For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகாசி வெடிவிபத்து: நீதி விசாரணைக்கு ஜெ. உத்தரவு- உயர்நிலை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சிவகாசி பட்டாசு ஆலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விவத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

விருதுநகர் அருகே முதலிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற மூத்த அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, நிதித் துறை செயலாளர் க.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விபத்து நடந்த தொழிற்சாலைக்கு நாகபுரியில் உள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி 2006ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளார். அந்த ஆலையில் ஆகஸ்ட் 28ம் தேதி ஆய்வு நடத்தப்பட்டது. சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் மண்டல இயக்குநர் ஆய்வு செய்தபோது, அங்கு அளவுக்கு அதிகமாக ரசாயனப் பொருள்கள் இருப்பு, அளவுக்கு அதிகமான பணியாளர்கள், பாதுகாப்புக்காக விடப்பட வேண்டிய இடங்களில் ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு விதிமீறல்கள் இருந்தது சுட்டிக்காட்டப்பட்டு அந்த ஆலைக்கான அனுமதி கடந்த 4ம் தேதி ரத்து செய்யப்பட்டது.

இந்த உத்தரவின் நகல் கடந்த புதன்கிழமை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவரால் பெறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நடைபெற்ற விரிவான விவாதத்துக்குப் பிறகு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

விபத்து நிகழ்ந்த பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை பட்டாசுத் தொழிற்சாலை இயங்கியது குறித்தும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் மாவட்ட வருவாய் அலுவலர் நீதி விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகாசி அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ.4.5 கோடி ஒதுக்கீடு: சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவை மேம்படுத்த ஏற்கனவே தமிழக அரசால் ரூ.1.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீக்காயப் பிரிவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, பிசியோதெரபி, மறுவாழ்வுப் பிரிவு ஆகியவற்றை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தீக்காயப் பிரிவை உயர் சிகிச்சை மையமாக மாற்றி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

இதுபோன்ற வெடி விபத்து துயரச் சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்கும் வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளையும் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நிலை விசாரணை:

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மத்திய தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

விபத்தின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு வெடிமருந்து சட்டத்தின்படி உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. மத்திய தொழிற்துறை கொள்கை விவகாரங்களுக்கான இணைச் செயலர் சைதன்ய பிரசாத் இந்த விசாரணையை நடத்துவார்.

சிவகாசியில் உள்ள வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதன்கிழமை மாலையில் இருந்து சம்பவ இடத்தில் உள்ளனர். வெடிமருந்து தலைமைக் கட்டுப்பாட்டாளரும் இணை கட்டுப்பாட்டாளரும் சம்பவ இடத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Centre has ordered an inquiry by a senior IAS officer into the gruesome tragedy at a fireworks manufacturing unit near Sivakasi in Tamil Nadu that claimed 38 lives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X