For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் அணு உலை.. ரஷ்யாவுக்கு விலக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்காமல் இருக்க ரஷ்ய நிறுவனத்துக்கு விலக்கு அளித்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி இந்திய அணுசக்தித் துறைக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் ஜி. சுந்தர்ராஜன், பிரசாந்த் பூஷண் ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெயந்த் பூஷண், நீதிபதிகள் முன் வைத்த கருத்துக்கள்:

"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி நிபுணர் குழு அளித்த 17 பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றிய பிறகே யுரேனியத்தை நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தான் இந்திய அணுசக்தித் துறையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது கூறியது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது, அவசர, அவசரமாக யுரேனியம் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான அவசியம் என்ன?

அணு உலைப் பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றும் நடவடிக்கையை ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது. அதைப் பகுதி, பகுதியாக நிறைவேற்ற ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்றும் அணுசக்தித் துறை கூறுகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படுவது அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் அப்பாவிப் பொது மக்கள்தான்.

பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்ற கோடிக்கணக்கில் மக்களின் வரிப் பணத்தை மத்திய அரசு செலவிட்டு வருகிறது. அப்படியென்றால், கோடிக்கணக்கில் செலவு செய்து மிகக் கவனமாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாகத்தானே அர்த்தம்.

அதனால், மக்களின் உயிரைப் பணயம் வைத்துப் பகுதி, பகுதியாக பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றும் மத்திய அரசின் போக்கை ஏற்றுக் கொள்ள முடியாது.

குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பணயம் வைத்து எரிபொருளை நிரப்பும் நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் உயிர் மிகவும் மலிவானது கிடையாது.

இந்தத் திட்டத்துக்காக 1989-ம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த தடையில்லா சான்றிதழ், 1994-ம் ஆண்டில் அதே அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி காலாவதியான சான்றிதழாகக் கருதப்படுகிறது.

அதன்பிறகு புதிய தடையில்லா சான்றிதழைப் பெறாமலேயே கூடங்குளத்தில் அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது.

இதுமட்டுமன்றி, கூடங்குளம் அணு உலையின் இரண்டாவது திட்டத்தில் அணு விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் இருக்க ரஷ்ய நிறுவனத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சலுகை எந்த அடிப்படையில் ஏன் வழங்கப்பட்டது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை' என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதி, "கூடங்குளம் அணு உலைப் பாதுகாப்பு தொடர்பாக எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் மனுதாரர் எழுப்பும் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

இதையடுத்து, அவரது தரப்பு வாதத்தையும் விளக்கத்தையும் அக்டோபர் 16-ம் தேதியன்று முன் வைக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர். கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்காமல் இருக்க ரஷ்ய நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட விலக்கு குறித்து மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
The Supreme Court Thursday issued notice to the central government on a PIL challenging the exemption to Russia from any liability under the nuclear liability act in the event of any accident in Unit 1 and 2 of the Kudankulam Nuclear Power Plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X