For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பை ரத்து செய்த கிருஷ்ணா

Google Oneindia Tamil News

SM Krishna
கொழும்பு: தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பை திடீரென ரத்து செய்து விட்டார் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகத்தை நேற்று கிருஷ்ணா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்திற்கும், யாழ்ப்பாண தீபகற்பகத்திற்கும் இடையிலான கலாச்சார, மொழி, பொருளாதார அடிப்படையிலான நீண்ட, நெடிய பாரம்பரிய உறவு புதுப்பிக்கப்பட வேண்டும். அதில் இந்தியா ஆர்வமாக உள்ளது.

பல ஆயிரமாண்டுகளாகவே இந்த உறவு நீடித்து செழித்து ஓங்கி இருந்தது. தமிழர் காவியமான மணிமேகலையில் யாழ்ப்பாணத்து தமிழறிஞர்கள் குறித்து புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. தமிழ இலக்கியத்திற்கு ஆறுமுக நாவலரும், சி.டபிள்யூ தாமோதரம்பிள்ளையும் ஆற்றிய சேவை மகத்தானது.

தமிழ் வளர்ச்சி போக, மதம் மற்றும் வியாபார ரீதியிலான உறவும் யாழ்ப்பாணத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே செழித்தோங்கி இருந்தது.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள துணைத் தூதரகம், இந்திய மற்றும் யாழ்ப்பாண மக்களுக்கிடையே நேரடி உறவுகளையும், தொடர்புகளையும் அதிகரிக்க உதவும்.

விரைவில், ராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையே படகுச் சேவை தொடங்கவுள்ளது. அதேபோல இலங்கையில், மடு பகுதி வழியாக தலைமன்னார் துறைமுகத்திற்கும், மடவச்சியாவுக்கும் இடையே இந்திய அரசு சார்பில் ரயில் பாதை அமைத்துத்தரப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை இலங்கை அரசு சீரமைத்து அதை சிவில் விமான நிலையமாக மாற்றும் என்று நம்புகிறோம். இதன் மூலம் பலாலிக்கும், திருச்சிக்கும் இடையே விமான சேவையை தொடங்க முடியும்.

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பது முக்கியமானது. இதற்காக இங்குள்ளவர்கள் நீண்ட காலமாக காத்துள்ளனர். இதில் இந்தியாவின் பங்கை அறியவும் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது. இதன் மூலம் அர்த்தப்பூர்வமான மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றார் கிருஷ்ணா.

முன்னதாக 1000 தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை கிருஷ்ணா தொடங்கி வைத்தார். அதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். அரியாலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

அப்போது ஆங்கிலத்தை விட்டு விட்டு கன்னடம் கலந்த தமிழில் பேசினார் கிருஷ்ணா. அவர் கூறுகையில், இந்த வீடுகளில் நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வதை காண நாங்கள் ஆர்வமாக உள்ளோம். உங்களது குழந்தைகளை நீங்கள் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார். பின்னர் யாழ்ப்பாணம் விவசாயிகள் சங்கத்திற்கு 500 டிராக்டர்களை அவர் வழங்கினார்.

இன்று தனது பயணத்தை அவர் முடித்துக் கொண்டார். முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்களை அவர் சந்திப்பதாக இருந்தது.

ஆனால் திடீரென அது ரத்து செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்து அக்கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில், காலையில் கிருஷ்ணாவை சந்திப்பதாகஇருந்தோம். ஆனால் கூட்டத்தை பிற்பகலுக்கு தள்ளி வைப்பதாக தகவல் வந்தது. ஆனால் கடைசி வரை கிருஷ்ணாவை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இறுதியில் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஹம்பந்தோட்டாவில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பின்னர் எங்களை கிருஷ்ணா சந்திப்பார் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நேரடியாக கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்குப் போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கிருஷ்ணாவை எங்களால் சந்திக்க முடியவில்லை என்றார்.

கிருஷ்ணா தங்களை சந்திக்காமல் இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டது தமிழர் தலைவர்களை பெரும் அதிருப்தியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X