For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணிந்தது மத்திய அரசு!: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு திட்டத்துக்கு 'பிரேக்'!!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: சில்லரை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட முடிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கி வருவதையடுத்து இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.

மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன. நாடு முழுவதும் வர்த்தகர்களும் இதற்கு எதிரான போராட்டங்கள், வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனாலும் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை கொண்டு வந்தே தீருவோம். அதை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாகக் கூறி வந்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என்று அறிவித்து, திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பிரதமர் கோரினார்.

அன்னிய முதலீட்டை எதிர்த்தாலும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என திமுக உறுதிமொழி தந்தது. ஆனால், திரிணமூல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் அன்னிய முதலீட்டுக்கு சம்மதிக்கவில்லை.

இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.8,000 கோடியைத் தந்து அவரது ஆதரவைப் பெற முயன்றது. ஆனால் மம்தா பானர்ஜி அன்னிய முதலீட்டை ஆதரிக்க பிடிவாதமாக மறுத்து விட்டார்.

இதற்கிடையே அன்னிய முதலீட்டைக் கண்டித்து கடந்த 1ம் தேதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முழு ஆதரவும், சில மாநிலங்களில் குறைந்த அளவு ஆதரவும் கிடைத்தது.

இந் நிலையில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த முடியாததால், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு தவித்து வருகிறது. இதையடுத்து மத்திய அரசு எதிர்க்கட்சிகளுடன் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இன்று காலை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மக்களவை பாஜக எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜுடன் பேச்சு நடத்தினார். அப்போது சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பான முடிவை நிறுத்தி வைப்பதாக பிரணாப் உறுதியளித்தார்.

அரசியல் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படும் வரை அன்னிய முதலீடு தொடர்பான எல்லா சீர்திருத்தங்களையும் அரசு திரும்பப் பெறும் என்றும் சுஷ்மாவிடம் பிராணாப் முகர்ஜி உறுதி மொழி தந்துள்ளார்.

இதனால் இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு பணிந்துவிட்டது தெளிவாகிறது.

பிரணாபின் உறுதிமொழியை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சுஷ்மா கோரியுள்ளார். புதன்கிழமை நாடாளுமன்றம் கூடியதும் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று தெரிகிறது.

இதையடுத்து 7ம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமூகமாக நடைபெற வாய்ப்புள்ளது.

இந் நிலையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை நாங்கள் திரும்ப பெறவில்லை என்றும், அந்த முடிவை தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைத்துள்ளோம் என்றும் பிரணாப் முகர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Finance Minister Pranab Mukherjee on Monday reached out to BJP leader Sushma Swaraj and told her the government had put on hold its decision to allow foreign investment in retail trade. The party immediately rejected him, saying it would not settle for anything less than a roll back of the decision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X