For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால்.. சுப.வீ. கிண்டல்

By Shankar
Google Oneindia Tamil News

Suba Veerapandian
சென்னை: நான் பதவிக்கு வந்தால் ஆறு மாதங்களில் மின்வெட்டே இல்லாத மாநிலமாக்குவேன், தமிழகத்தை என்றாரே ஜெயலலிதா. நின்றுவிட்டதா மின்வெட்டு?, என்று கேள்வி எழுப்பினார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்

தமிழகத்தில் பற்றி எரியும் மூன்று முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து, 'அணை - உலை - விலை விளக்கப் பொதுக்கூட்டம்’ எனத் தலைப்பில் சமீபத்தில் அம்பத்தூரில் பொதுக்கூட்டம் நடத்தியது திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

இந்தக் கூட்டத்தில் சுப வீரபாண்டியன் பேசியதாவது:

''தலைப்பைப் பார்த்துவிட்டு 'இது என்ன விடுகதையா?’ என்று கேட்கிறார்கள். 'இல்லை.... இந்த நாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய கதை’. பெரியாறு அணையிலே இருக்கிற நீர் நமக்கு வேண்டும் என்று கேட்கிறோம். தர மறுக்கிறார்கள். கூடங்குளத்திலே அணு உலை வேண்டாம் என்கிறோம். தந்தே தீருவோம் என்கிறார்கள்.

'சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டதால், பெரியாறு அணை பலவீனமானது’ என்று, அதை இடிப்பதற்கு காரணம் சொல்கிறார்கள். சிமென்ட் காரையை விடவும் சுண்ணாம்புக் காரை பலவீனமானதுதான். ஆனால், ஒரு உண்மை என்ன தெரியுமா? நாள் ஆக ஆக சிமென்ட் இளகும்; சுண்ணாம்பு இறுகும்.

பொருந்த பொய் சொல்லுங்கப்பா...

'பூகம்பம் வந்தால் பெரியாறு அணை உடைந்துவிடும். எனவே, பக்கத்திலேயே இன்னொரு அணை கட்டப் போகிறோம்’ என்றும் ஒரு காரணம் சொல்கிறார்கள். அம்பத்தூர் பேருந்து நிலையத்துக்கு வரும் பூகம்பம் அம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு வராதா? நான்கூட இதுகாலம்வரை கேரளச் சகோதரர்களை புத்திசாலிகள் என்றல்லவா நினைத்திருந்தேன். சொல்லுகிற பொய்யைக்கூட பொருந்தச் சொல்லத் தெரியவில்லையே!

மின்சாரத்தை பிரித்துத்தரும் மத்திய அரசு நீரை பிரித்துத் தர மறுப்பதேன்?

நெய்வேலியில் உற்பத்தி ஆகிற மின்சாரத்தை இன்றைக்கும் கர்நாடகா, கேரளாவுக்குப் பிரித்துக் கொடுக்கிறது மத்திய அரசு. மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தைப் பகிர்ந்து அளிக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்றால், நீரைப் பகிர்ந்து அளிக்கும் உரிமை இல்லையா? இல்லை என்றால், நீ விலகிக் கொள். எங்கள் உரிமையை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம்.

இந்தியாவின் மின்சாரத் தேவையில், வெறும் 2.7 சதவிகிதம் மட்டுமே அணு உலையில் இருந்து பெறப்படுகிறது. ஆனால், அதற்காக செலவழிக்கப்படும் தொகையோ மிகஅதிகம். அணு உலையால் வரும் ஆபத்துக்களோ அதை விடவும் அதிகம். ஆனால், 'கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பனது. 6.5 ரிக்டர் வரை பூகம்பம் வந்தாலும் ஒன்றும் ஆகாது’ என்கிறார்கள். அப்படி என்றால் '6.6 ரிக்டர் அளவில் பூகம்பம் வந்தால், மக்கள் அழிந்து விடுவார்கள்’ என்றுதானே அர்த்தம்.

அணுக் கழிவுகளை நாடாளுமன்றத்தில் வைக்கலாமா?

