For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை, திருச்சியில் ரூ.50 கோடியில் உலகத் தரம் வாய்ந்த பூங்காக்கள்: ஜெயலலிதா

By Siva
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சிங்கப்பூரில் உள்ள சென்டோசா பூங்காவைப் போன்ற உலகத் தரம்வாய்ந்த சுற்றுலாப் பூங்காக்களை சென்னை மற்றும் திருச்சியில் ரூ.50 கோடி செலவில் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சுற்றுலா என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோலாகவும், ஒருமைப்பாட்டிற்கு உறுதுணையாகவும், இளமை காலத்தில் அறிவையும், முதுமைக் காலத்தில் அனுபவத்தையும், தரக்கூடியதாக விளங்குகிறது. பொருளாதார வளமைக்கான ஊக்க சக்தியாகவும், சுற்றுலாப் பயணிகளின் மனதிற்கு புத்துணர்ச்சி மற்றும் மகிழ்ச்சி அளிப்பதோடு புதிய அனுபவங்களை சுற்றுலா அளிக்கிறது.

வான் வழி, ரயில், தரை வழிப் போக்குவரத்து மற்றும் கடல் வழிப் போக்குவரத்து, தங்கும் விடுதிகள், தொலைத் தொடர்பு மற்றும் பல்வேறு துறைகளிலும் பன்முக பொருளாதார வளர்ச்சிக்கான தாக்கத்தினை சுற்றுலா ஏற்படுத்துகிறது.

சுற்றுலா நேரடி வேலை வாய்ப்பினை உருவாக்குவதோடு, அதன் மறைமுக தாக்கமாக உள்ளூர் மக்களின் மேம்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது. சேவைத் துறை என்ற நிலையிலிருந்து, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சாதனங்கள் உற்பத்தி போன்ற தொழில்களைப் போல, முன்னணி ஏற்றுமதி தொழிலாக உருவாகி வரும் சுற்றுலாத்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆக்கமும், ஊக்கமும், முன்னுரிமையும் அளித்து வருகிறது.

உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலுக்கும், சுற்றுலாத் தலங்களை சந்தைப்படுத்துதலுக்கும் ஒரு புதிய ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து, தங்குமிடம், உணவு போன்றவை எளிதாகவும், நல்லமுறையிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்வதன் மூலம், அவர்கள் பயணம் செய்த இடத்திற்கே மீண்டும் வருகை புரிவதற்கும், அவர்களின் நல்ல அனுபவத்தை பிறருக்கு பகிர்வதன் மூலம் கூடுதல் பயணிகள் வருகை புரிவதற்கும் வழிவகுக்கும்.

இந்த ஆண்டு சுற்றுலா பூங்கா மேம்பாடு, ஊரக சுற்றுலாத் தொகுப்பு மேம்பாடு, சுற்றுலா சுற்றுகளின் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, திறன் மேம்பாடு, சாலை யோர சுற்றுலா வசதிகள், தமிழ்நாடு சுற்றுலாவின் தூய்மை கழிப்பிட விழிப்புணர்வு திட்டம், ஹெலிகாப்டர் சுற்றுலா, சொகுசுக் கப்பல் சுற்றுலா மற்றும் கம்பி வழி சுற்றுலா (ரோப் கார்) திட்டம் என 7 முக்கிய பரிமாணங்களுடன் தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்களை வகுக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

சுற்றுலா பூங்காக்கள் அமைத்தல் என்ற திட்டத்தின்படி சிங்கப்பூரிலுள்ள சென்டோசா பூங்காவைப் போன்று இரண்டு பூங்காக்கள், ஒன்று சென்னையிலும், மற்றொன்று திருச்சியிலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம், எல்லாவித பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒவ்வொன்றும் 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

ஊரக சுற்றுலா தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தனித்துவம் வாய்ந்த கைவினைப் பொருட்கள், பராம்பரியக் கலைகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட, 5 முதல் 7 கிராமங்களைக் கண்டறிந்து, அவற்றை ஒரு சுற்றுலா தொகுப்பு கிராமமாக உருவாக்கி, வர்த்தக யுக்தியாக மேம்படுத்தும் வகையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பிள்ளையார்பட்டி, கானாடுகாத்தான், ஆத்தங்கடி ஆகிய செட்டிநாட்டு பகுதிகள்; தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், சுவாமி மலை, தாராசுரம், பட்டீஸ்வரம், நாச்சியார் கோவில் பகுதிகள்; திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை பகுதிகள்; கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், திற்பரப்பு, திருவட்டார், உதயகிரி, தேங்காய்பட்டினம் பகுதிகள்; மதுரை மாவட்டம், அழகர்கோவில், பழமுதிர்சோலை, மேலூர், நரசிங்கம்பட்டி பகுதிகள்; கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் பகுதிகள்; நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆகிய பகுதிகள் சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய சுற்றுலா சுற்றுகள், கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று (ஆன்மீக மற்றும் பாரம்பரிய சுற்று) காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் தென்னக சுற்றுலாச் சுற்று (ஆன்மீகம் மற்றும் சுற்றுச் சூழல் சுற்று) மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக் குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுற்றுலாவுக்கு உகந்த தலங்கள் கண்டறியப்பட்டு, அவைகளை 450 கோடி ரூபாய் செலவில் 2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டுகளில் மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

முதற்கட்டமாக கிழக்கு கடற்கரை சுற்றுலாச் சுற்று 2011ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தென்னகச் சுற்றுலா சுற்றும் விரைவில் தொடங்கப்படும் ,திறன் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் 28 வயது வரையுள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 3,500 இளைஞர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பிலும், உணவு வழங்கும் சேவைப் பிரிவிலும் பயிற்சி அளிக்கப்படும். 500 இளைஞர்களுக்கு, தனியார் ஒட்டுநர் பயிற்சி மூலம் வாகன ஒட்டுநர் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலையோர சுற்றுலா வசதிகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முக்கிய சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 25 இடங்களில் சாலையோர சுற்றுலா வசதிகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும், தரம் வாய்ந்த தூய்மையான கழிப்பிடங்கள் மற்றும் ஓய்வறைகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும். இவையன்றி, சுற்றுலா பயணிகளை கவருவதற்காக நவீன முறையில் ஹெலிகாப்டர் மற்றும் சொகுசு கப்பல்கள் மூலம் தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்க நடவடிக்கை எடுத்திடவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று மலை வாசஸ்தலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைத்திடும் வகையில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கம்பி வழிச் சுற்றுலா (ரோப் கார்) திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த புதிய சுற்றுலா திட்டங்கள் மூலம் தமிழகம் உலக சுற்றுலா வரைப்படத்தில் முக்கிய இடத்தை அடைவது மட்டுமல்லாமல், அதிக அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரவும் இது வழி வகுக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CM Jayalalithaa has ordered to set up parks in Chennai and Trichy at a cost of Rs. 50 crore. She wants the parks to be like Sentosa park in Singapore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X