For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திராவிடக் கட்சிகளுடன் எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம்-ராமதாஸ் மறுபடியும் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக, தேமுதிக அடிதடி அமர்க்களம் களை கட்டியுள்ள இந்த நேரத்தில், திராவிடக் கட்சிகளுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று மறுபடியும் அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

பா.ம.க. பாதையில்... புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற தலைப்பிலான கொள்கை மற்றும் செயல் திட்ட அறிக்கை வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு ராமதாஸ் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசுகையில்,

புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறோம். 110 பக்கங்களை கொண்டதாக இந்த ஆவணம் அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது போல் 22 ஆவணங்களை தயார் செய்து நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். இந்தியாவில் எந்தவொரு கட்சியும் இது போல் வெளியிட்டது இல்லை.

கடந்த ஆண்டு பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் இனி எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று முடிவு செய்ததின் அடிப்படையில் இந்த ஆவணத்தை தயார் செய்து உள்ளோம். மக்களின் கருத்துக்களை கேட்பதற்கு இதை வெளியிட்டு இருக்கிறோம். இதற்காக கடைசி பக்கத்தில் கருத்து கேட்பு படிவத்தையும் இணைத்து இருக்கிறோம். அதில் மக்கள் தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம்.

அரசுக்கும், மக்களுக்கும் இடையேயான சமூக ஒப்பந்தத்தை திராவிட கட்சி ஆட்சியாளர்கள் மீறி விட்டனர். விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும், தமிழ்நாட்டின் சரிபாதி மக்கள் இலவசத்துக்கு கையேந்துபவர்களாக வாழ்வதே இதற்கு எடுத்துக்காட்டு. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. புதிய பாதையை வகுத்து எல்லா மக்களும் எல்லாம் பெற்று வாழும் புதிய தமிழ்நாட்டை கட்டமைக்கும் வகையில் புதிய அரசியல் புதிய நம்பிக்கை எனும் ஆவணத்தை முன் வைக்கிறது.

திராவிட கட்சிகளின் ஆட்சி 1967-ல் தொடங்கியது. 1957, 1962, 1967 ஆகிய தேர்தல்களில் மக்கள் முன் பல வாக்குறுதிகளை அளித்தனர்.

இதில் நன்மையளிக்கும் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. தேவிக்குளம், பீர்மேட்டை மீட்பேன் என்று கூறி கச்சத்தீவை தாரை வார்த்தனர். திருத்தணியை ம.பொ.சி. உள்ளிட்டோர் மீட்டனர். தீமையான அணுஉலை அமைப்போம் என்பதை நிறைவேற்றினர். அவ்வாறே தமிழை அழித்து ஆங்கிலம் வளர்த்தனர்.

சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், தமிழ்தேசியம், மதச்சார்பின்மை ஆகியவற்றை முதன்மை கொள்கைகளாக கொண்டு பா.ம.க. செயல்பட்டு வருகிறது. பா.ம.க.வின் புதிய செயல் திட்டத்தின்படி, வேளாண்மை, அமைப்புசாரா தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கட்டமைப்பு மேம்பாடு, சமூகநீதி, கல்வி, நலவாழ்வு, சமூக பாதுகாப்பு கிராமப்புற மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், நல்ல ஆளுகை, நல்ல அரசியல், கூட்டாட்சி, பண்பாட்டு வளர்ச்சி என்ற கோட்பாடுகளுடன் புதிய நம்பிக்கையுடன் பா.ம.க. செயல்படும்.

அரசியல் கட்சிகள் அளவிலான மாற்றம் என்பது எல்லா கட்சிகளுக்கும் பொதுவானதாகும். அந்த வகையில், குறிப்பிட்ட காலத்திற்குள் பா.ம.க. மாற்றத்தை கொண்டு வரும். அது போல மற்ற கட்சிகளும் மாறுவது மக்களாட்சிக்கு கட்டாயமானதாகும்.

தமிழ்நாட்டு மக்கள் பா.ம.க.வை பெருவாரியாக ஆதரித்து, ஆளும் கட்சியாக மாற்றும் போது புதிய அரசியல், புதிய நம்பிக்கை திட்டத்தை தமிழ்நாட்டு மக்களுடனான உடன்படிக்கையின் அடிப்படையில் கொள்கைகளை, திட்டங்களை, நடவடிக்கைகளை பா.ம.க. உடனடியாக நிறைவேற்றும் என்றார்.

சரி, சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுமா பாமக என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் ராமதாஸ்.

English summary
PMK has vowed not to align with any dravidian parties in future. Party founder Dr Ramadoss has said this in a meeting held in Chennai yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X