆணைகேற்ப கடந்த 16-4-2009 அன்று அரிசி, பருப்பு, மருந்து மற்றும் துணிமணிகள் ஆகிய நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற அங்கு போர் நிறுத்தம் வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது அதிபர் ராஜபக்சேவிடம் நேரிலும், மீண்டும் தொலைபேசி மூலமும் இரண்டுமுறை பேசினார்.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு நேரடியாக சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து, இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்' என்று வலியுறுத்தினார். அதையொட்டி 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

அதற்கு முன்னதாக இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று 12-2-2009 அன்று பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரதீபாபட்டீல் வலியுறுத்தி பேசினார்.

இலங்கையில் அமைதி நிலை உருவாக வேண்டும், அதற்கிடையே போரில் அல்லல்படும் இலங்கை தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு எடுத்த ஒருசில நடவடிக்கைகளை மட்டுமே நினைவுபடுத்தியுள்ளேன்.

அதைத்தொடர்ந்து போர் நிறுத்தப்பட்டு அங்கு அமைதி சூழல் உருவான நிலையில் அங்குள்ள தமிழர்களின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் 5 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது என்பதை நாடறியும்.

வீடிழந்து, உணவின்றி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, அங்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரும் பணி விரைவில் தொடங்கும் என்ற செய்தி அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போர்க்காலம் தொடங்கி, அது நின்றதற்கு பின்பு இதுவரை மனிதாபிமான உணர்வோடு மத்திய அரசால் நடைபெற்று வரும் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்கள் அபரிமிதமாக தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அங்கு விடுதலைப்புலிகளின் பிரச்சனை உக்கிரம் அடைந்த கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, பிரதமர் நரசிம்மராவ் ஆகிய தலைவர்களின் காலங்களில் இலங்கை தமிழர்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தரும் பணிகளில் உலகளாவிய அளவில் எத்தனை எத்தனை நடவடிக்கைகளை செயல்படுத்தி வந்தார்கள் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத அத்தியாயங்கள்-சாதனைகள்.

ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை தமிழர்கள் வாழ்வை பாதுகாக்கும் அரணாக உருவாக்கப்பட்டது. ஆனால் வைகோவின் பிதாமகன்களான விடுதலைப்புலிகளின் தடையால் அது நிறைவேறாமல் போனது.

இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய விலைமதிக்க முடியாத தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை தமிழின துரோகிகளால் பறிகொடுத்தோம். இன்றைக்கு சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார்.

இந்நிலையில் அறிக்கைவிட்டு வாய் வீச்சைக்காட்டும் வைகோ இலங்கை தமிழர்களுக்காக இழந்தது என்ன?.

அரசியல் நடத்த வேறு வழியோ, கொள்கையோ இல்லாத நிலையில் இலங்கை தமிழர் ஒன்றை மட்டுமே வைத்து தமிழின மக்களுக்கு விரோதமாகவும், எஞ்சியிருக்கும் தமிழர்களை காப்பாற்றும் மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பேசி செயல்படுகிற வைகோவுக்கு சோனியா காந்தியை பற்றி பேச எவ்வித அருகதையும் கிடையாது.

தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை கொலை செய்த கொலையாளிகளுக்கு துதிபாடும் வைகோ போன்றவர்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு கூட எதையும் செய்யும் வாய்ப்பற்றவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என்று கூறியுள்ளார் தங்கபாலு.

ஆர்.எஸ்.எஸ்.ஸைக் கண்டித்து மறியல்:

இதற்கிடையே, சோனியா காந்தியை சிஐஏ எஜென்ட் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சனத்திற்குக் கண்டனம் தெரிவித்து இன்று காலை அண்ணா சாலையில் தங்கபாலு தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட தங்கபாலு உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X