For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகள் உடைப்பு: வைகோ, தா.பாண்டியன், திருமா, சீமான் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

Statues
சென்னை: டாக்டர் அம்பேத்கர் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் ஆகியோரின் சிலைகள் உடைக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதுரை விமான நிலையத்துக்கு அருகே பெருங்குடி கிராமத்தில் அமைந்திருந்த அம்பேத்கர் சிலையும், சின்ன உடைப்பு கிராமத்தில் இமானுவேல் சேகரன் சிலையும் உடைக்கப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சி தருகிறது. இந்த சம்பவத்துக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

தென்மாவட்டங்களில் நிலவி வரும் அமைதியையும், சமூக ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நோக்கத்தோடு அக்கிரமத்தை, அராஜகத்தை செய்து உள்ளனர். காவல் துறையினர் அவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கேடான செயலை ஒரு சிலர் புரிந்துள்ள போதும் பகையும், கசப்பும் மனதில் ஏற்பட்டுவிடாமல் அனைவரும் சமூக ஒற்றுமையை காக்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை விமான நிலையம் செல்லும் வழியிலுள்ள பெருங்குடியிலிருக்கும் டாக்டர் அம்பேத்கர் சிலையும், சின்ன உடைப்பிலிருக்கும் இமானுவேல் சிலையும் சமூக விரோத சக்திகளால் உடைக்கப்பட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கின்றது. இச்சமூக விரோத செயலில் ஈடுபட்டுள்ள சக்திகளை உடனே கைது செய்திட தமிழக காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும். தலைவர்களின் தியாகத்தை போற்றும் வண்ணம் சிலைகள் அமைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகின்றது.

இத்தகைய சிலைகளை அரசியல், சாதி, மத வேறுபாடின்றி பாதுகாப்பதும், மரியாதை செலுத்துவதும் அனைவரின் கடமையாகும். சிலைகளை உடைப்பது மூலம் மக்களிடையே சாதி மோதல்களை உருவாக்கி அதன் மூலம் ஆதாயம் தேடும் உள்நோக்கத்துடன் ஈடுபட்டுள்ள சுயநல சக்திகளின் ஆத்திரமூட்டும் செயலுக்கு இரையாகாமல் அமைதி காக்குமாறு பொது மக்கள் அனைவரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுகொள்கின்றது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை, பெருங்குடியில் விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையினையும், பெருங்குடிக்கு அருகேயுள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் அம்பேத்கர், தியாகி இம்மானுவேல் சேகரன் சிலைகளையும் சமூக விரோதக் கும்பல் 7-8-2012 அன்று உடைத்து சேதப்படுத்தியுள்ளது. சமூக அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் சீர் குலைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ள ஆதிக்க சாதிவெறிச் சக்திகளை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

தாழ்த்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோரல்லாதோருக்கும் இடையில் மோதலை உருவாக்குவதற்கு ஏதோ ஒரு சதிக்கும்பல் திட்டமிட்டு இதில் ஈடுபட்டுள்ளது. சாதி மோதல்களினால் ஏழை எளிய அப்பாவி மக்கள் -குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள்- கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக உள்ளது.

அம்பேத்கர் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலைகளை உடைத்து சாதி வன்முறைகளுக்கு வித்திட்டிருக்கிற சாதி வெறிபிடித்த சமூக விரோதிகளைக் கைது செய்வதற்கு மாறாக, தமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிற தாழ்த்தப்பட்ட மக்களைக் கட்டுப்படுத்துவதில்தான் காவல்துறையும், அரசும் முனைப்புக்காட்டி வருகின்றன.

இத்தகைய போக்கைக் கைவிட்டு திட்டமிட்டே சாதி வன்முறைகளைத் தூண்டும் சதிக்கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டியதும், அத்தகைய வன்முறைகள் வருங்காலத்தில் நிகழாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் சமூகப் பொறுப்புள்ள ஓர் அரசின் கடமையாகும்.

எனவே தமிழக அரசு உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடியில் சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் இமானுவல் சேகரன் ஆகியோரின் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட சிலை உடைப்பு சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக முற்றிலுமாக இல்லாத நிலையில், இப்போது மீண்டும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்திருப்பது தமிழர்களிடையே சாதியின் அடிப்படையில் மோதலை மூட்டிவிடும் திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செயலாகும். இச்சம்பவத்திற்குக் காரணமான சாதிய வெறியையும், சாதிய அரசியலையும் காப்பாற்றிக்கொள்ளும் சக்திகளை அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தமிழினம் பல்வேறு வழிகளில் ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கப்பட்டு வரும் அரசியல் சூழலில், ஓரினமாக நின்று பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய தமிழர் சமூகத்தை உள்ளிருந்தே பலவீனப்படுத்தும் நடவடிக்கையே இந்தச் சிலை உடைப்புகளாகும்.

இதனை தமிழர்கள் சரியாக புரிந்து கொண்டு இப்படிப்பட்ட சதி செயல்களில் ஈடுபடும் சாதி வெறியர்களை இனம் கண்டு புறந்தள்ள வேண்டும். தமிழினத்தின் விடுதலையை, உரிமைகளை வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தமிழர் எனும் ஏக உணர்வோடு நமது மக்கள் பேரெழுச்சியுடன் ஒன்று திரண்டுவரும் தருணத்தில், அதனை உடைக்க இப்படிப்பட்ட சம்பவங்களை ஏற்படுத்துகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இதனை இன உணர்வோடு தமிழர்கள் ஒன்றுபட்டு வேரறுக்க வேண்டும்.

நாம் மதித்துப் போற்றும் தலைவர்களின் சிலைகளை சமூக விரோத சக்திகள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் சிதைப்பதையும், அதன் மூலம் சமூக அமைதியை கெடுப்பதையும் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு தடுத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

நம்மால் நன்றியுடன் போற்றப்படும் தலைவர்களின் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுடன், தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காக்களில் நிறுவி, அதன் மூலம் அவைகள் எப்போதும் பொதுமக்களின் பார்வையிலும், காவல் துறையின் பாதுகாப்பிலும் இருக்குமாறு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

சாதிகளை கடந்து தமிழர்களாய் ஒன்றிணைந்து தமிழ்ச் சமுதாயம் தழைக்கும் பாதையில் பயணிக்க அனைவரையும் இந்நேரத்தில் நாம் தமிழர் கட்சி வேண்டி நிற்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Political leaders Vaiko, Tha. Pandian, Thiruma Valavan and Seeman condemned the vandalisation of Ambedkar and Immanuel Sekaran statues in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X