For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்மைக்கு புறம்பாக கேரளா செயல்படக் கூடாது- உம்மன் சாண்டிக்கு ஜெயலலிதா பதில் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: எனது அரசும், நானும் ஒவ்வொரு இந்தியனுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று எப்போதும் கோரும் நிலையில், அடிப்படை உண்மைகளை மீறி ஏற்படும் தேவையற்ற அச்சங்களை நாம் தடுக்க வேண்டும். அரசு மட்டத்தில், நாம் எடுக்கும் முடிவு உண்மையான நிலைமைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, உண்மைக்கு புறம்பான விஷயங்களின் அடிப்படையில் இருக்கக்கூடாது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

உம்மன் சாண்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேக்ஸ் மூலம் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு முதல்வர் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா அனுப்பியுள்ள பதில் கடிதம்:

1-12-2011 அன்று நீங்கள் அனுப்பிய பேக்ஸ் செய்தி எனக்கு கிடைத்தது. நமது இரு மாநிலங்களும் மிக விரிவான பரஸ்பர நலன்களும், ஒத்துழைப்பும் பல விஷயங்களில் கொண்டிருக்கிறது என்ற உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிற அதேநேரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் பல சட்டப்பூர்வ தாவாக்கள், தொழில்நுட்ப விவகாரங்கள் நிலுவையில் இருந்தாலும், இவைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்த சூழ்நிலையில், தமிழக எல்லையைத் தாண்டி நடக்கும் தேவையற்ற, ஆத்திரமூட்டும் செயல்களும், கேரளாவில் ஏற்படுத்தப்பட்டு உள்ள அச்ச உணர்வு ஏற்படுத்தும் புரளி தொடர்பான எங்கள் கவலையையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை பரிசீலித்த பிறகு, சுப்ரீம் கோர்ட்டு, முல்லைப்பெரியாறு அணையின் கொள்ளளவு மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டுள்ளது.

கேரள அரசு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செல்லத்தகாததாக ஆக்கும் வகையில் கேரள நீர்ப்பாசன மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத்தை 2006-ல் திருத்தி, சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் அரசியல் சட்ட விவகாரத்திற்கு மாறாக அணையின் முழு நீர்த்தேக்க அளவை நிர்ணயித்தது.

ஓய்வுபெற்ற இந்திய தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான அதிகாரக்குழு, அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது. தமிழக அரசு 1980-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை இந்த அணையை வலுப்படுத்த மத்திய நீர் ஆணைய தலைவரின் பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளை எல்லாம் எடுத்த பிறகு, முல்லைப்பெரியாறு அணை ஒரு புதிய அணை போல மிகவும் நன்றாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டும் இந்த கருத்தோடு ஒன்றி நிற்கும் வகையில் அணையில் தண்ணீரை 142 அடி உயரத்திற்கு தேக்கி வைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து 2006-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் நியமித்த, அதிகாரக் குழு பல்வேறு ஆய்வுகளை, சோதனைகளை நீருக்கு அடியில் ஊடுருவி சென்று நடத்தும் சோதனை, கேபிள் ஆங்கர் பரிசோதனை போன்ற பல சோதனைகளை நடத்தியது. இன்னும் சில சோதனைகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் எனது அரசு இத்தகைய மாதிரி சோதனைகளுக்காக மட்டும் ரூ.1 கோடியே 38 லட்சம் ஒதுக்கியுள்ளது.

நீங்கள் மேலும் உங்கள் கடிதத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 22 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் புள்ளி விவரப்படி கடந்த 4 மாதங்களில் 4 சிறிய அளவிலான நìலநடுக்கங்கள் அதுவும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெகுதூரத்தில்தான் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கங்கள் அணையில் எந்தவிதமான கசிவையும் உண்டாக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த அணையில் உள்ள கசிவு, இந்திய தர நிர்ணயம் அனுமதிக்கும் அளவுக்கு உட்பட்டே இருக்கிறது. முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஒரு நடுத்தர அளவு நில நடுக்கத்திற்குகூட வாய்ப்பு இல்லை. முல்லைப்பெரியாறு அணை, வெள்ளநீரால் உடைப்பு எடுப்பதற்கோ, இடிந்து விழுவதற்கோ எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது. ஏனெனில், இந்த அணையை வலுப்படுத்தியதால் எந்தவித சம்பவங்களும் நடக்க வாய்ப்பு இல்லை.

எனது அரசும், நானும் ஒவ்வொரு இந்தியனுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று எப்போதும் கோரும் நிலையில், அடிப்படை உண்மைகளை மீறி ஏற்படும் தேவையற்ற அச்சங்களை நாம் தடுக்க வேண்டும். அரசு மட்டத்தில், நாம் எடுக்கும் முடிவு உண்மையான நிலைமைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, உண்மைக்கு புறம்பான விஷயங்களின் அடிப்படையில் இருக்கக்கூடாது.

இந்த சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட் இந்த அணையின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பரிசீலித்து, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்த உத்தரவை கேரள அரசு பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய முழு ஒத்துழைப்பும், நல்லெண்ணமும் எப்போதும் உண்டு என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Kerala govt should come forward to implement the order of SC in Mullaiperiyar issue, said CM Jayalalitha. She has also urged her Kerala counterpart to stick to the truths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X