மத்திய அமைச்சர் நாராயணசாமியும் 'அது ரொம்பவும் பாதுகாப்பானது’ என்கிறார். அவ்வளவு பாதுகாப்பானது என்றால், இந்த அணு உலைக் கழிவுகளை எல்லாம் ஒரு பீப்பாயில் அடைத்து நாடாளுமன்றத்தின் நடுக்கூடத்தில் வைத்து விடலாமா? உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே... அணு உலை பாதுகாப்பானது அல்ல.

இதைத் தொடங்கிய ரஷ்யாவிலேயே இன்று அணு உலை கிடையாது. ஜெர்மனியில் அனைத்து அணு உலைகளும் மூடப்பட்டு விட்டன. ஐரோப்பிய நாடுகளிலும் இல்லை. தொழில் நுட்பம் மிகுந்த ஜப்பானின் புகுஷிமோ அணு உலை விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட கதிர் வீச்சின் பாதிப்பு இன்னும் பல தலைமுறைகளைப் பாதிக்கும் என்கிறார்கள். ஜப்பானை விடவா நமக்குத் தொழில் நுட்பம் தெரியும்?

மறந்து போன விலையேற்றம்

அணையிலும் உலையிலும் இந்த விலை ஏற்றத்தை கொஞ்சம் மறந்துபோய் விட்டார்கள் நம் மக்கள். செம்மொழி நூலகம், புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம் ஆகியவற்றை எல்லாம் இந்த அம்மையார் இழுத்து மூடியபோதும் தமிழனுக்குக் கோபம் வரவில்லை.

13,000 மக்கள் நலப்பணியாளர்களை தெருவில் நிறுத்திய போதும்கூட 'அது அவர்களது பிரச்னை’ என்றுதானே இருந்தான். எப்போது அவனுக்கு கோபம் வந்தது? காலையில் எழுந்து பால் வாங்கும்போதுதானே கை சுட்டது. பேருந்திலே ஏறி உட்காரும்போதுதானே இருக்கை சுட்டது. வாக்களித்த மக்களுக்கு விலையேற்றம், வரிச்சுமை, மின்வெட்டைத் தந்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், வாக்களிக்காத யானைகளுக்கு குதூகலம், கொண்டாட்டம், புத்துணர்வைத் தந்திருக்கிறது.

ஆறு மாதங்களாகிவிட்டதே...

'நான் ஆட்சிக்கு வந்த ஆறு வார காலத்திலேயே, தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவேன்’ என்றாரே அம்மையார். ஆறு மாத காலம் ஆகிவிட்டதே...! சென்னையில் இருப்பவர்கள் ஒருமணி நேர மின்வெட்டோடு தப்பித்தீர்கள். மற்ற நகரங்களில் தினமும் ஐந்து மணி நேரம். எந்தப் பத்திரிகையாவது இதைக் கேட்டதா?

'இந்த ஆட்சி மோசமான ஆட்சி’ என்று விஜயகாந்தே சொல்கிறார். இதிலிருந்து நமக்குப் புரிகிற ஒரே உண்மை.... விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால், கடைசித் தமிழனுக்கும் புரிந்து விட்டது’ என்றல்லவா பொருள்!

கூடிக்கலந்து முடிவெடுக்கும் ஜனநாயகம் எல்லாம் அம்மையாருக்குத் தெரியாது. மக்கள் நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவது என்றாலும் சசிகலாவை வெளியேற்றுவது என்றாலும் ஒரே நொடிக்குள் முடிவெடுப்பதுதான் அவரது ஜனநாயகம்.

சண்டையா சண்டைக்காட்சியா...

அவர்களுக்குள் உண்மையான சண்டையா? அல்லது சண்டைக் காட்சியா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவர்களது உட்கட்சிப் பிரச்னை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சசிகலாவை வெளியேற்றிவிட்டு போயஸ் தோட்டத்துக்குள் சோ வந்திருக்கிறாரே. அது கட்சிப் பிரச்னை அல்ல; இனப் பிரச்னை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!''

இவ்வாறு சுபவீ பேசினார்.

English summary
Dravidian Tamil Forum's general Secretary Su Pa Veerapandian strongly criticised the Jayalalitha govt for not fulfilling the promises. In his fiery speech at Ambature, the Tamil activist slammed Jaya for not upgrade the state as power cut free state as she promised before elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X