கட்சித் தாவும் பாமக திமுக கூட்டணியில் நீடிக்குமா? இல.கணேசன் கேள்வி
நெய்வேலி: கூட்டணி தாவல் கொள்கையுள்ள பாமக திமுக கூட்டணியில் நீடிப்பது சந்தேகம் தான் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்தான் அவர் காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக கூட்டணி வைக்காதா என்று கேள்வி கேட்டிருந்தார். இந்த நிலையில், திமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்று கேட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று இல. கணேசன் நெய்வேலியில் அத்தொகுதி பாஜக வேட்பாளர் கற்பகத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
திமுக அரசின் அவலங்களை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொளள வேண்டியதில்லை. திமுகவுக்கு பதிலாக அதிமுகவை தேர்வு செய்யலாம் என்று நினைப்பது பெரிய தவறு. இரண்டு கட்சிகளிலுமே குடும்ப ஆட்சி தான். என்ன அதிமுகவில் சற்று வித்தியசாம உள்ளது.
இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலமாக குஜராத் திகழ்வதற்கு காரணம் நரேந்திர மோடி ஆட்சி தான். அவர் அங்குள்ள மக்களை பிச்சை எடுக்கவிடவில்லை, உழைக்க வைத்திருக்கிறார். விவசாயியின் தனிநபர் வருமானத்தை உயர்த்தியிருக்கிறார். அங்கெல்லாம் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படுகிறது. குஜராத் அரசு சார்பில் உலக வங்கியிலே ரூ.1 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் தமிழக அரசோ உலக வங்கியிலே ரூ. 1 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. இது தான் தமிழகத்தின் வளர்ச்சியா? அதற்கு நீங்கள் துணை போக வேண்டுமா?
கருணாநிதியின் ஆட்சிக்கு துணைபோகும் பாமக நிறுவனர் ராமதாஸ் அடிக்கடி இங்கும் அங்கும் மாறுபவர். திமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு கூட இது தொகுதி உடன்பாடு தான், கூட்டணி கிடையாது என்றார். அவர் எப்படி இந்தக் கூட்டணியில் நீடிப்பார் என்றார்.
திமுக-காங். கூட்டணி நிரந்தரமன்று
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வெங்கடகிருஷ்ணனை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியாதவது,
அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழக மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் முக்கியமான தேர்தல். கடந்த 60 ஆண்டு காலமாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் அப்படி என்ன செய்துள்ளனர். குடிக்க குடிநீர் இல்லை, கிராமங்களில் சாலை வசதி, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் இல்லை.
தினமும் 6 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. யார் துணையும் இன்றி பாஜக 190 தொகுதிகளில் தனது சொந்த பலத்தில் நிற்கிறது.
திமுக, காங்கிரஸ் கூட்டணி நிரந்தரம் கிடையாது. பாமக குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகளும் நம்பிக்கை இல்லாதவர்கள். இவர்களுக்கு மாற்றான கட்சி பாஜக தான்.
இலவத மிக்சி, கிரைண்டர் தருவதாக திமுக அறிவித்துள்ளது. மின்சாரம் இல்லாமல் அவற்றை வைத்து என்ன செய்வது. மக்கள் கேட்பது இலவசமல்ல, அடிப்படை வசிதயும், வேலையும் தான்.
வாஜ்பாய் ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலையானது. எண்ணூர் துறைமுகம் அமைக்கப்பட்டது.
விமான நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தி, எல்லா நிலையிலும் தேசத்தை ஒருங்கிணைந்தோம். ஊழல் நிறைந்த திமுகவை தோற்கடிப்பதன் மூலம் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அத்தகைய மாற்றம் ஏற்பட பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.
இந்தியாவிலேயே மிக்ப பெரிய ஊழல் கட்சி திமுக: கட்காரி
தமிழகத்தில் பிரசாரம் செய்ய வந்துள்ள பாஜக தலைவர் நிதின் கட்காரி நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழக மக்கள் ஊழல் பற்றி விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் உள்பட பல ஊழல்கள் நடந்திருக்கின்றன. 2ஜி ஊழலில் ராசா மீது மட்டுமின்றி அவரை தூண்டியவர்கள், ஆலோசனை வழங்கியவர்கள், நடைமுறைப் படுத்தியவர்கள் என பலர் மீது ஆதாரங்கள் இருக்கிறது.
காமன்வெல்த் ஊழலில் நேரு ஸ்டேடியத்தை அமைக்கவே ரூ. ரூ.150 கோடி தான் செலவாகும். ஆனால் அதை புதுப்பிக்க ரூ. 980 கோடி செலவழித்திருக்கிறார்கள்.
காங்கிரஸும், திமுகவும் ஊழல் கூட்டணி. குடும்ப அரசியல் நடத்தும் கூட்டணி. ஊழல் செய்து பணம் சம்பாதித்து அதை தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பது மோசமான அரசியல் ஜனநாயகம். தேர்தல் ஆணையம் இதுவரை ரூ. 50 கோடி பறிமுதல் செய்துள்ளது பாராட்டுக்குரியது.
ஊழல் மற்றும் குடும் அரசியலை எதிர்ப்பவர்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். எங்களால் தான் ஊழல் அற்ற, வெளிப்படையான நிர்வாக்த்தை தர முடியும். பாஜக ஆளும் 9 மாநிலங்களிலும் மின் ஆளுமை ஆக்கப்பட்டுள்ளது. இது ஊழலை தடுக்கும்.
ஊழலுக்கு எதிராக அண்ணா ஹஸாரே போராட்டம் நடத்துவதை வரவேரற்கிறோம்.
நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்காக திமுக பொதுக்குழு கண்டனம் தெரிவி்த்துள்ளது பற்றி எனக்கு கவலையில்லை. நாட்டிலேயே மிகப் பெரிய ஊழல் கட்சி திமுக தான். இதற்கு பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. கண்டனம் தெரிவிப்பதை விட என் மீது வழக்கு தொடரலாமே? அதையும் சந்திக்கத் தயாராக உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications