For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடை பெற்றார் 2ஜி வழக்கில் முதல் அபாய மணியை அடித்த நீதிபதி ஏ.கே.கங்குலி

Google Oneindia Tamil News

Justice Ganguly
டெல்லி: நாட்டையே பெரும் பிரளயத்தில் ஆழ்த்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் உத்தரவுகளையும், சாடல்களையும், தீர்ப்புகளையும் பிறப்பித்த பெருமைக்குரிய உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி இன்றுடன் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

விடை பெறுவதற்கு முன்பு 2ஜி வழக்கில் மூன்று முக்கியத் தீர்ப்புகளை அவர் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதாரண பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தவர் ஏ.கே.கங்குலி எனப்படும் அசோக் குமார் கங்குலி. இவர் கடந்த 2008ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியானார்.

பல்வேறு முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பளித்துள்ளார். அவற்றில் மிக முக்கியமான வழக்காக மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றிலேயே பெரும் புயலைக் கிளப்பிய வழக்காக 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு பதிவாகி விட்டது.

நீதிபதி ஜி.எஸ்.சிங்வியுடன் இணைந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வந்தார் கங்குலி. இன்று அந்த வழக்கில் தனது கடைசி தீர்ப்பை அளித்தார்.

2010ம் ஆண்டு அக்டோபர் மாதம், யாருக்குமே அவ்வளவாக பரிச்சயமில்லாத பொது நலன் மனுக்களுக்கான மையம் என்ற என்ஜிஓ அமைப்புதான் இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான முதல் வழக்கை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தது. அப்போது பலருக்கும் தெரியாது, இது எதிர்காலத்தில் பெரும் பூகம்பமாக வெடிக்கப் போகிறது என்று. விரைவில் இது டிஸ்மிஸ் ஆகி விடும் என்று கூட பலர் கருதினர். காரணம், டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்கனவே டிஸ்மிஸ் செய்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் அப்படி நடக்கவில்லை. காரணம் நீதிபதி கங்குலியும், சிங்வியும் எடுத்த முடிவு.

இந்த இரு நீதிபதிகளும் சேர்ந்து இந்த வழக்கைப் பரிசீலித்து இறுதியில் மத்திய அரசுக்கும், அப்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராசாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்து அதற்கான உத்தரவைப் பிறப்பித்தபோதுதான் நாடே அந்த வழக்கு குறித்து ஆர்வம் காட்ட ஆரம்பித்தது.

அதன் பிறகு நடந்தது வரலாறு, அனைவரும் அறிந்தது. 2010ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி இந்த வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீன் ராவலைப் பார்த்து நீதிபதி கங்குலி இப்படிக் கேட்டார் - அதே அமைச்சர் இன்னும் பதவியில் நீடிக்கிறார். இப்படித்தான் அரசு இயங்குமா என்று கேட்டார். இதன் பிறகுதான் ராசாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. அவர் பதவி விலகவும் நேரிட்டது. பின்னர் கைதானார் ராசா.

நீதிபதி கங்குலி மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டவர். ஒருமுறை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை இவரும், நீதிபதி சிங்வியும் விசாரிக்கும் முறைக்கு அதிருப்தி தெரிவித்து ஒரு மொட்டைக் கடிதாசி அனுப்பப்பட்டது. அதை 2010ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி வழக்கு விசாரணைக்காக அமர்ந்தபோது அனைவருக்கும் பகிரங்கமாக படித்துக் காட்டினார் கங்குலி. நானும் நீதிபதி சிங்வியும் விசாரணையை பாரபட்சமாக நடத்துவதாக இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்று வாசித்துக் காட்டிய நீதிபதி கங்குலி பின்னர் தனது பணியைத் தொடர்ந்தார்.

வழக்கமாக இதுபோல கடிதங்கள், மிரட்டல்கள் நீதிபதிகளுக்கு வருவது சகஜமானதுதான். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் வழக்கிலிருந்து விடுபடுவதாக நீதிபதிகள் கூறுவது வழக்கம். ஆனால் கங்குலி விலகவில்லை.மாறாக தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வந்தார்.

இவரது 2ஜி வழக்கு தீர்ப்புகளிலேயே முக்கியமானது ஜனவரி 31ம் தேதி பிறப்பித்த அதிரடி உத்தரவாகும். அதன்படி, ஒருவர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி அரசை அணுகினால் 3 மாதங்களுக்குள் அனுமதி தரப்பட வேண்டும்.அப்படி தராவிட்டால், 4வது மாதத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி கோர்ட்டில் வழக்குப் போடலாம், கோர்ட்டுகளும் அந்த வழக்கை ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார் கங்குலி.

ஸ்பெக்ட்ரம் வழக்கைப் போலவே மேலும் பல முக்கிய வழக்குகளையும் விசாரித்துள்ளார் கங்குலி. ஒருமுறை இவர் அமர்சிங் போன் ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்தபோது மத்திய அரசு வக்கீலைப் பார்த்து, எந்த அரசுமே வலுவான நீதித்துறையை விரும்புவதில்லை என்று தெரிவித்தார். அதற்கு அரசு வக்கீலால் பதிலளிக்க முடியவில்லை.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோதும் கூட முக்கியமான தீர்ப்புகளைப் பிறப்பித்தவர் கங்குலி.

1947ம் ஆண்டு பிறந்த கங்குலி, இதற்கு முன்பு கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

இன்றுடன் தனது நீதித்துறையை வாழ்க்கையை நிறைவு செய்துள்ள கங்குலிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் பிரிவுபச்சார விழா நடத்தப்பட்டது.

நீதிபதி கங்குலிக்கு நாளை பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
On Thursday, Justice A K Ganguly, a schoolteacher who became a Supreme Court judge, delivered his farewell speech, he had a busy day today. He shared 3 important verdicts with longtime companion judge Justice G S Singhvi for the 2G case for the last time. It all started in October 2010, when a little-known public interest plea, demanding a court-monitored investigation into public officials and the then minister Raja, into the allotment of 2G spectrum to private companies came up in the court of the two judges. The short hearing marked the beginning of one of the most significant Indian courtroom dramas in recent times, catapulting the two judges centrestage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X