For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அக்ரி' கிருஷ்ணமூர்த்திக்கு 114 கிரவுண்ட் நிலம்-கலெக்டரின் உத்தரவுக்கு அரசு தடையாம்!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரேயுள்ள 114 கிரவுண்ட் நிலத்தை தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு கொடுத்து சென்னை மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கதீட்ரல் சாலையில் சி.எஸ்.ஐ. டயோசிஸ் அலுவலகம் மற்றும் கதீட்ரல் தேவாலயம் உள்ளது. இதற்கு அருகேயும் எதிரேயும் உள்ள நிலத்தை தோட்டக்கலை சங்கம் நிர்வகித்து வந்தது. இந்த இடத்தை தமிழக அரசிடம் இருந்து இந்த சங்கம் நீண்டகால குத்தகைக்கு பெற்றிருந்தது.

பின்னர் அந்த இடத்தை டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு உள் குத்தகைக்கு விட்டது தோட்டகலை சங்கம்.

கடந்த திமுக ஆட்சியில் அதுதொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலம் கிடைத்ததும் அதை செம்மொழிப் பூங்காவாக திமுக அரசு மாற்றியது.

இந் நிலையில் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரேயுள்ள சுமார் 114 கிரவுண்ட் நிலத்தையும் அரசிடம் ஒப்படைக்கக் கோரி கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் தோட்டக் கலை சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு சென்னை மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி வழக்குத் தொடர்ந்தார். நிலம் யாருக்குச் சொந்தம் என்பதை உரிய ஆவணங்களைப் பரிசீலித்து கலெக்டரே இதில் முடிவை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந் நிலையில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. இந் நிலையில், அந்த இடம் தோட்டக்கலை சங்கத்துக்கே சொந்தமானது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். நிலத்தையும் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் புவனேஷ்குமார் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில்,

தோட்டக் கலைச் சங்கத்தின் செயலாளரான கிருஷ்ணமூர்த்தி இப்போதைய முதல்வரின் குடும்ப நண்பர். ஆளும் கட்சியின் நிர்வாகிகளுக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே, அவருக்குச் சாதகமாக உத்தரவு பிறப்பிக்கும் வகையில், சென்னை மாவட்ட கலெக்டரையே இடமாற்றம் செய்து, கலெக்டர் பொறுப்பில் மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், தோட்டக்கலை சங்கத்துக்கே நிலம் சொந்தம் என்று கலெக்டர் பொறுப்பில் இருந்த மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு அது சட்டவிரோதமானது. ரூ.500 கோடிக்கும் மேல் மதிப்புள்ள அரசு நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த மனுவில் புவனேஷ்குமார் கூறியுள்ளார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், தோட்டக்கலை சங்கத்துக்கு நிலம் சொந்தம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்த மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை தடை செய்து, கடந்த 1.11.11. அன்று நில நிர்வாக கமிஷனர் மற்றும் முதன்மைச் செயலாளர் ஸ்வரன்சிங் உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த மனுவை ஏற்கத் தேவையில்லை என்றார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தோட்டக் கலை சங்கத்துக்கு நிலம் சொந்தமானது என்ற மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு மாநில அரசின் நில நிர்வாக முதன்மைச் செயலாளர் தடை விதித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந் நிலையில், இந்தப் பொது நல மனு தேவையற்றது என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அறிவித்தனர்.

English summary
Tamil Nadu government has announced Chennai high court that, it has stayed the order of collector who decided in favour of Horticultural Society led by agri Krishnamoorthi, in respect of a land on Cathedral Road
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X