For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1006 ஜோடி திருமண விழாவில் ஜெ. சொன்ன ஆடு-மாடு கதை!

Google Oneindia Tamil News

சென்னை: திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் இன்று 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த முதல்வர் ஜெயலலிதா சுவாரஸ்யமான ஆடு-மாடு கதை ஒன்றைக் கூறி மணமக்களுக்கு அறிவுரை கூறினார்.

சென்னை அருகே திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் இன்று 1006 ஜோடிகளுக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்திற்குப் பின்னர் அவர் சிறப்புரையாற்றினார். அப்போது வழக்கம் போல சுவாரஸ்யமான கதை மூலம் மணமக்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

ஜெயலலிதா சொன்ன கதை:

ஒரு ஊரில் வேலை வெட்டி இல்லாத ஒருவன்...

ஓர் ஊரில் வேலைவெட்டி இல்லாமல் ஒருவன் இருந்தான். அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மனைவியும் வந்து சேர்ந்தாள். ஒரு நாள் மனைவி, தனது கணவனைப் பார்த்து, "சும்மாவே உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களே? சம்பாதிக்கிற வழியைப் பாருங்கள்" என்றாள்.

உடனே கணவன், "அது பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தேன். ஒரு அருமையான திட்டம் எனது மனதில் உதித்துவிட்டது" என்று கூறினான். "என்ன திட்டம்?" என்று ஆவலோடு வினவினாள் அவனது மனைவி.

"ஓர் ஆட்டுக்குட்டி வாங்கப் போகிறேன்" என்றான் கணவன். "சரி" என்றாள் மனைவி. "அதற்கான பணத்தை நீ தான் உன் அப்பாவிடம் கடனாக வாங்கித் தர வேண்டும். நான் மானஸ்தன். எனக்கு ஒன்றும் இனாமாக வேண்டாம். கடன் கொடுத்தால் போதும்" என்றான்.

"ஆட்டுக்குட்டியை வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றாள் மனைவி. அதற்கு கணவன், "அந்தக் குட்டி வளரும். பிறகு நிறைய குட்டிகள் போடும்" என்றான். "பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டாள் மனைவி.

"அதையெல்லாம் சந்தையிலே கொண்டு போய் விற்றுவிட்டு, அந்தக் காசுக்கு ஒரு பசு மாடு வாங்குவேன்" என்றான் கணவன். "அது எதற்கு?" என்று கேட்டாள் மனைவி.

எங்க அம்மா வீட்டுக்கும் பால் கொடுத்தனுப்பலாம்...

"பசு மாடு நிறைய பால் கொடுக்கும். அதைக் கொண்டு போய் பால் பண்ணையிலே கொடுத்தால் நிறைய காசு கிடைக்கும். பாலையும் விற்கலாம், நாமும் காபி சாப்பிடலாம்; உடல் நலம் இல்லாத எனது தந்தைக்கு குடிக்க பால் கொடுக்கலாம்" என்றான் கணவன்.

உடனே மனைவி, "அடுத்த தெருவில் இருக்கும் எங்க அம்மா வீட்டிற்கும் கொஞ்சம் பால் கொடுத்தனுப்பலாம்" என்றாள். உடனே, கணவனுக்கு கோபம் வந்துவிட்டது. "அது எப்படி? உங்க அம்மா வீட்டுக்கு எதற்காக கொடுக்கணும்? அதெல்லாம் முடியாது." என்றான்.

இந்த இடத்தில் சண்டை ஆரம்பமாகிவிட்டது. இரண்டு பேரும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள்.

கடுமையாக சண்டை நடப்பதை அறிந்து, பக்கத்து வீட்டுக்காரன் ஓடி வந்தான். இவர்கள் இருவரும் வாங்காத மாட்டிற்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

இருப்பினும், சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் - மனைவியைப் பார்த்து, "உன் மாடு என் தோட்டத்தில் மேய்ந்து பயிரை எல்லாம் நாசப்படுத்திவிட்டது. பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நீ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்." என்று கூறினான்.

என்ன உளர்றே...

இதைக் கேட்டு அரண்டு போன கணவன், பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்து, "நான் இன்னும் மாடே வாங்கவில்லை. உனக்கு தோட்டமே இல்லை. மாடு எப்படி உன் தோட்டத்தில் மேயும்? என்ன உளர்றே?" என்று கேட்டான்.

உடனே பக்கத்து வீட்டுக்காரன், "நீ தான் உளறுகிறாய். மாடே வாங்காமல் எப்படி உன் மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு பால் கொடுத்தனுப்ப முடியுமோ; அதே போலத்தான் அந்த மாடு இல்லாத என் தோட்டத்திலும் மேய்ந்தது" என்றான்.

அப்போதுதான் கணவனுக்கு புத்தி வந்தது. அர்த்தமே இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோமே, என்பதை உணர்ந்தான். இல்லாத விஷயத்திற்கு சண்டை போட்டுக் கொண்டு, இல்லறத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிற மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதைத் தான் இக்கதை நமக்கு உணர்த்துகிறது.

காலையில் சவால் .. மாலையில் ஜகா...

வாழ்க்கையே ஒரு சவால் தான். அதுவும் திருமண வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது தான். இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் துணிவையும், தெளிவையும் நீங்கள் பெற வேண்டும். சவால்களை எதிர்கொள்வதிலிருந்து விலகி ஓடும் மனிதர்களை விட எதிர்த்து நின்று போராடும் மனிதர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். சவால்களை கண்டு அஞ்சுபவர்களை சமூகம் கண்டு கொள்வதில்லை. சவால்களை துணிச்சலுடன் சந்திக்கும் நபரைத் தான் சமூகம் வரவேற்கும்.

ஆனால், காலையிலே மேடையில் சவால் விட்டுப் பேசி, மாலையிலே "ஜகா" வாங்குபவர்களை சவடால் பேர்வழிகள் என்று தான் உலகம் சொல்லும்.

சந்திக்க வேண்டிய சவால்களை அடையாளம் கண்டு, அவற்றை துணிவுடன் எதிர்கொள்ள நீங்கள் முடிவெடுத்துவிட்டால், அதற்கான வழிமுறைகள் தானாக தோன்றும். துன்பங்களை கண்டு துவண்டுவிடும் கோழைத்தனத்தை விட எதிர்த்துப் போராடும் துணிவே நம்மை வாழ வைக்கிறது. இதைப் புரிந்து கொண்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதைத் தெரிவித்து;

கண்ணும் இமையும் போல வாழ்க...

இன்று இல்லற வாழ்வில் இணைந்துள்ள அனைவரும் கண்ணும் இமையும் போல், நகமும் சதையும் போல், நிலவும் வானும் போல், கடலும் அலையும் போல், எண்ணும் எழுத்தும் போல், மொழியும் கருத்தும் போல் ஒற்றுமையுடன் வாழ்ந்து, பதினாறு செல்வங்களையும் பெற்று, தேனின் இனிமை போலவும், தமிழின் சுவை போலவும், வீணையின் நாதம் போலவும், நாடும் வீடும் சிறக்க பல்லாண்டு வாழ்க! வாழ்க! என நெஞ்சார வாழ்த்துகிறேன் என்றார் ஜெயலலிதா.

English summary
Chief Minister Jayalalitha advised the newly married 1006 couples with a story after she conducted the free marriage to them in Thiruverkadu Karumariamman temple this morning.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X