For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சைதை துரைசாமிக்கு கை கொடுத்த பழைய மாணவர்கள்...ஜெயிப்பாரா ஸ்டாலின்?

By Shankar
Google Oneindia Tamil News

Stalin
கொளத்தூரில் துணை முதல்வர் ஸ்டாலின் ஜெயிப்பாரா? இந்தக் கேள்விதான் இன்றைக்கு மீடியா மற்றும் மக்கள் பரபரப்பாகப் பேசும் டாபிக்காக உள்ளது.

காரணம் இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் சைதை துரைசாமி செய்திருக்கும் 'வேலைகள்' அப்படி!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கையோடு, அத்தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுகிறார் என்றது வெளியில் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். அ.தி.மு.க., தரப்பில் அத்தொகுதியை யாருக்கு கொடுப்பது என்பது முடிவாகாமல் இருந்தது. இறுதியாக, அத்தொகுதியை தனது பட்டியலில் சேர்த்த அ.தி.மு.க., ஸ்டாலினை எதிர்த்து சைதை துரைசாமியை அறிவித்தது.

உண்மையில் சைதை துரைசாமி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தொகுதியை ஜெயலலிதா தரவில்லை. பழைய ஜானகி அணியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளித்த மாதிரியும் இருக்கும், தேர்தலில் கவிழ்த்த மாதிரியும் இருக்கும் என்ற ஒரு கல் இரு மாங்காய் கணக்கில் அவருக்குத் தரப்பட்டதுதான் கொளத்தூர். இல்லாவிட்டால் அவருக்கு சைதாப் பேட்டை தொகுதியையே கொடுத்திருப்பாரே ஜெயலலிதா!

ஆனால், சைதை துரைசாமி மீதுள்ள இமேஜ், அவரது கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் செய்த 'கிரவுண்ட ஒர்க்' எல்லாமாகச் சேர்ந்து, ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சைதை துரைசாமி. எம்ஜிஆரால் பல வசதிகளைப் பெற்றவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதாவால் பழிவாங்கப்பட்டவர். ஆனாலும் கட்சியின் விசுவாசியாகவே தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் அரசியலே வேண்டாம் என பட்டும் படாமலும் இருக்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் தமிழக மாணவர்களின் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ் உயர் கல்விக்கான வழிகாட்டும் கல்வியாளராக பொறுப்பேற்றார். இதற்காக மனித நேய மையத்தை நடத்திவருகிறார். எந்த மாணவனிடம் ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளாமல், ஆனால் தன் சொந்தப் பணத்தை செலவழித்து மனித நேய மையத்தை அவர் நடத்தி வருகிறார். இதில் படித்த பலர் ஐஏஎஸ், குரூப் ஒன் தேர்வுகளில் வென்று பதவிகளில் உள்ளனர்.

"தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தன்னை தேர்ந்தெடுத்தால் ஐ.ஏ.எஸ்., அகடமி உருவாக்கி தொகுதி மாணவ, மாணவியரின் முன்னேற்றத்திற்கு உழைப்பேன்' என்பதுதான் இவர் அளித்த ஹைடோக் உறுதிமொழி. அவருக்கு ஆதரவாக, மனிதநேய அறக்கட்டளை மாணவர் மன்றத்தினர், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதும் மாணவர்கள் பிரசாரம் மேற்கொண்டது, ஒட்டுமொத்த பெற்றோரையும் யோசிக்க வைத்தது என்றால் மிகையல்ல.

வாக்குப் பதிவு நாளன்று பிற்பகலுக்குப் பிறகுதான், நடுத்தர மற்றும் வசதியான படித்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அணி அணியாக ஓட்டுச் சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். அவர்களிடம் ஏற்கெனவே வீடு வீடாகப் போய் சைதை துரைசாமியும் அவரது மாணவர்களும் வாக்கு கேட்டு வந்திருந்தனர். ஜெயித்தால், கொளத்தூரில் கல்வி மையங்கள் உறுதி என கற்பூரமடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறிவிட்டு வந்துள்ளார் துரைசாமி.

ஸ்டாலினும் அவருக்கு சளைக்காமல், அரசு இதுவரை செய்த சாதனைகளைக் கூறினார்.

முக்கியமாக இந்த அரசு மீது வைக்கப்பட்ட பெரிய குற்றச்சாட்டான மின்வெட்டை, சரிசெய்ய 5 புதிய மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதையும், அடுத்த ஆண்டே அவை செயல்பாட்டுக்கு வரவிருப்பதையும் சுட்டிக் காட்டினார், விவரங்களுடன்.

ஸ்டாலின் மனைவி துர்காவும் நடுத்தர வர்க்கத்துப் பெண்களை கூட்டி, அரசின் சாதனைகள், இனி செய்யப் போகும் விஷயங்கள் குறித்து பொறுமையாக விளக்கினார். இந்தத் தொகுதியில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை என்று எதுவுமே இல்லை. ஆனால் அதிமுகவுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ்.

இதுதான் திமுகவினரை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. "இந்தத் தொகுதியில் ஸ்டாலின் ஜெயிக்கிறார் என்றால், வித்தியாசம் சில நூறு ஓட்டுகளில்தான் இருக்கும். துரைசாமி ஜெயித்தாலும் இதே நிலைதான்," என்கிறார்கள் தேர்தல் ஏஜென்டுகளாகப் பணியாற்றிய சில திமுகவினரே!

தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 924 ஓட்டுகளில், 1 லட்சத்து 41 ஆயிரத்து 906 ஓட்டுகள் (68.25) பதிவாகியுள்ளன. இது வழக்கத்தை விட 18-20 சதவீதம் அதிகம்.

"இந்த 20 சதவீதத்தினர்தான் முடிவையும் நிர்ணயிக்கப் போகிறவர்கள். இந்தப் புதியவர்களில் பலர் பழைய அதிமுக ஆட்சியைப் பற்றி பத்திரிகைகளில் கூட பெரிதாக படித்தறியாதவர்கள். 2 ஜி முறைகேடுகள் பற்றி முழுமையாகத் தெரியாமலே, தீர்ப்பெழுதும் மனோபாவம் கொண்ட உயர்நடுத்தர வர்க்கத்தினர். இவர்களுக்கு இலவச செருப்பு ஊழல், சுடுகாட்டு ஊழல் உள்ளிட்ட 16 வித விதமான ஜெ காலத்து ஊழல்கள் பற்றி தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அதுதான் திமுகவினரைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது!", என்கிறார் கொளத்தூரில் தேர்தல் கண்ப்புக்காக சென்று வந்த ஒரு மூத்த பத்திரிகையாளர்.

இதையல்லாம் தாண்டி முக ஸ்டாலின் ஜெயித்தால், அது அடுத்த முதல்வர் என்ற அந்தஸ்துக்கு அவர் செல்ல மக்கள் தந்த அங்கீகாரமாகத் திகழும்!!

English summary
The battle is unpredictable in Koluthur constituency where the Deputy CM M K Stalin contested against the strong AIADMK candidate Saidai Duraisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X