For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக நிச்சயம் மீண்டும் ஆட்சியமைக்கும்: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

திருவாரூர்: திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முதல்வர் கருணாநிதி முதன்முதலாக தனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிடுகிறார். கடந்த மாதம் 23ம் தேதி திருவாரூரில் இருந்து பிரசாரத்தை துவங்கினார். நேற்றும், தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார்.

திருவாரூரில் உள்ள வாழவாய்க்கால் ரவுண்டானாவில் இருந்து துவங்கி அவர் கிடாரங்கொண்டான், அடியக்கமங்கலம் கடைத்தெரு ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

வரும் சட்டசபை தேர்தல் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதாகும். உங்களின் ஆதரவை உதயசூரியன் சின்னத்திற்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் கடந்த 5 முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்து ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு அற்புதமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன் என்பதை நீங்களே அறிவீர்கள்.

இது நான் பிறந்து, வளர்ந்து, படித்து வாழ்ந்த பகுதி. தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை பின்பற்றி பணியாற்றிய இங்கிருந்து என்னை தேர்வு செய்ய வேண்டும். குளித்தலை தொடங்கி, தஞ்சை, சென்னை ஆகிய இடங்களில் நான் வெற்றி பெற்று உள்ளேன். ஆனால் தாய் வீட்டில் இருந்து தேர்வு செய்யப்படுவது தான் அனைத்திலும் பிரதானமானது.

உங்கள் வீட்டு பிள்ளையாக, சகோதரனாக, அண்ணன், தம்பிகளில் ஒருவனாக உங்களை தேடி வந்துள்ளேன். எனக்கு வெற்றியை தேடி தந்தால் உங்களுக்காக பாடுபடுவேன்.

உத்தரவிடக்கூடிய முதல்வர் பதவியில் இருந்தாலும் நான் உங்களிடம் உத்தரவு கேட்டு வந்துள்ளேன். இதுவரை செய்தது போல இனியும் செய்யவிருக்கும் திட்டங்களை பட்டியலிட்டுள்ளேன். அவற்றை நிறைவேற்ற எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

கடாரங்கொண்டான் பற்றி நினைக்கும் போது ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் கடல் கடந்து சென்று வெற்றி பெற்று திரும்பும்போது கடாரங்கொண்டான் என பெயர் சூட்டினர். அது போல இந்த பகுதி கடாரங்கொண்டான் என்று இருந்து நாளடைவில் கிடாரங்கொண்டான் என்று ஆகி விட்டது. இந்த பகுதிக்கு திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு கல்லூரி அமைக்கப்பட்டு அரசியல் காரணத்திற்காக அதற்கு திரு.வி.க. கலைக்கல்லூரி என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த கல்லூரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. கிராமப்புற, ஏழை, பாட்டாளி, சாதாரண, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் படிப்புக்காக இதே போன்று நூற்றுக்கணக்கான கல்லூரிகள் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.

காமராஜர் ஆட்சியில் ஆரம்பப்பள்ளி உருவாக்கப்பட்டது. திமுக ஆட்சியில் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் இன்று லட்சக்கணக்கான கிராமப்புற மக்கள் பட்டதாரிகளாகி உள்ளனர். தமிழகத்தில் கல்வி பெருக திமுக ஆட்சி தான் காரணம். இது தொடர வேண்டும். இங்கு முகமலர்ச்சியோடு, எழுச்சியோடு என்னை வரவேற்றதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். தமிழக மக்களை காப்பாற்றவே வாக்கு கேட்டு வந்துள்ளோம் என்றார்.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி ஆண்டிபாளையம் கடைத்தெரு, கீழ்வேளூர் கடைவீதி, சேமங்கலம் பஸ் நிலையம் அருகில், காரியங்குடி முக்கூட்டுசாலை, தப்பளாம்புலியுர் கடைத்தெரு, அலிவலம் கோயிலடி, புலிவலம் கடைத்தெரு, மாங்குடி கடைத்தெரு, தென்னவராயநல்லூர் கடைத்தெரு, மாவூர் கடைத்தெரு, கீழ்வேளூர் தொகுதியில் உள்ள நால்ரோடு, புதூர் பாலம் அருகில், திருநெல்லிக்காவல் ரெயில்வே கேட் அருகில்,செருவாமணி மேல்நிலை நீர்த்தேக்க தெட்டி அருகில், வடபாதிமங்கலம் பஸ் நிலையம் அருகில், கூத்தாநல்லூர் இந்தியன் வங்கி அருகில், லட்சுமாங்குடி சாலை சந்திப்பு, பூதமங்கலம், வேளுக்குடி, கமலாபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து விட்டு நிறைவாக தேவர்கண்டநல்லூரில் பிரசாரம் செய்தார்.

