அண்ணாதுரை ஆழ்வாரா அல்லது நாயன்மாரா?: ஜெயலலிதாவுக்கு ராம.கோபாலன் கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rama Gopalan
சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக நிறுவனருமான பேரரிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் தமிழக அரசு கோயில்களில் சமபந்தி போஜனம் நடத்துவதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு திட்டங்கள் கொண்டு வருவதையும், அதனைச் செயல்படுத்துவதில் கண்ணும் கத்துமாக இருந்து வருவதையும் வரவேற்கிறோம்.

இத்தகைய நடவடிக்கைகளால் தமிழகம் வளம் பெறும், நலம் பெறும். ஆலயம் தோறும் அன்னதானம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஏழை எளிய மக்களுக்கு பசு மாடுகள், ஆடுகள் என ஏழைகள் ஏற்றம் பெற உதவும் முதல்வரின் நற்செயல் வெற்றிபெறட்டும்.

அதேநேரம், இன்று முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள். இந்த விழாவின் ஒரு பகுதியாக இந்து ஆலயங்களில் சமபந்தி போஜனம் போடுவது என்பது ஏற்கமுடியாது, இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

அண்ணாதுரை ஆழ்வாரோ, நாயன்மாரோ அல்லது இறையடியாரோ இல்லை. அவர் வாழ்நாள் எல்லாம் இறை நம்பிக்கைக்கு எதிராக நாத்திகம் பேசியவர். அவரது பிறந்தநாள், நினைவுநாளில் சமபந்தி போஜன விழாவை முன்னாள் முதல்வர் கருணாநிதி தந்திரமாக இந்துக் கோவில்களின் தலையில் கட்டி, ஆலயத்தில் நாத்திகத் தலைவருக்கு விழா எடுக்க வைத்தார், இதனை எதிர்த்து இந்து முன்னணி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

அண்ணாதுரைக்கு திவசம் செய்வதானால் அதன் செலவை அவரால் உருவான, அவரது புகழ்பாடும் கழகங்களோ, அவரால் பயனடைந்தவர்களோ ஏற்க முன்வரட்டும், அதற்கு பதில் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல, இந்து ஆலயங்கள் அரசின் பிடியில் இருப்பதால் அதிலிருந்து செலவு செய்வது அடாவடியானது.

அவரது பிறந்த நாள், இறந்த நாளுக்கு ஆலயத்திலிருந்து ஏன் செலவு செய்ய வேண்டும்? இத்தகைய விழாக்களை ஆலயத்தின் மீது திணிப்பதைக் கைவிட முதல்வரை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.

103-வது பிறந்தநாள்-அண்ணா சிலைக்கு ஜெ மரியாதை:

இந் நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார். சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் திருவுருவ படத்துக்கு மலர் தூவினார்.

பின்னர் அண்ணா பிறந்த நாள் மலரை ஜெயலலிதா வெளியிட அதனை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக் கொண்டார்.

அண்ணா சிலைக்கு கருணாநிதி-மு.க.ஸ்டாலின் மாலை:

அதே போல திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவித்து வணங்கினார். சிலை முன் வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கும் மலர் தூவினார்.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி உள்ளிட்டோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் தலைமையில் அக்கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்கள். லட்சிய தி.மு.க. தலைவர் டி. ராஜேந்தர், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

அண்ணா கொடியில் இல்லை-கொள்கையில் இருக்கிறார்-கி.வீரமணி:

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் அவரது சிலையின் கீழ் உள்ள திருவுருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தந்தை பெரியார் அவர்களது கொள்கை வழி நின்று வெற்றி பல கண்டவர் அண்ணா. தாம் பெற்ற வெற்றியை தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கியவர் அண்ணா.

அண்ணா அவர்கள் எந்த பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிக்க வேண்டும் என்று சொன்னாரோ அந்த பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிப்பது நமது நோக்கம்.

அதன்படி தை முதல் நாள் தான் தமிழர்களுக்குப் புத்தாண்டு என்பதை நிச்சயம் வெற்றி பெறச் செய்வோம். அண்ணா கொடியில் இல்லை. கொள்கையில் இருக்கிறார். அதுதான் அண்ணா அவர்களுக்கு நாம் செலுத்துகின்ற மரியாதை என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hindu Munnai leader Rama Gopalan condemned TN government for sponsoring free food scheme in Temples for former CM and DMK founder Aringnar Anna's birthday
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற