2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்: பாஜக கொள்கையைத் தான் அமலாக்கினேன்- நீதிமன்றத்தில் ராசா வாதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Raja
டெல்லி: டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தான் ஒப்புதல் அளித்தார். பிரதமரின் முன்னிலையில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா சிபிஐ நீதிமன்றத்தில் வாதாடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை நான் எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே நானும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன். இதனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார்.

இந்த வழக்கில் ராசா உள்பட 14 பேர் கைதாகி திகார் சிறையில் உள்ளனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் ராசா மீது சிபிஐ மோசடி, கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு வாதம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. சிபிஐ வழக்கறிஞர் யு.யு. லலித் நேற்று முன்தினம் வாதாடுகையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவருமே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று கூறி தனது வாதத்தை முடித்தார்.

இதையடுத்து இன்று முதல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் தொடங்கியது.

அப்போது ராசா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தார். ராசாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் சுஷில்குமார் வாதிடுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை ராசா எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே ராசாவும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கறையை ஏலம் விட வேண்டாம் என்ற முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. அதையே ராசாவும் தொடர்ந்து பின்பற்றினார். இதனால் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.

ராசா தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்.

யூனிடெக், டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் பங்குகள் விற்பனை சட்டப்படியே நடந்தன. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. யூனிடெக் நிறுவனத்தின் பங்குகளை டெலிநார் வாங்கியதும் சட்டப்படி தான்.

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகளை எடில்சாட் நிறுவனம் வாங்குவதற்கு அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் தான் இதற்கான ஒப்புதல் தரப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும்.

எனக்கு (ராசா) முன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அருண் ஷோரி 26 லைசென்ஸ்களையும், தயாநிதி மாறன் 25 லைசென்ஸ்களையும் விற்றனர். அதி்ல், எதுவுமே ஏலம் விடப்படவில்லை. முதலில் வருபவர்களுக்கு முதலில் எந்த அடிப்படையில் தான் அவை விற்கப்பட்டன. அவர்கள் எந்தக் கொள்கையை பின்பற்றி அவற்றை விற்பனை செய்தனரோ அதே கொள்கையைப் பின்பற்றித் தான் நானும் 122 லைசென்ஸ்களை வழங்கினேன்.

அவர்கள் தவறு செய்யவில்லை என்றால், என்னை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்?. நான் மட்டும் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்?. 2003ம் ஆண்டு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதை நான் பின்பற்றினேன்.. அவ்வளவு தான்.

முந்தைய பாஜக அரசு வகுத்த கொள்கையின் அடிப்படையில் தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைப்பிடிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

நான் சட்டத்தை பின்பற்றியுள்ளேன். இதனால் என்னை குற்றவாளியாக்குவதே தவறு. உண்மையில் சொன்னால் எனக்கு பரிசு தான் தர வேண்டும்.

செல்போன் கட்டணத்தை இதுவரை இல்லாத அளவுக்குக் குறைத்துக் காட்டினேன். ரிக்ஷா ஓட்டுபவரில் இருந்து வீட்டு வேலை செய்பவர்கள் வரை அனைவராலும் தொலைபேசியை உபயோகப்படுத்தும் நிலையை உருவாக்கினேன். இது சமூக நீதியை நிலை நிறுத்தும் எனது கொள்கையின் வெளிப்பாடு தான்.

எனது பதவிக் காலத்தில்தான் தொலைபேசி கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு, நாடு முழுவதும் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டன. தொலைதொடர்புத் துறையில் இது புதிய சாதனை என்றார்.

இந்த விவகாரத்தில் பிரமதரையும் ப.சிதம்பரத்தையும் ராசா இழுத்துவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

(மிகக் குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை பெற்ற டிபி ரியாலிட்டி மற்றும் யூனிடெக் ஆகியவை உடனடியாக தங்களது பங்குகளை மிக அதிகமான விலைக்கு விற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அந்த நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்தன.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வைத்திருந்ததால் தான் அந்த நிறுவனங்களின் விலைகள் அவ்வளவு விலைக்கு விற்பனையாயின. இதனால், ஸ்பெக்ட்ரத்தின் விலை உண்மையிலேயே மிக அதிகமாக இருக்க, அதை மிகக் குறைந்த விலைக்கு ராசா ஒதுக்கிக் தந்து இந்த நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவினார் என்பது சிபிஐயின் வாதமாகும். மேலும் இவ்வாறு ராசா செய்த உதவிக்குக் கைமாறாக ராசாவுக்கு இந்த நிறுவனங்கள் ஏராளமான கோடிகளை அள்ளித் தந்தன என்றும், அவை மொரீஷியஸ், ஷெசல்ஸ் தீவுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டு, லண்டன், சிங்கப்பூர் வங்கிகள் வழியாக ராசாவின் பினாமிகளுக்கு வந்து சேர்ந்தன என்பதும் சிபிஐயின் வாதமாகும்).

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former telecom minister A. Raja, who is a post graduate in law, is going to argue for himself from today. While others appoint lawyers, Raja has decided to show his prowess as a lawyer. People are eager to see Raja arguing in the court.
Please Wait while comments are loading...