துப்பாக்கி சூடு சம்பவம்: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபையில் கட்சிகள் கோரிக்கை
சென்னை: பரமகுடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் பல கட்சிகளும் வலியுறுத்தின.
தமிழக சட்டசபையில் இன்று பரமக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது நடந்த விவாதம்,
செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி): பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு ஒரு துர்பாக்கியமான சம்பவம். புரட்சித் தலைவி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தற்போது நடந்துள்ள சம்பவம் கவலை அளிக்கிறது, வேதனை அளிக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் தற்போது ரூ.1 லட்சம் அறிவித்துள்ளார். அதை ரூ.3 முதல் 5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
இந்த துப்பாக்கி சூடு நடந்தது குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும்.
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): சமூக நீதிக்கு போராடி உயிர்நீத்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அமைச்சர் உதயகுமார், தமிழக அரசு டெல்லி பிரதிநிதி அசோகன் ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள். இதுபோல் ஏராளமானோர் அங்கு சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். முதலில் வெறும் 50 பேர்தான் நின்றுள்ளனர். வருபவர்களை உடனுக்குடன் போலீசார் அப்புறப்படுத்தாததால் கூட்டம் அதிகரித்துள்ளது. பிரச்சனை ஏற்பட்ட பிறகு போலீசார் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இளையான்குடி, மதுரை, பரமகுடி ஆகிய 3 இடங்களில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இது ஒரு இனக்கலவரம் அல்ல. சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை ஏற்படும் வகையில் காவல் துறையினர் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அதை விடுத்து சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டதால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான காவல் துறையினர் தண்டிக்கப்பட வேண்டும். எப்போதும் இதுபோன்ற துப்பாக்கி சூட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நஷ்டஈடும், அரசு வேலையும் வழங்க வேண்டும். இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை அரசே நடத்த வேண்டும்.
கணேஷ்குமார் (பா.ம.க.): நடந்த சம்பவத்தால் தென் மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அவசியம்தான் என்றாலும் மனித உயிர்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். போலீசார் இந்த விஷயத்தில் நிதானமாக நடந்து கொள்ளாமல் துப்பாக்கி சூடு நடத்தியது சரியல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை.
இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். இந்த சம்பவத்தின் உண்மை நிலையை தெரிந்து கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.
குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்.): இதே சட்டமன்றத்தில் முதல்வர் முன்பு பேசும் போது, போலீசாருக்கு சுதந்திரம் வேண்டும் என்றார். ஆனால் நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் இப்படி நடந்து கொண்டது சுதந்திரமில்லை. ஒரு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது ஜான்பாண்டியனை கைது செய்தது போலீசாரின் புத்திசாலிதனமான நடவடிக்கை இல்லை. அதனால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே கொடுத்த நிதி போதாது. ரூ.5 லட்சம் வழங்கவேண்டும். குரு பூஜை போன்ற நிகழ்ச்சிகளில் போலீசார் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் நடந்து கொள்ளாமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
செளந்தர்ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்.): ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதால் தான் பதட்டம் ஏற்பட்டு துப்பாக்கி சூடு நடந்துள்ளது. 6 பேர் பலியாகி இருக்கிறார்கள். போலீசார் அவசரப்படாமல் முதிர்ச்சியுடன் நடந்திருக்கவேண்டும். ஜான்பாண்டியன் இறந்த மாணவன் வீட்டுக்கு செல்லவேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரை அந்த வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று இருக்கலாம். அதை விட்டு விட்டு கைது செய்தது தவறு. இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உண்மையில் இது சாதிக் கலவரம் அல்ல. இதை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுக்கவேண்டும். காவல் துறையினருக்கு சுதந்திரம் வேண்டும் என்பதை இது போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இதுபற்றி நீதி விசாரணை நடத்தவேண்டும். பலியானவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க.): நேற்று நடந்தது எதிர்பாராத சம்பவம். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கடமை போலீசாருக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும், கட்சிகளை நடத்தும் தலைவர்களுக்கும் உண்டு. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க சம்பந்தப்பட்ட தலைவர் ஒத்துழைப்பு கொடுத்திருக்க வேண்டும். அவர் ஒத்துழைப்பு கொடுக்காததால் கைது, அதை தொடர்ந்து அப்பாவி மக்கள் சாலைமறியல் என பிரச்சனை பெரிதாகி தவிர்க்க முடியாத நிலையில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
தே.மு.தி.க. உறுப்பினர் சுந்தர்ராஜின் காரும் தாக்கப்பட்டது. அவர் தப்பி வந்ததே பெரிய விஷயம். போதுமான போலீசார் இல்லாததால் துப்பாக்கி சூடு நடத்தும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இதைப் பொருத்தவரை நீதி விசாரணை தேவை இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
கிருஷ்ணசாமி வெளிநடப்பு:
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். இதன் பிறகு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீண்டும் பேச வாய்ப்பு கேட்டார்.
அதற்கு சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி வழங்கவில்லை. இதனால் அவர் வெளி நடப்பு செய்தார்.












Click it and Unblock the Notifications