இன்று நாங்கள் பிறந்தோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

Oneindia.in பிறந்து இன்றுடன் 5 ஆண்டுகளாகிறது.

2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி Oneindia.in பிறந்தது. அதற்குள் ஓடி விட்டனவா 5 ஆண்டுகள் என்று சற்று பிரமிப்பாகவே உள்ளது. அதேசமயம், பிரமாதமான வளர்ச்சியை நினைத்துப் பூரிப்பாகவும் உள்ளது.

உலக மக்களைப் போல, இந்திய மக்களைப் போல, தமிழக மக்களைப் போல Oneindia.in குழுமத்திற்கும் 2010ம் ஆண்டு நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாகவே கழிந்துள்ளது. எங்களை கரம் பிடித்து ஐந்து ஆண்டுகளைக் கடந்து கூட்டி வந்துள்ள வாசகர்கள், விளம்பரதாரர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் ஒரு ராயல் சல்யூட் வைக்கிறோம். நீங்கள் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது.

Oneindia

2006ல் நாங்கள் பிறந்தபோது, பெயரிடப்படாமலேயே இந்த இணைய உலகில் தவழ விடப்பட்டோம். பிப்ரவரியில்தான் Oneindia.in என்ற பெயரை நாங்கள் அடைந்தோம். அநத்ப் பெயருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, இன்று வரை எங்கள் மீதான உங்களின் அன்பும் தொடருகிறது.

நாங்கள் பிறந்த அந்த காலகட்டம் மறக்க முடியாத நல்லனுபவத்தை எங்களுக்குக் கொடுத்தது. ஒரு புதிய பரிமாணத்திற்குள் நாங்கள் புகுந்தபோது ஒருபக்கம் பதட்டமும், இன்னொரு பக்கம் உணர்ச்சி மேலிடலும் கூடவே இருந்தது. வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்த உணர்வை அடைந்தோம்-கூடவே பய பூச்சிகளும்.

காரணம், 2006ம் ஆண்டு இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் அவ்வளவு பெரிதாக இல்லை. நாங்களும் கூட ஒரு வித்தியாசமான இடத்தில்தான் அப்போது நின்றிருந்தோம்-அது இந்திய மொழிகள் என்ற புதிய தளம். பிராந்திய மொழிகளை வைத்து இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று விளம்பரதாரர்கள் விழித்தனர். பிராந்திய மொழிகளை முதன்மையாகக் கொண்ட தளங்களுக்கு விளம்பரங்களைக் கொடுக்க அப்போது அவ்வளவு தயக்கம் இருந்தது.

இருப்பினும் நாங்கள் தளரவில்லை. எங்களது வரி விளம்பரத் தளமான click.in-ஐ தொடங்கினோம். இந்திய மொழிகளில் இதை ஆரம்பித்தபோது, அப்படி செய்த முதல் இணையத்தள நிறுவனம் என்ற பெயரும், பெருமையும் எங்களுக்குக் கிடைத்தது.

அப்போது இருந்த சூழ்நிலையை மட்டும் பார்க்காமல், எதிர்காலக் கண்ணோட்டத்தோடு நாங்கள் திட்டமிட்டு அடியெடுத்து வைத்தோம். இணையத்தில் பிராந்திய மொழிகள் தான் வரும் காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை அடையும் பெறும் என்பது எங்களது அசைக்க முடியாத நம்பிக்கை.

இணையத்தள சேவையில் ஈடுபடும் அனைவரும் சந்திக்கும் முதல் பிரச்சனையே நிதி தான். அது எங்களுக்கும் வந்தது. இந்திய மொழியிலான சேவை மீதான எங்களது ஆர்வத்தையும், நாங்கள் கொண்ட வேகத்தையும் கவனிக்க யாரும் முன்வரவில்லை. இணையத்தள உலகில் இந்திய மொழிகளுக்கு எங்கு இடம் கிடைக்கப் போகிறது என்ற அலட்சியமும் கூடவே இருந்தது.

அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, புரிய வைக்க நிறைய பாடுபட வேண்டியிருந்தது. ஆனால் அதில் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதே உண்மை. இருந்தாலும் 'ரிஸ்க்' எடுத்தோம், தளராமல் உழைத்தோம். அந்த உழைப்புக்கு உறுதுணையாக எங்களுக்கு நல்ல ஊழியர்கள் கிடைத்தனர். தேனீக்களை விட சுறுசுறுப்பான அவர்களின் உறுதுணையுடன் நாங்கள் முன்னேற ஆரம்பித்தோம்.

இந்த நேரத்தில் நடந்த சில சுவராஸ்யங்களையும் சொல்லியாக வேண்டும். எங்களது நிறுவனத்தில் இளைஞர்களாக, பேச்சிலர்களாக வந்து சேர்ந்த பலரும் திருமணம் செய்து குடும்பஸ்தர்கள் ஆனார்கள். இதனால் அலுவலகத்தில் அவர்கள் இருக்கும் நேரம் சற்று குறைந்தது (கல்யாணமான புதிதாச்சே!). கல்யாணமான பெண் ஊழியர்கள் பலர் தாய்மைப் பேறை அடைந்தனர். மேலும் சில ஊழியர்கள் 40 வயதையும் எட்டிப் பிடித்து 'பெரியவர்கள்' ஆனார்கள். இருந்தாலும் எங்களது வேகத்திற்கு எதுவும் முட்டுக்கட்டையாக மாறவில்லை.

