For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டேம் 999 படத்தை திரையிட்டால் தமிழகத்தில் இனக்கலவரம் மூளும்: மணியரசன் எச்சரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

தஞ்சை: அணை 999 படம் திரையிடப்பட்டால் திரையரங்குகள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை 999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்துள்ளார்கள்.

முல்லைப்பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரியது என்று போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைக் குறிக்கும் வகையில் அணை 999(டேம் 999) என்ற தலைப்பில் அப்படம் எடுக்கப்பட்டுளளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்களெல்லாம் இலட்சக்கணக்கில் மிதந்து அழிந்து, உடைமைகளும், விலங்குகளும் மனிதக் கூட்டமும, ஊர்களும் அழிவதைப் போல சித்தரித்து படமெடுத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

முல்லைப்பெரியாறு அணை உடைந்து மக்கள் அடித்துச் செல்வதை போல சில ஆண்டுகளுக்கு முன் கேரள சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் ஒரு பரப்புரை படம் எடுத்து கேரள மக்களிடையே பீதியைப் பரப்பி முல்லைப்பெரியாறு அணைக்கும் தமிழ் இனத்திற்கும் எதிரான இனப்பகையை தூண்டிவிட்டார். உச்ச நீதிமன்றம் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், வல்லுநர் குழு பார்வையிட்டு அளித்த அறிக்கையின்படி அணை வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளது. முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்றும், சிற்றணையில் சிறு செப்பனிடும் பணிகள் செய்த பின் முழு அளவான 152 அடி தேக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறியுள்ளது.

ஆனால் இத்தீர்ப்புக்கு எதிராக இப்பொழுதுள்ள அணையை உடைக்க வேண்டும் என்பது தான் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி உள்ளிட்ட மலையாள இனவெறிக் கட்சிகளின் திட்டம். அந்த நோக்கத்தை சாதிக்கும் வகையில் இப்பொழுது இந்த அணை 999 என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு சிக்கல் பற்றி ஒருபக்கச் சார்பாக திரைப்படம் எடுத்து வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இதற்கு தணிக்கைச் சான்று கொடுத்தது மிகப்பெரிய தவறும், உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இரண்டாவதாக இனங்களுக்கிடையே பகைமையை மூட்டி விடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கியது சட்டவிரோதமாகும்.

இந்தப் படம் உலகத்தில் எங்கும் திரையிடப்படக் கூடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் இனக்கலவரம் மூளும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடாமல் தடை செய்ய வேண்டும். அதற்கு இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

வருகிற 25ம் தேதி அணை 999 படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் அந்த திரையரங்குகளின் முன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தி படம் திரையிடப்படாமல் மறியல் நடத்தும். தமிழ் இன உணர்வாளர்கள் இப்போராட்டத்திற்கு திரளாக வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Desa Podhuvudamai Katchi chief Maniyarasan has warned that if Dam 999 movie is released in Tamil Nadu, then their party will protest infront of the theatres itself. He has asked the tamil activists to join hands with him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X