கோவை வக்கீல்கள் போராட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த விவசாயி மீது உயர்நீதிமன்றத்தில் தாக்குதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை கோவையில் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு வக்கீல்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பொதுமக்களும், தானும் கடும் பாதிப்பை சந்தித்திருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்த விவசாயி ஒருவரை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து வக்கீல்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் வக்கீல் ஆனந்தீஸ்வரன் என்பவரை போலீஸார் தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பெண் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களைக் கைது செய்யக் கோரி கடந்த பல நாட்களாக எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் எஸ்.பி. அலுவலகத்திற்குள் அசாதாரணமான நிலை நீடிக்கிறது. பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். வக்கீல்களை வெளியேற்ற போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வக்கீல்களின் முற்றுகையால் எஸ்.பி.அலுவலகத்திற்குள் வர பொதுமக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் எஸ்.பி. அலுவலகத்தின் முக்கியப் பகுதியை போலீஸார் மூடி விட்டனர். இதனால் புகார் தர வருவோர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், கோவையில் எஸ்.பி. அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருவதால், தானும், தன்னைப் போன்ற பொதுமக்கள் பலரும் புகார்களைக் கொடுக்க முடியாமல் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக கூறியிருந்தார்.

இதை அறிந்த வக்கீல்கள் சிலர் கந்தசாமியை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்துத் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து உயர்நீதிமன்ற காவல் நிலையத்தை நாடியுள்ளார் கந்தசாமி. ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை.

வக்கீல்களும் தொடர்ந்து எஸ்.பி. அலுவலகத்தைக் காலி செய்யாமல் போராடி வருகின்றனர். போலீஸாரும் இதுகுறித்து மேல்நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த செயலால், கோவையில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Coimbatore farmer was attacked in Madras HC campus, the farmer Kandasamy has alleged. He had filed a case against Coimbatore lawyers, who are protesting against the police in Coimbatore SP office for the last few days. Kandasamy has said in his case that, I have been affected due to the lawyers' strike. HC should order to end the protest. After knowing this some lawyers attacked Kandasamy, the sources say.
Please Wait while comments are loading...