அத்தனை பேரின் இலக்கும் ஒன்றாகவே இருந்தது- அது வெல்ல வேண்டும் என்பதே. நிதிப் பிரச்சனைகள் தொடர்ந்த போதிலும் அனைவரும் இணைந்து அளித்த உழைப்புக்கு பலன் கிடைத்தது.

2010ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் நாங்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. ஏப்ரல் மாதம் நாங்கள், ராஜேஷ் ஜெயினின் நெட்கோர் நிறுவனத்தின் அங்கமானோம். அந்த நிமிடம் முதல் நெட்கோர், எங்களுடன் இணைந்து பல்வேறு புதிய பரிமாணங்களில் ஒன்இந்தியாவை கொண்டு செல்ல பலமாக முயன்று வருகிறது. இரு நிறுவனங்களின் இணைப்பு பெரும் பலன்களைத் தர ஆரம்பித்துள்ளது.

அக்டோபரில் நாங்கள் புது 'மனை' புகுந்தோம். கூடுதல் வசதிகள், நல்ல கட்டமைப்பு என வசதியான அலுவலகத்துக்கு இடம் பெயர்ந்தோம்.

இந்தியாவில் இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்களை சென்றடைவதே எங்களது லட்சியம். இருப்பினும் அதில் இன்னும் வேகம் பிடிக்கவில்லை என்பதையும் நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அதேசமயம், எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம் ஒன்இந்தியாவை கொண்டு சென்று உட்கார வைக்க கடுமையாக உழைத்து வருகிறோம். பிராட்பேண்ட் வயர்லஸ் முழு வீச்சில் அமலுக்கு வரும்போது இது நிறைவேறும் என்று நம்புகிறோம்.

இந்தியாவில் தற்போது நிகழ்ந்து வரும் முக்கியப் புரட்சிகளில் ஒன்று மொபைல் போன் ஊடுறுவல். இன்று மொபைல் போன் இல்லாத கையோ, சட்டைப் பையோ இல்லை எனலாம். எனவே அதிலும் ஒன்இந்தியா தற்போது நுழைந்துள்ளது. வாப் மற்றும் எஸ்எம்எஸ் என இரு தளங்களிலும் ஒன் இந்தியாவை மொபைலில் பிடிக்க முடியும், படிக்க முடியும். இந்த நேரத்தில் ஒரு சோதனை- அது இந்தியாவில் தற்போது உள்ள மொபைல் போன்களில் பெரும்பாலானவற்றில் இந்திய மொழிகளைப் படிக்க முடியவில்லை. சில செல்போன்கள் இந்திய மொழிகளை ஏற்பவையாக உள்ளன . இது சற்றுப் பின்னடைவான ஒன்றுதான். இருந்தாலும் நாங்கள் விடுவதாக இல்லை. கடந்த செப்டம்பரில் நாங்கள் நியூஸ்ஹன்ட்டில் ஆரம்பித்த சேவை மிகப் பெரும் வெற்றியை அடைந்துள்ளது.

இந்திய மொழிகளில் எங்களது சேவைகளை மேலும் அதிகரிக்க
முன்னுரிமை கொடுத்து வருகிறோம். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. கிரிக்கெட் ஸ்கோர் கார்டுகளை நாங்கள் இந்திய மொழிகளில் கொடுத்து வருகிறோம். அது எங்களது வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இந்திய மொழிகளை கொண்டு வந்து சேர்த்து வருகிறோம். தற்போது சில பெரிய மீடியா நிறுவனங்கள் இந்திய மொழிமயமாக்கலில் குதித்துள்ளன. அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

வரும் 15ம் தேதியுடன் விக்கிபீடியா தனது பத்தாவது ஆண்டை எட்டிப் பிடிக்கவுள்ளது. இந்திய மொழிகளின் இணையதள பயன்பாட்டை விக்கிபீடியா அதிகம் வலியுறுத்தி வருகிறது. விக்கீபிடியாவின் பக்கங்களை இந்திய மொழிகள் வேகமாக நிரப்பி வருவதையும் நாம் காண்கிறோம். இது இந்திய மொழிகளின் இணையத்தள முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

இப்படி எப்பக்கமும் இந்திய மொழிகளின் ஆதிக்கத்தின் கீழ் இணயைத்தள உலகம் கைவசமாகி வரும் சூழலில், வரும் 2011ம் ஆண்டும் மிகச் சிறந்த 'இந்திய மொழி இணையத்தள ஆண்டாக' மலரும் என்று நம்புவோம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் காட்டிய அளப்பறிய அன்பும், கொடுத்த அளவில்லாத ஆதரவும் இன்று வரை அப்படியே தொடர்வதைப் போல வரும் காலத்திலும் அது நீடித்து வியாபித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

வரும் நாட்களில் இன்னும் சிறந்த சேவைகளுடன், கூடுதல் வலிமையுடன், புத்தும் புது வீச்சுடன் உங்களை சந்திப்போம் என்று கூறி விடைபெறுகிறேன்.

பி.ஜி.மகேஷ்,
தலைமை செயல் அதிகாரி

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oneindia.in completes 5 years of operation. It was not an easy journey but was fun. I would like to share my thoughts on the journey so far. We believe in languages and feel honored to serve the language community in India, after all the non-English speaking community is the majority in India but under served on the internet. We promise to bring you better things in the coming years.