For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நில அபகரிப்பு வழக்கு: தலைமறைவாக உள்ள நேருவை வலைவீசி தேடும் போலீசார்

Google Oneindia Tamil News

திருச்சி: நிலஅபகரிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, விஜயலட்சுமி, செல்வராஜ் ஆகியோரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்காக திருச்சியில் உள்ள நேருவின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

திருச்சி மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இவர் மீது ஏற்கனவே திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்காக நிலம் அபகரிப்பு செய்ததாகவும், பொன்மலை, கே.கே.நகர் மற்றும் தஞ்சையில் நிலம் அபகரிப்பு செய்ததாகவும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் தனி தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேற்கண்ட வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட கே.என்.நேரு தற்போது ஜாமீன் பெற்று வெளியே உள்ளார். மேலும் நேரு மற்றும் அவரது மனைவி சாந்தா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சி ஊழல் தடுப்பு தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்த சகுனவேல் என்பவர் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரியிடம் கடந்த 25ம் தேதி ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

எனக்கும், எனது உறவினர்களுக்கும் சொந்தமான 17 ஏக்கர் விவசாய நிலத்தை கீழப்பழூரை சேர்ந்த துரைசாமி ரெட்டியார் மகன் செல்வராஜ், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோருக்கு விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்து ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஆனால் ஒப்பந்தம் செய்த காலக்கெடு முடிவிற்குள் செல்வராஜ் அந்த நிலத்தை வாங்கி கொள்ளவில்லை. இதனால் இனி அந்த நிலத்தை விற்பனை செய்ய முடியாது என்று நான் செல்வராஜிடம் கூறினேன்.

உடனே செல்வராஜூம், அவரது மனைவியும் சில ஆட்களை அழைத்து கொண்டு வந்து, நாங்கள் கே.என்.நேருவின் உறவினர்கள். ஒப்பந்தம் செய்து கொண்டபடி அந்த நிலத்தை எங்களுக்கு எழுதி கொடுக்க வேண்டும் என்று என்னையும், எனது குடும்பத்தினரையும் மிரட்டி எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நிலங்களை மார்க்கெட் மதிப்பை விட குறைத்து மதிப்பீடு செய்து கீழப்பழூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டனர்.

அந்த நபர்கள் முன்னாள் அமைச்சர் நேருவின் தூண்டுதலின் பேரில் ரூ.5 கோடி மதிப்புள்ள எங்களது சொத்திற்கு ரூ.50 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு எனது குடும்பத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி கட்டாயப்படுத்தி அபகரித்து கொண்டனர். இது குறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கீழப்பழுரை சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அரியலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முன்னாள் அமைச்சர் நேரு, செல்வராஜ், அவரது மனைவி ஆகியோர் மீது 294(பி)-வாய்த்தகராறு, 383-பயமுறுத்தி சொத்துக்களை அபகரித்தல், 415-ஏமாற்றுதல், 423-ஏமாற்றி ஆவணங்களை மாற்றுவது, 463-ஆவணங்களை திருத்துவது, 464-நஷ்டம் ஏற்படுத்துவது, 506(1)-மிரட்டல், உயிருக்கு ஆபத்து விளைவித்தல் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, செல்வராஜ், விஜயலட்சுமி ஆகியோர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய அரியலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

தனிப்படை போலீசார் நேற்று 2 வாகனங்களில் திருச்சிக்கு வந்தனர். தில்லை நகர் 10வது குறுக்கு தெருவில் உள்ள கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சென்ற போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு கே.என்.நேரு இல்லாததால், வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

திருச்சி நீதிமன்றத்தில் நேற்று சொத்து குவிப்பு வழக்கில் கே.என்.நேரு நேற்று ஆஜராக வேண்டியிருந்தது. இதனால் அப்போது கைது செய்யலாம் என்று போலீசார், நீதிமன்றத்தில் காத்திருந்தனர். ஆனால் நேற்று சொத்து குவிப்பு வழக்கில் நேரு ஆஜராகவில்லை.

இந்த நிலையில் கைது செய்யாமல் இருக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கே.என்.நேரு தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

English summary
Ariyalur Sakunavel has given a land grabbing case against K.N.Nehru and his relatives. So former minister K.N.Nehru is in police search. Police searched him in his Trichy office and house. But failed to get information about where he is.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X