தேர்தல் தோல்விக்கான காரணங்களை பகிரங்கமாக விவாதிக்கக் கூடாது- தங்கபாலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த தோல்விக்கான காரணங்களை கட்சித் தலைவர்கள், பகிரங்கமாக விவாதிக்கக் கூடாது. உள்ளரங்கில் வைத்து இவற்றையெல்லாம் விவாதிக்க வேண்டும்.அதை மீறுவது என்பது கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பிறகும் தொடர்ந்து அதில் நீடித்து வரும் தங்கபாலு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும், அவர்களை ஆதரித்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனித்தே போட்டியிட்டது என்ற பெருமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு. ஆளுங்கட்சியான அ.தி.மு.க., ஆண்ட கட்சியான தி.மு.க. ஆகியவை உள்ளாட்சித் தேர்தலிலும் தங்களோடு சில கட்சிகளை கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தல் களம் இறங்கியது என்பதும், மற்றும் ஏனைய கட்சிகளும் அவரவர் நிலைகளுக்கேற்ப கூட்டணி சேர்ந்துக் கொண்டு போட்டியிட்டன என்பதும் நாடறிந்த உண்மை.

காங்கிரஸ் மட்டுமே உள்ளாட்சியில் நல்லாட்சி (மக்களுக்கே அதிகாரம்) என்ற தாரக மந்திரத்தை முன்னெடுத்து அதை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் ஆட்சியால் வகுத்தளித்த பஞ்சாயத்து அரசு சட்டத் திருத்தம் 73 மற்றும் 74 பிரிவின்படி நல்லாட்சியை நிலைப்படுத்திட தேர்தலில் தனித்து நின்றது.

அகில இந்திய காங்கிரசால் நியமிக்கப்பட்ட தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக்குழு, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை காங்கிரஸ் இன்னாள்- முன்னாள் உறுப்பினர்கள், முன்னணித் தலைவர்கள், மாவட்ட, நகர, வட்டார, கிராமக் காங்கிரஸ் மேலும் அனைத்து துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணிகளில் தங்களது சிறந்த பங்களிப்பை தந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் குழுக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் எத்தகைய பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமோ அத்தகைய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் முடிவு மேற்கொள்ளப்படும்.

உள்அரங்கில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயத்தை காங்கிரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், யாரென்றாலும் கட்டுப்பாடின்றி வெளியில் பேசுவதும், அமைப்பு விதிகளுக்கு இணங்காமல் அத்துமீறி நடந்துக் கொள்வதும் மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான நல்லுணர்வை ஏற்படுத்தாது என்பதால் அவற்றை இனியாவது புரிந்துக் கொண்டு அதுபோன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தான் கூறியபடி தொடர்ந்தும் காங்கிரஸ் தனித்தே போட்டியிடுமா என்பதை தங்கபாலு தெளிவுபடுத்தவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu Congress President Thangabalu has asked the party leaders not to discuss the poll defeat of the party in public. He has urged the leaders to spell their suggestions with the leadership.
Please Wait while comments are loading...