For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சியில் சூறாவளி: தண்டவாளத்தில் மரம் விழுந்து மின் துண்டிப்பு-ரயில்கள் நிறுத்தம்-பயணிகள் தவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Train
திருச்சி: திருச்சி, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.

இதில் திருச்சி அருகே லால்குடி பகுதியில் காட்டூர்-புளியம்பட்டி இடையே நள்ளிரவு 11.30 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் மரங்கள் வேரோடு பெயர்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.

காட்டூரில் இருந்து புள்ளம்பாடி வரை பல இடங்களில் தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் ரயில் பாதையின் மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளும் அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு திருச்சி- சென்னை இடையே ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 12 ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

சென்னை நோக்கி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் சிறப்பு ரயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

டீசல் என்ஜின்கள் வரவழைக்கப்பட்டு இந்த ரயில்கள் மயிலாடுதுறை கடலூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புள்ளம்பாடியிலும், ராமேஸ்வரம், அனந்தபுரி ரயில்கள் கல்லக்குடி பளிக்காநத்தம் பகுதியிலும், முத்துநகர் அரியலூரிலும், பொதிகை எக்ஸ்பிரஸ் செந்துறையிலும், சம்பர்க்கிராந்தி எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரத்திலும், ஹெளரா எக்ஸ்பிரஸ் திருச்சியிலும், மங்களூர் எக்ஸ்பிரஸ் ஈச்சங்காட்டிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.

மயிலாடுதுறை மெயின் லைன் வழியாக மாற்றி விடப்பட்டதால் இந்த ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக இயங்கின.

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.15க்குப் பதிலாக 9 மணிக்கு மதுரை வந்ததடைந்தது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு வந்தடைந்தது.

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து கிளம்பி, மினசாரம் துண்டிக்கப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டது. இந்த ரயிலை டீசல் என்ஜின் மூலம் சென்னைக்கு இழுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இது வழக்கமாக காலை 5.30 மணிக்கு சென்னை வந்தடையும். இன்று இந்த ரயில் பிற்பகல் 3 மணிக்குத் தான் சென்னை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல விருத்தாசலத்தில் இரவு 8 மணிக்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விருத்தாசலம் ரயில் நிலைய 2வது, 4வது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் விழுந்ததன.

அப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் உளுந்தூர்பேட்டைக்கும் கோ.பூவலூருக்கும் இடையே நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டவாளத்தில் கிடந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டாலும் மின்சாரம் இல்லாததால் அந்த ரயிலை இயக்க முடியவில்லை.

இதையடுத்து விருத்தாசலத்தில் இருந்து டீசல் என்ஜின் வரவழைக்கப்பட்டு அந்த ரயில் விருத்தாசலம் ரயில் நிலையம் போய்ச் சேர்ந்தது. இந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

இதே போல விழுப்புரம் குள்ளம்பாடி பகுதியிலும் கன மழையால் ரயில் என்ஜின்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மங்களுர் எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்து சேர்ந்தது.

இரவு முதல் தீவிரமாக பணியாற்றிய ரயில்வே என்ஜினியர்கள் முயற்சியால் காலை 8 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது.

அரியலூர் ரயில் பாதையில் கற்கள்:

இதற்கிடையே அரியலூர் அருகே கன மழையால் பல பெரிய கற்கள் சரிந்து ரயில் பாதையில் விழுந்தன. இதனால் அந்த வழியே செல்லும் நெல்லை, பாண்டியன், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மயிலாடுதுறை வழியாக திருப்பி விடப்பட்டன.

தற்போது கோடை விடுமுறை என்பதால் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நள்ளிரவு முதல் காலை வரை ரயில்கள் நடுவழியில் நின்றதால் பயணிகள் உணவு, குடிநீர் இன்றி பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

English summary
Heavy rains lashed Trichy and Villupuram districts yesterday night. It.. disrupted train service as tree falls on track near Trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X