For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக அரசு 'இழுத்தடித்த' உடன்குடி அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படும்: ஜெ

By Chakra
Google Oneindia Tamil News

Udangudi Power Project
சென்னை: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டத்தை தமிழக அரசே தனது நிதியுதவியுடன் செயல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2007ம் ம் ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 1600 மெகாவாட் திறன் கொண்ட மிக உய்ய அனல் மின் திட்டத்திற்கான (Super Critical Thermal Power Project) ஒப்பந்தம் பாரத மிகு மின் நிலையத்திற்கும் (BHEL), தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் இடையே ஏற்பட்டது.

இதனையடுத்து, உடன்குடி மின் கழகம் என்ற ஒரு கூட்டு நிறுவனம் 26.12.2008 அன்று ஏற்படுத்தப்பட்டது. உடன்குடி அனல் மின் திட்டத்தின் மதிப்பீடு 8,000 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டது. இந்த 8,000 கோடி ரூபாய், கடன் மற்றும் பங்கு மூலதனத் தொகையை உள்ளடக்கியதாகும். பங்கு மூலதனத் தொகையில் 26 விழுக்காடு தமிழ்நாடு மின்சார வாரியத்தாலும், 26 விழுக்காடு பாரத மிகுமின் நிறுவனத்தாலும் வழங்கப்படும் என்றும், எஞ்சிய 48 விழுக்காடு பங்கு மூலதனம் நிதி நிறுவனத்தாலோ அல்லது இந்தத் திட்டத்தை செயல்படுத்த முன்வரும் தனியார் நிறுவனத்தாலோ வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தத் திட்டத்திற்கான கடன் தொகை ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தக்கூடிய தனியார் நிறுவனம் 2011ம் ஆண்டு மே மாதம் வரை, அதாவது கடந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு ஆட்சியை விட்டுச் செல்லும் வரை தீர்மானிக்கப்படவில்லை. திட்ட மதிப்பீடான 8,000 கோடி ரூபாயில், பங்குமூலதன விழுக்காடு எவ்வளவு என்றும், கடன் விழுக்காடு எவ்வளவு என்றும் கூட தீர்மானிக்கப்படவே இல்லை.

இந்தத் திட்டத்திற்காக பாரத மிகுமின் நிறுவனம் 32.5 கோடி ரூபாயும், தமிழ்நாடு மின்சார வாரியம் 32.5 கோடி ரூபாயும் ஒதுக்கியதைத் தவிர, திட்ட செயலாக்கத்திற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். அவ்வாறான சான்று பெறுவதற்கு இத்திட்டத்திற்கான நீண்டகால நிலக்கரி ஒதுக்கீடு (Long Term Coal Linkage) ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான நீண்டகால நிலக்கரி ஒதுக்கீடு ஏற்படுத்தப்படாத காரணத்தால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று பெறப்படவில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்படாததற்கு பாரத மிகுமின் நிறுவனத்தின் ஒத்துழைப்பின்மையும் ஒரு காரணமாகும்.

மேற்கூறிய காரணங்களினால் உடன்குடி அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதற்கான காரணங்களை அரசு அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளுடன் நான் 23.2.2012 அன்று ஆய்வு செய்தேன். உடன்குடி மின் கழகத்தின் மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது இயலாத காரியம் என தெரிய வந்தது.

எனவே, தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக மாநில அரசின் திட்டமாகவே இத்திட்டத்தினை செயல்படுத்த நான் முடிவு எடுத்துள்ளேன். இத்திட்டத்திற்கான மொத்த செலவினமான 8,000 கோடி ரூபாயையும் தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பங்கு மூலதனமாக வழங்கும்.

மேலும், மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் இத்திட்டத்திற்கான நிலக்கரியை ஒதுக்கீடு செய்து எந்த உத்தரவும் வழங்காத நிலையில், இத்திட்டத்திற்குத் தேவையான நிலக்கரியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்பதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தெரிவித்து, அதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த நான்காண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த உடன்குடி அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன்குடி அனல் மின் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் செயல்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டத்திற்கு பெரு மின் திட்ட தகுதி சான்றிதழ் (Mega Power Status) கிடைக்கும். இந்தத் தகுதியின் அடிப்படையில், வரி விலக்குகள் கிடைக்கப் பெற்று, திட்ட செலவுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மேலும், இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1,600 மெகாவாட் மின்சாரம் முழுமையும் தமிழ்நாட்டிற்கே கிடைக்க வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அதில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
The Udangudi Power Corporation Limited at Thoothukudi District will be implemented, said CM Jayalalithaa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X