For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு இடைத் தேர்தல் நடத்த காங்கிரஸ் திட்டம்?

By Chakra
Google Oneindia Tamil News

Manmohan Singh and Sonia
டெல்லி: பட்ஜெட் தாக்கல் செய்வதை வரும் மார்ச் மாதத்துக்கு மத்திய அரசு தள்ளிப் போட்டுள்ளதையடுத்து நாடாளுமன்றத்துக்கு இடைத் தேர்தல் வரலாம் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அரசை முழு அளவில் ஆதரிக்கவில்லை. இதனால் சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்குக் கூட எதிர் தரப்பில் உள்ள முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் ஆதரவைக் கோர வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டணிக் கட்சிகளே பெரும் தடையாக உள்ளன. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தை திமுகவும் மம்தா பானர்ஜியும் எதிர்த்ததால் அதைக் கைவிட வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது.

லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசின் மானமே கப்பல் ஏறிவிட்டது. இந்த மசோதாவை ரொம்பவே கஷ்டப்பட்டு லோக்சபாவில் நிறைவேற்றிவிட்ட மத்திய அரசு, ராஜ்யசபாவில் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

காரணம், கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பாஜக கூட்டணியுடன் சேர்ந்து கொண்டு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க திட்டமிட்டது தான்.

இவ்வாறு சற்றும் ஒத்துழைக்காத கூட்டணிக் கட்சிகளை வைத்துக் கொண்டு, அரசை நடத்துவதை பிரதமர் மன்மோகன் சிங் விரும்பவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக, மன்மோகன் சிங்குக்கு மிகவும் பிடித்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைக்க வேண்டிய நிலையில் உள்ளது.

குறிப்பாக சேவை வரி, நேரடி வரி விதிப்பில் திருத்தம், பென்சன் பண்ட்களை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்களில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாததால், இவை எல்லாம் பரணில் ஏற்றப்பட்டுவிட்டன. இதனால் மன்மோகன் சிங் மகா கடுப்பில் உள்ளார்.

இந் நிலையில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் இந்த மாதம் துவங்கி மார்ச் முதல் வாரம் வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதில் பஞ்சாப், மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று தெரிகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு சரிவு ஏற்படலாம் என்றும், அங்கும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றிம் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கோவாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கலாம் என்றும் தெரிகிறது.

மிக முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடிக்கலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்ட பாஜகவின் நிலையில் முன்னேற்றம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த மாநிலத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிப்பது முலாயம் சிங்காக இருக்கலாம் அல்லது மாயாவதியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம். காங்கிரசோ, பாஜகவோ ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.

அதே நேரத்தில் காங்கிரஸ் கூடுதல் இடங்களில் வென்று அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக உருவாகலாம்.

இதனால், மொத்தத்தில் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாகவும் பாஜகவுக்கு பாதமாகமாகவும் அமையலாம் என்று கூறப்படுகிறது.

அப்படி ஒரு நிலை வந்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைத் தேர்தலை நடத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தயாராகலாம் என்றும் தெரிகிறது. அப்போது தான் தாங்கள் நினைத்தபடி அரசை நடத்த முடியும் என காங்கிரஸ் கருதுவதாகத் தெரிகிறது. இல்லாவிட்டால், தொடர்ந்து திரிணமூல், திமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு பணிந்து பணிந்து, இறுதியில் தேர்தலில் பெரும் சரிவை சந்திக்க வேண்டிவரும் என காங்கிரஸ் கருதுகிறது.

இதனால் தான் 2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது என்கிறார்கள். வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் தாக்கலாகும்.

ஆனால், மார்ச் மாதம் 3ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது. 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. எனவே, 4ம் தேதிக்குப் பின் மார்ச் இரண்டாவது வாரத்தில் தான் பட்ஜெட் தாக்கலாகும் என்று தெரிகிறது.

5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் முடிவுகள் தங்களுக்கு சாதமாக அமைந்தால், ஏராளமான சலுகைத் திட்டங்கள் கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு நாடாளுமன்றத்தை காங்கிரஸ் கலைக்கலாம் என்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாதகமாக அமைந்தால், இருப்பதை வைத்துக் கொண்டு ஓட்டுவோம் என்று ஆட்சியில் காங்கிரஸ் தொடரலாம்.

ஆனால், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற கருத்துக்களை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் என்ற கேள்விக்கே இடமில்லை என்றார்.

நம்பிருவோம்!

English summary
Speculation on Pranab Mukherjee​’s statement arises as the UPA has been pushed back on several fronts by allies. The Congress-led United Progressive Alliance (UPA) government formally signalled that the Union budget for 2012-13 will be postponed till after the elections to five state assemblies are concluded in early March, triggering speculation among analysts that the government is not ruling out a snap poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X