For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பியை 4 மாநிலமாக பிரிக்கும் மாயாவதி தீர்மானம் சட்டசபையில் அமளிக்கிடையே நிறைவேற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Mayawati
லக்னோ: உத்திரபிரேதச மாநிலத்தை நான்கு ஆக பிரிப்பது தொடர்பான முதல்வர் மாயாவதியின் தீர்மானம் இன்று அம்மாநில சட்டசபையில் பெரும் அமளிக்கு மத்தியில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

உ.பியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு, நிர்வாக வசதிக்காக உத்தரபிரதேச மாநிலத்தை நான்காக பிரிக்கப்போவதாக முதலமைச்சர் மாயாவதி அறிவித்திருந்தார். இதற்கான தீர்மானத்தை சட்டசபையில் இன்று முதல்வர் மாயாவதி தாக்கல் செய்தார்.

4 மாநிலமாக பிரிக்கப்பட்டால் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, நன்றாக இருக்கும் , மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார் மாயாவதி. ஆனால் மாயாவதியின் 'மாயாஜால'த் திட்டத்திற்கு முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இன்று சட்டசபை கூடியதும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மாயாவதி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறிய எதிர்கட்சியினர் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்தனர். மாயாவதி ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து அவை 12.40 மணிவரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

பின்னர் பிற்பகலில் சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானத்தை மாயாவதி பலத்த அமளிக்கு மத்தியில் தாக்கல் செய்தார். பின்னர் இது குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதன் பின்னர் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்து விட்டு வெளியேறினார். இதனால் எதிர்க்கட்சிகள் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க வழியில்லாமல் போய் விட்டது.

மேலும் மாயாவதி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளித்திருந்த 2 நம்பிக்கை இல்லாத் தீர்மானங்களும் ஓரம் கட்டப்பட்டு விட்டன.

பின்னர் சட்டசபைக்கு வெளியே மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்க்கட்சிகள்தான் இன்றைய அமளிக்குக் காரணம். மாநிலப் பிரிவினை என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல. நிர்வாக வசதிக்காகவே பிரிக்க முடிவு செய்தோம். மேலும் இது திடீர் கோரிக்கை அல்ல, நீண்ட கால கோரிக்கையைத்தான் நாங்கள் ஆதரித்துள்ளோம் என்றார்.

உ.பி. மாநிலத்தை பூர்வாஞ்சல், பந்தல்கண்ட், அவாத் பிரதேஷ், பஸ்சிம் பிரதேஷ் என நான்காக பிரிக்க மாயாவதி திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றினாலும் கூட முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசுதான். ஏற்கனவே அது தெலுங்கானா விவகாரத்தில் இழுத்தடித்துக் கொண்டிருப்பது நாட்டுக்கே தெரியும். எனவே உ.பியை கூறு போடும் விஷயத்தை மத்திய அரசு சுத்தமாக கண்டுகொள்ளாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Uttar Pradesh assembly has been adjourned till 12:40 pm following an uproar over a resolution to split Uttar Pradesh into four states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X