ஒரே நாளில் மட்டும் முதல்வர் கருணாநிதி 24 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு வழி நெடுகிலும் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக முதல்வர் கருணாநிதி சீர்காழிக்கு வந்தார். அவருக்கு பஸ்நிலையம் எதிரில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் உஞ்சைஅரசனை ஆதரித்து பேசியதாவது,

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சீர்காழி தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் உஞ்சைஅரசனுக்கு மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மெழுகுவர்த்தி தன்னை உருக்கி கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் வெளிச்சம் தருவதைப்போன்று உஞ்சைஅரசனும் உண்மையாக உழைத்து ஊருக்கு நிச்சயம் நல்லது செய்வார்.

உங்களது உற்சாகமான எழுச்சிமிக்க வரவேற்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் திமுக தோழமை கட்சியான விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் கரத்தை வலுப்படுத்துகின்ற வகையில் மகத்தான வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் ரூ.1.51 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தமிழிசைமூவர் மணிமண்டபத்தை பிரசார வேனில் இருந்தபடியே பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து தென்பாதி, சட்டநாதபுரம் வழியாக வைத்தீஸ்வரன்கோவில் வந்தார். அங்கு மெழுகுவர்த்தி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார். பின்னர் வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து புறப்பட்டு கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருநன்றியுர், சோழசக்கரநல்லூர் வழியாக மயிலாடுதுறை வந்தார்.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு திமுக கூட்டணி கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.ராஜகுமாரை ஆதரித்து பேசினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மங்கைநல்லூர் வந்தார். அங்கு பூம்புகார் சட்டசபை தொகுதி பாமக வேட்பாளர் அகோரத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பாக பூம்புகார் தொகுதியின் பாமக வேட்பாளர் அகோரம் மாங்கனி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். உங்களின் மேலான வாக்குகளை மாங்கனி சின்னத்திற்கு வழங்கி வெற்றி பெறச்செய்திட வேண்டும். ஜனநாயக முற்போக்கு கூட்டணி தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளடக்கிய வெற்றி கூட்டணி.

இலக்கிய கலைநயம் பொருந்தியது பூம்புகார். பூம்புகாருக்கும் திமுகவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கடலில் மூழ்கிய பூம்புகாரை மீட்டெடுத்து புதிய நகரமாக்கி சட்டசபை தொகுதியாக மாற்றப்பட்டது. ஆகவே பூம்புகாரை உருவாக்கியது திமுக தான் என்றார்.

இன்று காலை காட்டூரில் உள்ள தனது தாயாரின் நினைவிடத்தில், கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.

பிரச்சாரத்தை முடித்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், திமுக நிச்சயம் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார்.

எத்தனை இடங்களில் திமுக கூட்டணி வெல்லும் என்று கேட்டதற்கு, ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெல்வோம் என்றார்.

English summary
Tamil Nadu CM Karunanidhi has been campaigning in his own constituency namely Thiruvarur from yesterday. He has campaigned in 24 places in one day. He has asked the people to vote for DMK alliance and let him come back to power for the 6th time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X