For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலெக்டரை விடுவிக்க நக்சல்கள் 3 நிபந்தனைகள்-சத்தீஸ்கர் முதல்வர் தலைமையில் சமரச குழு!

By Chakra
Google Oneindia Tamil News

Alex Paul Menon
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை (32) விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள 8 நக்சல்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்புப் படையினரின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆடியோ கேசட்டை நக்சல்கள் பத்திரிக்கைகளுக்கு அனுப்பியுள்ளனர். ஆனாலும் இந்தக் கடத்தலுக்கு நக்சலைட்டுகளின் எந்தப் பிரிவும் பொறுப்பேற்கவில்லை.

இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற சத்தீஸ்கர் மாநில அரசுக்கு வரும் புதன்கிழமை வரை மாவோயிஸ்டுகள் கெடு' விதித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனன், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாஜிபரா கிராமத்தில் மக்களிடம் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது சனிக்கிழமை கடத்திச் செல்லப்பட்டார். அவருடன் இருந்த இரு பாதுகாவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெண்கள் உள்ளிட்ட சுமார் 50 நக்சல்கள் இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடத்திச் செல்லப்பட்டு 24 மணி நேரம் வரை கலெக்டரின் நிலைமை என்னவென்று தெரியாமல் இருந்தது. இந் நிலையில் அவரை விடுவிக்க 3 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறையில் இருக்கும் 2 பெண்கள் உள்பட 8 மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்; மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பசுமை வேட்டை' என்ற பெயரில் நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்; பஸ்தார் பகுதியில் இருந்து ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட்டு உடனடியாக தங்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும் ஆகியவை அந்த நிபந்தனைகளாகும்.
தங்களது கோரிக்கையை வரும் 25ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

அக்னிவேஷ் தூது செல்லத் தயார்: ஆட்சியர்

இந் நிலையில் கடத்தல்காரர்களிடம் தூது செல்வதற்குத் தயாராக இருப்பதாக ஆன்மிகத் தலைவர் அக்னிவேஷ் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அரசு அல்லது நக்சல்கள் தம்மைக் கேட்டுக் கொள்வதற்காகக் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே எப்போதும் மக்களுக்காகவே பணியாற்றிக் கொண்டிருக்கும் தனது கணவரை விடுவிக்க வேண்டும் என்று ஆட்சியரின் மனைவி ஆஷா மேனன் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறார். அவருக்கு ஆஸ்துமா இருக்கிறது. போதுமான மருந்துகளை அவர் எடுத்துச் செல்லவில்லை. அவசர நிலை ஏற்பட்டால் சமாளிக்க முடியாது. அரசும் நக்சல்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆஷா மேனன் கூறியிருக்கிறார்.

மேனன் கலெக்டராக பணிபுரிந்து வந்த சுக்மா மாவட்டம், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டமாகும். வனப் பகுதியில் மிகவும் பின் தங்கிய குக்கிராமங்களைக் கொண்ட அந்த மாவட்டத்தில், கலெக்டர் பால் மேனன் சேவை மனப்பான்மையுடன் மக்களின் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தார்.

கிராம மக்களை தீவிரவாதிகளின் பாதையில் இருந்து விலகச் செய்வதற்கான மக்கள் தொடர்பு முகாம், சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளில் பால் மேனன் ஆர்வத்துடன் பங்கேற்றார். துணிச்சலான அதிகாரியான அவர், சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கும்கூட பாதுகாப்பை பொருட்படுத்தாமல் சென்று வந்தார்.

நேற்று முன்தினம் அவர் கடத்தப்பட்ட மஜிபுரா கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏறத்தாழ 15 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில்தான் அவர் சென்றார். பெண்கள் உள்பட மாவோயிஸ்டு தீவிரவாதிகள், நிகழ்ச்சி நடந்த இடத்தில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, கலெக்டர் பால் மேனனை கடத்திச் சென்று விட்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதவி கலெக்டர் வைத்யா மற்றும் அதிகாரிகள், அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமுக்கு சென்று புகார் செய்த பின்னர்தான் கடத்தல் சம்பவம் வெளியில் தெரிந்தது.

பாஜக ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமன் சிங், கலெக்டரை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். சுக்மா மற்றும் தண்டேவாடா மாவட்ட வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

பஸ்தார் பிராந்திய பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருப்பதுடன், அண்டை மாவட்டங்களான ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பஸ்தார் பிராந்திய நக்சல் குழு தலைவர் விஜய் என்று அறிமுகம் செய்து கொண்ட ஒருவர் பத்திரிகையாளர்களுடன் போன் மற்றும் இ-மெயில் மூலம் நேற்று தொடர்பு கொண்டார்.

அப்போது அவர், ராய்பூர் சிறையில் உள்ள 8 தலைவர்களுடன் தண்டேவாடா மற்றும் ஜெகதல்பூர் சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்ததா தகவல் வெளியாகியுள்ளது.

கலெக்டர் பால் மேனனுக்கு கடந்த அக்டோபர் மாதம்தான் திருமணம் நடந்தது. தற்போது அவரது மனைவி ஆஷா கர்ப்பிணியாக உள்ளார்.

மேனனை மீட்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே நக்சல்களுடன் பேச்சு நடத்தி மேனனை மீட்க முதல்வர் ரமன் சிங் தலைமையில் ஒரு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இதில் முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் நன்கி ராம் கன்வர், பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் கேதர் காஷ்யப், நீர்வளத்துறை அமைச்சர் ராம்விசர் நேதம், கல்வித்துறை அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

English summary
The Chhattisgarh government has decided to appoint a sub-committee under the chairmanship of chief minister Raman Singh to look into the abduction of Sukma district collector Alex Paul Menon. Official sources said that an emergency meeting was called by the chief minister at his residence 
 on Sunday evening, following reports about the April 25 deadline set by the Naxals who demanded release of their eight colleagues in exchange of the IAS officer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X