For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காற்றாலைகளுக்கு ரூ 1200 கோடி பாக்கி வைத்த மின்வாரியம்: உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

By Shankar
Google Oneindia Tamil News

Wind mills
கோவை: தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன. ஆனால், இவர்களுக்கு ரூ 1200 கோடியை அரசு பாக்கி வைத்துள்ளதால், உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை, நெல்லை, கன்யாகுமரி, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இவற்றிலிருந்து தினமும் 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் மொத்த மின்சார உற்பத்தியில் 30 சதவீதம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது.

காற்று சாதகமாக உள்ள போதுதான் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி சாத்தியமாகும்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காலமான மே மாதம் முதல் அக்டோபர் வரையுள்ள 6 மாத காலத்தில் காற்றாலைகளின் மொத்த உற்பத்தியில் 85 சதவீதமும், மீதி 15 சதவீத மின்சாரம், அக்டோபர் முதல் ஏப்ரல் வரையுள்ள காலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சொந்த தொழிற்சாலைகள்:

தமிழகத்தில் உள்ள காற்றாலை நிறுவனங்களில் 50 சதவீத நிறுவனங்கள் தாங்களே சொந்தமாக தொழிற்சாலைகள் வைத்துள்ளன. மீதி 50 சதவீத காற்றலை நிறுவனங்கள் தொழிற்சாலைகளை வைத்திருக்கவில்லை.

தொழிற்சாலைகள் வைத்துள்ள காற்றாலை நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மின்சார வாரியத்திற்கு கொடுத்து விட்டு அதே தொகைக்கு தங்கள் தொழிற்சாலைக்கு தேவைப்படும் மின்சாரத்தை எடுத்துக் கொண்டு அதற்கான பில் செலுத்துவதில்லை.

தொழிற்சாலை இல்லாத காற்றாலை நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அப்படியே மின்சார வாரியத்திற்கு கொடுத்து விடுகின்றன.

அப்படிக் கொடுக்கப்பட்ட மின்சாரத்துக்குதான் இதுவரை ரூ 1200 கோடியை பாக்கியாக வைத்துள்ள மின்சார வாரியம்!

கூடுதலாக 1000 மெகாவாட்:

கடந்த 2009-ம் ஆண்டு 2200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வந்த காற்றாலைகள் 2010-ம் ஆண்டு 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தன. இந்த ஆண்டு சுமார் 3 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய காற்றாலை நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன.

அதற்கேற்றாற் போல கூடுதலாக காற்றலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மின்சார வெட்டு குறையும் என்று தெரிகிறது.

ஆனால் கடந்த 10 மாதங்களாக உரிய முறையில் பணம் கொடுக்காததால், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவரும், மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினருமான கே.கஸ்தூரி ரங்கையன் கூறுகையில், " கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் வரைதான் மின்வாரியம் காற்றாலை மின்சாரத்துக்கான தொகையை பட்டுவாடா செய்யதுள்ளது. அதன்பிறகு பணம் செலுத்தவில்லை. மின்சார வாரியம் இன்னும் ஆயிரத்து 200 கோடி ரூபாயை காற்றாலைகளின் உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டும்.

இதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கி காற்றாலைகளை அமைத்தவர்கள், கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இதுகுறித்து கேட்டதற்கு மின்சார வாரியத்தில் போதிய நிதி இல்லாததால் பணத்தை பட்டுவாடா செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இதனால் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

குறைந்த தொகைதான்...

காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு தமிழக மின்சார வாரியம் 2 ரூபாய் 75 பைசா தருகிறது. 2006-ம் ஆண்டுக்கு முன்பு காற்றாலைகள் அமைத்தவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2,75-ம், 2006 முதல் 2009 வரை காற்றாலைகள் அமைத்தவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.95-ம், 2009-க்கு பிறகு காற்றாலைகள் அமைத்தவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3.39-ம் தமிழக மின்சார வாரியம் வழங்கி வருகிறது.

ஆனால் மராட்டியம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் காற்றாலை மின்சாரத்துக்கு அதிக தொகை வழங்குகின்றன. மற்ற மாநிலங்களில் காற்றாலை உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளி மார்க்கெட்டில் ஒரு யூனிட் ரூ.6 முதல் ரூ.15 வரை விற்கிறார்கள். இது போன்ற நிலைமை தமிழகத்தில் இல்லை.

எனவே காற்றாலைகளுக்கு ரூ. ஆயிரத்து 200 கோடி பாக்கி வைத்துள்ள மின்சார வாரியம் அந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தேனி, தென்காசி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் புதிய காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கும் உதவ வேண்டும்",என்றார்.

கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் உடனே மின்சாரத்தை துண்டிக்கும் மின்வாரியம், அந்த மின்சாரத்தையே உற்பத்தி செய்பவர்களுக்கு 10 மாதங்களாக பாக்கி வைத்திருப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் மின் உற்பத்தியாளர்கள்!

English summary
Due to the Tamil Nadu Electricity board's heavy dues up to Rs 1200 cr to the wind mill owners, it is said that the production of electricity would be paralysed in coming days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X